
கதைகள் என்பது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கலை அம்சம். வாய்மொழி கதைகளில் இருந்து மனதின் வழி வரும் கற்பனைக் கதைகள் வரை அனைத்தும் தாத்தா பாட்டி வழியாக வந்து கொண்டு தான் உள்ளது.
தற்போது கணினி மயமாகிவிட்ட காரணத்தினால் பேண்டசி கதைகள் எனப்படும் மாயாஜாலக் கதைகளுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. ஆனால் எக்காலத்திலும் அழியாத இதிகாசங்களான மகாபாரதம் ராமாயணத்தின் அடிப்படையில் நாம் கற்பனையில் கூறும் கதைகள் வயது வித்யாசமின்றி அனைவரையும் கவரும்.
ஆனால் ஒரு வயதுக் குழந்தைக்கு ராமாயணம் புரியுமா? வயதுக்கேற்றவாறு கதைகளும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தால்தான் நம்மால் கதைகள் மூலம் குழந்தைகளை கவர முடியும். அதுமட்டுமின்றி நாம் சொல்லும் கதைகள் அந்த குழந்தைகளுக்கு புரிந்தால்தான் அதிலுள்ள புத்திமதி அல்லது ஆலோசனையின் படி நடக்க இயலும்.
சரி.. எந்த வயது குழந்தைகளுக்கு எந்த மாதிரியான கதைகள் ஏற்றதாக இருக்கும்.. இதோ சின்ன டிப்ஸ் இங்கு..
முதலில் நாம் எந்த வயது குழந்தைகளுக்கு கதை சொல்லப் போகிறோம் என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு அதற்கேற்ப கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் தாங்கள் பார்க்கும் நபர்கள் அல்லது பொருள்கள் குறித்தான கதைகளை நம்புவார்கள். உதாரணமாக நிலாவைக் காட்டியும் தாத்தா பாட்டி என விருப்பமானவர்களைப் பற்றியும் கதைகளை புனைந்து சொன்னால் சுவாரஸ்யமாக கேட்பார்கள்.
10 வயதுக்கு குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு விலங்குகள், பறவைகள், மற்றும் அஃறிணைப் பொருட்கள் ஒன்றோடு ஒன்று பேசுவதும் தேவதைகளின் மாயாஜாலங்களும் மிகவும் பிடிக்கும். அப்படியான கதைகளை சொல்லி குஷிப்படுத்தலாம்.
10 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நம்மைச் சுற்றி நிகழும் யதார்த்தமான நிகழ்வுகளை கதைகளாக்கி அன்றாட வாழ்வுக்கேற்ப சொல்ல தேர்வு செய்யலாம்..
டீனேஜ் எனப்படும் பதின்பருவ வயதுக் குழந்தைகளுக்கு உத்வேகமூட்டும் தன்னம்பிக்கை கதைகளுடன் சாகசம், ஆளுமைகள், சிந்திக்கத் தூண்டும் பகுத்தறிவு, சமூக நீதி, அரசியல் கதைகளை சொல்வதன் மூலம் அவர்கள் சிந்தனையைத் தூண்டி உரையாடலை வளர்க்கும் கதைகளை சொல்வது அவர்கள் பொது அறிவுக்கு உதவும்.
குறிப்பாக எந்த வயதுக் குழந்தைகள் என்றாலும் கதைகளை சொல்லும் போது வன்முறை, கொலை போன்ற குற்ற நிகழ்வுகள் வரும் கதைகளை சொல்லக்கூடாது. ஏனெனில் கதை என்றாலும் அதை உண்மை என்று நம்பி ஏமாறும் பருவம் கொண்டவர்கள் சிறுவர் சிறுமியர்.
மேலும் கிராமங்களில் சொல்லப்படும் நாட்டார் கதைகள் மற்றும் கிராமிய கதைகள் அனைத்தும் குழந்தைகளுக்கானது அல்ல என்கிற தெளிவு வேண்டும். சில கதைகள் விதிவிலக்காக குழந்தைகளுக்கானதாக இருக்கலாம் மற்றபடி பெரும்பாலும் அந்தக் கதைகள் பெரியவர்களுக்கானவையாகத்தான் வடிவமைக்கப் பட்டிருக்கும்.
அதே போல் புராண இதிகாச பக்திக் கதைகள் இந்தக் கால மாற்றத்திற்கு ஏற்ப குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். இல்லை எனில் அவை அடிமை மனோபாவத்தை, எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தை உருவாக்கி விடும் வாய்ப்பு உண்டு.
சற்று வளர்ந்த பிள்ளைகளுக்கு நவீன சமூகத்தின் பிரச்சனைகளை குறிப்பாக அறிவியல் மனப்பான்மையை தூண்டுகிற பகுத்தறிவு மற்றும் பாலின சமத்துவம் சார்ந்த கதைகள் போன்றவற்றை சொல்ல வேண்டும்.