
‘ஒன்றே முக்கால் அடியாலே
உலகந் தன்னைக் கவர்ந்ததுவாம்!
அன்றும் இன்றும் என்றென்றும்
அருமை பெருமை உடையதுவாம்!
உள்ளந் தூய்மை உற்றிடவும்
உயரிய நன்மை பெற்றிடவும்
தெள்ளத் தெளிவாய் உதவுவது
திருக்குறள் திருக்குறள் திருக்குறளே!’
என்று போற்றப்படும் திருக்குறள் ஒரு தெய்வ நூல் என்றும், அதனை எழுதிய திருவள்ளுவர் ஒரு தெய்வப் புலவர் என்றும் அழைக்கப்படுகிறார். வேறு எவருக்கும் தெய்வப் புலவர் அடைமொழி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. ‘உலகப் பொது மறை’ என்று புகழப்பெறும் இந்நூல் உலகின் பல மொழிகளிலும் ஆக்கம் செய்யப்பட்டுள்ளதில் இருந்தே இதன் அருமையையும், அற்புதத்தையும் உணரலாம்.
அரசனோ, ஆண்டியோ, இல்லறவாசியோ, துறவு பூண்டவரோ, வேளாண்மை செய்பவரோ, வேறு தொழில்களில் கோலோச்சுபவரோ, இப்படி எல்லா நிலையிலும் உள்ள மக்கள் வாழ்வாங்கு வாழ வழி சொன்னவர் தெய்வப் புலவர் என்றால் அது முழுவதும் அப்பழுக்கற்ற உண்மையே!
‘கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்’ என்று புகழ்வார் இடைக்காடர்.
பெண்பாற் புலவர் ஔவையாரோ அதற்கும் மேலே போய்,
‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்’
என்று விஞ்ஞானத் தொடர்புடன், வியப்பு மிகுந்திடப் புகழ்வார்!
அறம், பொருள் இன்பம் என்ற மூன்று பெரும் பிரிவுகளில், முதலிட அறத்திற்கு 38 அதிகாரங்களையும், இடையில் வரும் பொருளுக்கு 70 அதிகாரங்களையும், இறுதியில் வரும் இன்பத்திற்கு 25 அதிகாரங்களையும் ஒதுக்கி, 1330 குறட்பாக்களால் உலகம் உயர வழி சொன்னவர் உத்தமர் வள்ளுவர்.
பல சிறப்புக்கள் இத்தனிப் பெரும் நூலுக்கு உண்டு.
- சீர்மிகு தமிழின் சிறப்பெழுத்தாம் ‘அ’வில் தொடங்கி, இறுதியெழுத்தாம் ‘ன்’னில் தன் நூலை முடித்த தகைசால் அறிஞர் அவர்.
- இந்நூலின் மொத்த எழுத்துக்கள் 42,194
- 247 இனிய தமிழ் எழுத்துக்களில் 210 ஐ மட்டுமே பெரும்புலவர் உபயோகப்படுத்தியுள்ளார். 37 எழுத்துக்கள் என்னபாவம் செய்தனவென்று தெரியவில்லை.
- அவர் அதிகம் பயன்படுத்தியுள்ள ஒரே எழுத்து ‘னி’ - 1705 முறை.
- குறளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள 2 எழுத்துக்கள் - ளீ,ங
- பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஔ
- வள்ளுவர் பயன்படுத்தியுள்ள இரண்டு மலர்கள் - அனிச்சம், குவளை
- குறள் பயன்படுத்தியுள்ள ஒரே பழம் - நெருஞ்சி
- இடம்பெற்றுள்ள ஒரே விதை - குன்றிமணி
- தெய்வப் புலவர் கூறியுள்ள 2 மரங்கள் - பனை, மூங்கில்
இப்படி இன்னும் பல புதுமைகளைத் தன்னகத்தே கொண்டு இலங்குகிறது,
எல்லா மதத்தினருக்கும் பொது வேதமாகிய திருக்குறள்! இத்தனிப் பெருஞ்சிறப்பு நூலை, ஆங்கிலத்தில் மட்டுமே 40க்கும் மேலானோர் மொழி பெயர்த்துள்ளனராம்!
திருக்குறள் கற்போம்! தெளிந்து வாழ்வோம்!