

உலகில் மூன்று தலைநகரங்கள் கொண்ட ஒரே நாடு என்ற பெருமை பெற்றுள்ளது. சட்டம், நிர்வாகம், நீதித்துறை அதிகாரங்கள் கேப் டவுன், பிரிட்டோரியா, புளூம்ஃபோன்டைன் நகரங்களுக்கு பகிரப்பட்டுள்ளன; இது அதிகாரம் ஒரே இடத்தில் குவியாமல் தடுக்கிறது.
நிறவெறிக்கு பெயர் பெற்று விளங்கி பின்னர் அடியோடு ஒழிக்கப்பட்டு இயற்கை வளம், பல மொழி பேசும் மக்கள், விலங்குகள் வாழும் காடுகள் என தற்போது சிறந்து விளங்கும் 'வானவில் நாடு 'என்று போற்றப்படும் தென்னாப்பிரிக்கா உலகின் மூன்று தலைநகரங்களைக் கொண்ட ஒரே நாடு என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. அந்த வகையில் மூன்று தலைநகரங்கள் இருப்பதற்கான காரணங்களும் அந்த நகரங்களின் சிறப்புகள் குறித்தும் இப்பதிவில் காண்போம்.
அரசாங்கத்தின் முக்கிய மூன்று தூண்களாக சட்டம் இயற்றுதல், நிர்வாகம் மற்றும் நீதித்துறை இருக்கின்றன. பெரும்பாலான நாடுகள் அந்த நாட்டின் தலைநகரமாக ஒரு நகரைத் தேர்ந்தெடுத்து அந்த நகரில் இந்த மூன்று துறைகளையும் செயல்படுத்தி இருக்கும்.
ஆனால் ஆட்சியும், அதிகாரமும் நாட்டின் ஒரே பகுதியில் குவிந்து விடக்கூடாது என்ற காரணத்தின் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா இந்த மூன்று துறைகளுக்கும் மூன்று நகரங்களை தலைநகரங்களாக கொண்டிருக்கிறது. இத்தகைய தனித்துவமான அதாவது மூன்று தலை நகரங்களைக் கொண்ட ஒரே நாடு என்ற பெருமையை உலகத்திலேயே தென் ஆப்பிரிக்கா தட்டி செல்கிறது.
தென் ஆப்பிரிக்காவின் மூன்று தலைநகரங்கள்
சட்டத் தலைநகரம் கேப் டவுன் (Capetown)
நாட்டின் சட்டங்களை இயற்றும் நாடாளுமன்றம் தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் இயங்குகிறது. இங்கு சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது,மக்கள் பிரதிநிதிகளின் விவாதங்கள் போன்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் இந்த நகரத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
நிர்வாகத் தலைநகரம் பிரட்டோரியா (Pretoria)
பிரிட்டோரியாவில் அரசாங்கத்தின் மைய அலுவலகங்களும், அமைச்சரவையும் அமைந்துள்ளதால் தென் ஆப்பிரிக்கா நாட்டின் ஜனாதிபதி தனது முதன்மையான நிர்வாகப் பணிகளை இந்த நகரத்திலிருந்து கவனிக்கிறார். மேலும் இந்த நகரத்தில் பிற நாடுகளின் தூதரகங்கள் செயல்படுகின்றன. கொள்கை ரீதியான முடிவுகள் எடுக்கும் தலைமையகங்களும் பிரிட்டோரியா நகரத்திலேயே செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
நீதித்துறை தலைநகரம் புளூம்ஃபோன்டைன் (Bloemfontein)
தென்னாப்பிரிக்காவில் `ரோஜாக்களின் நகரம்` என்று அழைக்கப்படும் புளூம்ஃபோன்டைன் நகரத்தில் அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைந்துள்ளது. மிக முக்கியமான சட்ட போராட்டங்களுக்கும் இறுதி தீர்ப்புகளுக்குமான மையமாக திகழும் புளூம்ஃபோன்டைன் எழில் கொஞ்சும் அமைதியான நகரமாக விளங்குகிறது.
மூன்று தலைநகரங்களின் வரலாற்று பின்னணி
1910 ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் வெவ்வேறு மாகாணங்கள் ஒன்றிணைந்து `தென்னாப்பிரிக்க யூனியன்` உருவானது. தலைநகரமாக எந்த ப் பகுதியை தேர்ந்தெடுப்பது என்பதில் கடும் போட்டி நிலவியது. எந்த ஒரு பகுதிக்கும் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்து பாகுபாடு ஏற்பட்டு பிளவு வந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மூன்று தலைநகரங்கள் திட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் அதிகார பகிர்வு மூன்று நகரங்களுக்கும் பிரித்தளிக்கப்பட்டு சமரச திட்டத்தின் படி 3 தலைநகரங்கள் உருவாக்கப்பட்டன.
மண்டேலா முடிவு
தென்னாபிரிக்காவின் சிறந்த தலைவரான நெல்சன் மண்டேலா தலைமையில் 1994 ஆம் ஆண்டு தலைநகரங்கள் திட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக மூன்று தலைநகர முறை அரசு பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து பின்பற்றப்பட்டு வந்தது.
வர்த்தக நகரம் ஜோகன்னஸ் பார்க்
தென் ஆப்பிரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த அரசியலமைப்பு நீதிமன்றம் (Constitutional Court) ஜோகன்னஸ்பர்க் நகரில் அமைந்துள்ளது. மிகப்பெரிய நகரான ஜோகன்ன்ஸ்பர்க் தலைநகர பட்டியலில் இல்லை என்றாலும் அந்நாட்டின் வர்த்தக நகரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதிகாரங்கள் தென்னாப்பிரிக்காவில் பரவலாக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே மூன்று தலை நகரங்கள் செயல்படுகின்றன.
உலக வரலாற்றில் மிகவும் விசித்திரமான நிர்வாக முறையைக் கொண்ட தென்னாப்பிரிக்காவின் அதிகாரப் பகிர்வு மற்றும் அதன் மூன்று தலைநகரங்களின் தனித்துவமான சிறப்புகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, அரசியல் மற்றும் பொது அறிவுச் செய்திகளில் புதிய பார்வையைப் பெறலாம்.