'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம்' என்பது பழமொழி. அந்த அளவுக்கு மிளகானது நம் உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும் குணம் கொண்டது. மிளகு நம் உடலுக்குத் தரும் 10 வகையான ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. சிறப்பான ஜீரணத்துக்கு உதவுவது: கருப்பு மிளகு வயிற்றில் ஜீரணத்துக்கு உதவக்கூடிய என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இதனால் செரிமானம் சிறந்த முறையில் நடைபெறும்; ஊட்டச் சத்துக்கள் முழுவதுமாக உடலுக்குள் உறிஞ்சப்படும்; ஜீரண மண்டல உறுப்புகளிலுள்ள வீக்கங்கள் மறையும்.
2. கலோரிகள் சிறப்பாக எரிக்கப்படும்: மிளகில் உள்ள பெப்பரின் என்ற செயல் திறன்மிக்க கூட்டுப்பொருளானது, கொழுப்புகளை உடைத்து கலோரிகள் எரிக்கப்படவும், மெட்டபாலிஸ ரேட் அதிகரிக்கவும் உதவி புரியும்.
3. நினைவாற்றல் அதிகரிக்க உதவும்: பெப்பரின், நரம்புகளால் சுரக்கப்படும் நரம்பியக்கடத்தி (Neuro Transmitter)களின் உற்பத்தி அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் மூளையின் ஆரோக்கியம் மேம்பாடடைந்து ஞாபக சக்தி, அறிவாற்றல், வேலையில் கவனம் போன்ற செயல்பாடுகள் கூடுதல் சிறப்படையும்.
4. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: கருப்பு மிளகு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த பெரிதும் உதவும். இதனால் உடலுக்குள் தொற்று நோய்க் கிருமிகள் பரவும் அபாயம் தடுக்கப்படும். சளி போன்ற தொல்லைகளிலிருந்து விடுபட்டு உடல் நல்ல ஆரோக்கியம் பெறும்.
5. மூப்படைந்த தோற்றம் பெறுவதைத் தடுக்கும்: கருப்பு மிளகின் ஆன்டி பாக்டீரியல் குணமானது சருமத்தில் பருக்கள், கருந்திட்டுக்கள், முகப்பரு போன்றவை தோன்றுவதைத் தடுத்து சருமம் ஆரோக்கியமாய் விளங்க உதவி புரியும். மேலும், மிளகில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நடுத்தர வயதிலேயே மூப்படைந்த தோற்றம் தரும் அறிகுறிகளைக் களையவும் உதவும்.
6. வலிகள் குறைய உதவும்: கருப்பு மிளகில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் மூட்டு வலியைக் குறைக்கவும், தசைகள் தளர்வுறுவதைத் தடுக்கவும், நீண்ட நாள் வீக்கங்கள் குறையவும் உதவி புரிகின்றன.
7. சுவாசப் பாதை அடைப்பு நீங்க உதவும்: மிளகு, சுவாசப் பாதையில் சளி, அடைப்பு, சைனஸிடிஸ் போன்ற கோளாறுகளின் அறிகுறிகளை நிவர்த்தி செய்து சுவாசம் இலகுவாக நடைபெற உதவி புரியும்.
8. ஊட்டச் சத்துக்கள் உறிஞ்சப்பட உதவும்: நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து கிடைக்கும் முக்கிய ஊட்டச் சத்துக்களான வைட்டமின் A, C, B12 போன்றவை முழுவதுமாக உடலுக்குள் உறிஞ்சப்பட, மிளகிலுள்ள பெப்பரின் உதவி புரிகிறது.
9. எடைக் குறைப்பிற்கு உதவும்: மிளகு உடலின் வெப்ப உருவாக்கம் (Thermogenesis) மற்றும் மெட்டபாலிஸ செயல்பாடுகளுக்கு சிறந்த முறையில் உதவி புரியும். இதனால் அதிகளவு கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.
10. மன அழுத்தம் குறைய உதவும்: மன நிலையை மகிழ்ச்சியுறச் செய்யும் செரோடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தி அளவை அதிகரிக்க மிளகு உதவி புரியும். மனம் மகிழும்போது, ஸ்ட்ரெஸ், வருத்தங்கள் மற்றும் மனக்கவலைகள் மறைவது இயற்கை.
நமது முன்னோர்கள் தம் தினசரி உணவில் மிளகு ரசத்தை தவறாமல் சேர்த்து உட்கொண்டு வந்ததன் ரகசியம் இதுதான் போல!