
பட்டுப்புழு குடம்பிகளுக்கு முசுக்கொட்டை இலைகள் உணவாகக் கொடுக்கப்படுகிறது. குடம்பிகள் நான்காவது உருமாற்றத்திற்குப் பின் அருகே உள்ள கிளைகளில் ஏறி கூட்டுப் புழுக்களை உருவாக்குகின்றன. இந்த இளம் கூட்டுப்புழுவின் தலையிலிருக்கும் இரு உமிழ்நீர்ச் சுரப்பிகள் வழியாக இழைப்புரதம், புரதம் கொண்ட பட்டு இழை உருவாகிறது. இந்தப் பட்டு இழையானது செரிசின் என்ற பசையின் மூலம் பிணைக்கப்பட்டிருக்கும். இந்தக் கூட்டை சுடுநீரில் இட்டு செரிசினை நீக்கி பட்டு இழையை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கின்றனர். இவ்வாறு சுடுநீரில் இடுவதால் பட்டுக் கூட்டுப்புழு இறக்க நேரிடுகிறது. ஒவ்வொரு பட்டு இழையும் இறுக்கத்துடன் பின்னப்பட்டு, பட்டுநூல் நூற்கப்படுகிறது. இந்தச் செயல்பாட்டின் போது பல கூட்டுப்புழுக்கள் கொல்லப்படுவதால், உயிரின ஆர்வலர்கள் பலரும் இச்செயலை எதிர்க்கின்றனர்.
நம் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களும், 'எந்த உயிரினத்தையும் வதைக்காமல் அகிம்சை வழியில் கூட்டுப்புழுக்களை வேக வைக்காமல் பட்டெடுத்து அகிம்சைப் பட்டு உற்பத்தி செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினார். மகாத்மா காந்தியடிகள் குறிப்பிடும் ‘அகிம்சைப் பட்டு’ என்றால் என்ன...?
பொதுவாக, பட்டு அறுவடைக்குப் பட்டுப் புழுக்கள் அவற்றின் கூட்டுப்புழுப் பருவத்தில் கொல்லப்பட வேண்டும். ஆனால் அகிம்சைப் பட்டு முறையில், பட்டுப்புழுவின் உருமாற்றத்தை அந்துப்பூச்சி நிலை வரை அனுமதித்து, பட்டுக் கூடுகள் அறுவடை செய்யப்படுகின்றன. அகிம்சைப் பட்டு உற்பத்தியில் எந்த உயிர்களும் பாதிக்கப்படுவதில்லை அல்லது கொல்லப்படவில்லை.
உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்க விரும்பாவதவர்களின் தேர்வாக, அகிம்சை பட்டு இருக்கிறது. அகிம்சைப் பட்டில், ‘எரி பட்டு’ (ERI SILK) என்பது அனைத்துத் தரப்பினரும் ஏற்றதாக இருக்கிறது. இந்தியாவில் எரி பட்டு என்பது, பட்டுப்புழுவைக் கொல்லாதபடி அகிம்சை வழியில் தயாரிக்கப்படுகிறது.
எரிப்பட்டு ஒரு முக்கிய நார். மற்ற பட்டுப் போல் இல்லாமல் தொடா்ச்சியான இழைகளாக உள்ளது. இதன் நூல் அமைப்பு, கடினமானது மற்றும் சிறந்ததும் ஆகும். எரி பட்டு மற்ற பட்டை விட அடர்ந்த நிறம் கொண்டது. மேலும், கனமான தன்மையைக் கொண்டது. இதன் வெப்பப் பண்புகள் காரணமாக குளிர்காலத்தில் சூடாகவும், கோடைகாலத்தில் குளிர்ந்தும் இருக்கிறது.
தாய்லாந்தில் எரி பட்டின் வெப்பப் பண்புகளால் சால்வைகள், ஜாக்கெட்டுகள், போர்வை மற்றும் படுக்கை விரிப்புகள் போன்றவைகளுக்குப் பயன்டுத்தப்படுகிறது. மேலும் அதன் மென்மையான அமைப்பால் குழந்தைகளுக்கான உடைகள் தயாரிக்கப்படுகிறன.
இந்தப் பட்டு, அகிம்சை பட்டாக இருப்பதால், இந்தியா, பூட்டான், நேபாளம், சீனா மற்றும் ஜப்பானில் உள்ள புத்த சமயப் பிக்குகள் இதனை விரும்பி அணிகின்றனா்.
புத்த மற்றும் சமண சமயக் கொள்கைகளின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமின்றி, காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள், அனைத்து உயிரினங்களின் மீதும் பற்றுதல் கொண்டவர்கள் என்று அனைவரும் அகிம்சை பட்டுகளில் ஒன்றான ‘எரி பட்டு’ நூல் கொண்டு நெய்யப்பெற்ற ஆடைகளை அணியலாம். எரி பட்டு நூல்கள் கொண்டு உருவாக்கப்பெற்ற திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டு பொருட்களைப் பயன்படுத்தலாம்.