
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருவார்கள். நாள் முழுவதும் அவர்கள் உணவு உண்ணாமல் உடலை வருத்தி நோன்பு பின்பற்றி வருகின்றனர். ரமலான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை உணவு எடுத்து கொள்வது இல்லை.
அதுமட்டுமின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் பாராமல் நோன்பு நோற்பது உண்டு. இம்மாதத்தில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு இருப்பது கட்டாய கடமை என்றாலும் வயது முதிர்ந்தோர், பயணம் செல்வோர், நோயாளிகளுக்கு மட்டும் நோன்பு நோற்பதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது . அதேபோல் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்களுக்கும் நோன்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தினமும் இஃப்தார் விருந்துடன் நோன்பை முடிப்பார்கள். தற்போது இஸ்லாமியர்களின் நோன்பு காலம் முடிவுக்கு வர உள்ளது.
புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஈத்-உல்-ஃபித்ர், சந்திரனைப் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டது. மார்ச் 30-ம்தேதி அன்று பிறை தென்பட்டால், இந்தியாவில் ஈத் மார்ச் 31-ம்தேதி அன்று கொண்டாட வாய்ப்புள்ளது. இல்லையென்றால், அது ஏப்ரல் 1-ம் தேதி அன்று ஈத் பண்டிகை கொண்டாடப்படும். எண்ணற்ற கலாச்சாரம் மற்றும் மதத்தின் நிலமான இந்தியாவில், ஈத் பண்டிகை ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரமாண்டமான ஈத் கொண்டாட்டங்களைக் காண, டெல்லி , ஹைதராபாத், லக்னோ, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகியவை இந்தியாவின் சிறந்த இடங்களாக அறியப்படுகிறது. அதாவது இந்த நகரங்களில் பாயும் ஈத் பண்டிகை அதிர்வுகள் முற்றிலும் வேறுபட்டவை. அந்த ஐந்து சிறந்த இந்திய நகரங்களை பற்றி அறிந்து கொள்வோம்.
* நவாப்களின் நகரமான லக்னோ, இந்தியாவில் ஈத் கொண்டாட சிறந்த இடங்களில் ஒன்றாகும், இது கலாச்சார செழுமை, சுவையான உணவு வகைகள் மற்றும் துடிப்பான கொண்டாட்டங்களின் தனித்துவமான கலவைக்கு பெயர் பெற்றது. ஈத் பண்டிகையில் போது பழைய லக்னோ பகுதிகள் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழியும். குறிப்பாக ஈத் பண்டிகையின் போது அதிகளவிலான மக்கள் லக்னோ கபாப்களின் ருசியை அனுபவிக்க இந்த நகரத்திற்கு வருகை தருகின்றனர்.
* டெல்லி, குறிப்பாக பழைய டெல்லி, இந்தியாவில் ஈத் கொண்டாட ஒரு துடிப்பான இடமாகக் கருதப்படுகிறது. பிரார்த்தனை மற்றும் கொண்டாட்டத்திற்கான மையமாக விளங்கும் புகழ்பெற்ற ஜமா மசூதி முழுவதும் ஈத் நாளில் பக்தர்களால் நிரம்பி வழியும்.
இங்கு ஈத் நாளில் அதிகாலையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் 'நமாஸ்' செய்யும் காட்சியை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
* ஹைதராபாத், ஈத் பண்டிகையை கொண்டாட மற்றொரு சிறந்த இடமாக அறியப்படுகிறது. அதுமட்டுமின்றி ஈத் நாளில் இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் நினைவுச்சின்னம் கொண்டாட்டங்களின் மையமாக மாறும். இந்த இடம் கலாச்சார விழாக்கள், சுவையான உணவு வகைகள் மற்றும் வரலாற்று அடையாளங்களின் துடிப்பான கலவையை வழங்குகிறது. இங்கு ஈத் கொண்டாட்டங்களில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து கூடுவதால் இது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாற்றுகிறது.
* மற்ற இடங்களை விட மும்பை அதன் துடிப்பான ஈத் கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்றது. இங்குள்ள அரபிக் கடலின் கரையில் அழகாக நிற்கும் ஹாஜி அலி, புகழ்பெற்ற புனித இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். அதுமட்டுமின்றி இங்குள்ள மசூதிகள் அழகாக ஒளிரும், மேலும் மக்கள் இந்த இடங்களுக்கு பிரார்த்தனை மற்றும் விழாக்களுக்காகவும், சுவையான உணவு வகைகளுக்காகவும் வருகிறார்கள்.
* மகிழ்ச்சியின் நகரம் என்று அழைக்கப்படும் கொல்கத்தா, ஒரு துடிப்பான மற்றும் தனித்துவமான ஈத் அனுபவத்தை வழங்குகிறது. இங்கு ஈத் பண்டிகை கொண்டாட்டங்களுடன் அனைத்து தரப்பு மக்களிடையே வளமான பாரம்பரியத்தை கலக்கிறது. இங்கு ஈத் பண்டிகைக்கு விற்பனை செய்யப்படும் சுவைமிகுந்த உணவுகளுக்காகவே இஸ்லாம் அல்லாத பலதரப்பு மக்களும் இங்கு கூடுகின்றனர். இது கலாச்சாரத்தின் ஒற்றுமையை பறைசாற்றுகிறது.