மூர் மார்க்கெட் முதல் பட்டாணி சுண்டல் வரை... மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!

அன்றும் இன்றும் புகழ் பெற்று விளங்கும் சென்னை எதிர்காலத்தில் இன்னும் புகழ் பெற்று விளங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
Madras
Madras
Published on

சென்னை மாநகரத்தின் பழைய பெயர் “மெட்ராஸ்”. “மதராஸ்” என்றும் அழைப்பர். இந்த கட்டுரையினை எழுதும் போது என் நினைவுகள் ஐம்பது வருடங்கள் பின்னோக்கிச் செல்லுகின்றன. என் தந்தையாரின் சொந்த ஊர் சிந்தாதிரிப்பேட்டை. எழுபத்தி ஐந்துகளில் செங்கற்பட்டில் நாங்கள் வசித்துக் கொண்டிருந்த போது பள்ளி விடுமுறைகளில் நான் தவறாமல் செல்லும் ஒரு நகரம் மெட்ராஸ்.

மெட்ராஸில் என்னுடைய உறவினர்கள் திருவல்லிக்கேணியிலும் பெரம்பூரிலும் வசித்துக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு ஊர்களுக்கும் மாறிமாறிச் சென்று விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிப்பது எனது வழக்கம். மேலும் எனது தந்தை வழி உறவினர்கள் அனைவருமே மெட்ராஸ்வாசிகள்தான்.

ஐம்பது வருடங்களுக்கு முன்னால் மெட்ராஸில் அதிக ஜனநடமாட்டம் இல்லை. அன்றைய மாநகரப் பேருந்துகள் “பல்லவன்” என்ற பெயரில் சிவப்பு நிறத்தில் ஆங்காங்கே ஓடிக்கொண்டிருக்கும். அதிலும் அதிக கூட்டமிருக்காது. பெரும்பாலோர் நடந்தே செல்லுவர். பலரும் உபயோகிக்கும் ஒரு வாகனம் சைக்கிள் மட்டுமே.

வசதி படைத்த சிலர் மட்டுமே ராஜ்தூத் மோட்டார் சைக்கிளையோ அல்லது லேம்பி ஸ்கூட்டரையோ பயன்படுத்துவதைக் காணலாம்.

இதையும் படியுங்கள்:
மெட்ராஸ் மாநகரில்... மறைந்து, மறந்து போன அடையாளங்கள்!
Madras

தொடக்கத்தில் கைரிக்க்ஷாக்கள் வழக்கத்தில் இருந்தன. இவை பின்னர் சைக்கிள் ரிக்க்ஷாக்களாக மாறின. இரண்டு மூன்று பேர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் சைக்கிள் ரிக்க்ஷாவைப் பயன்படுத்துவார்கள். முக்கிய சாலைகளில் ஆங்காங்கே இரண்டொரு அம்பாசிடர், பியட் கார்களைப் பார்க்க முடியும்.

அக்காலத்தில் இரவு நேரங்களில் சைக்கிளில் செல்லும் போது டைனமோக்களுக்கு பதிலாக முன்பக்கத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி ஏற்றக் கூடிய விளக்குகளை சைக்கிளின் முன்பக்கத்தில் மாட்டிப் பயன்படுத்துவர். இரவு நேரங்களில் சைக்கிளில் இந்த விளக்கு இல்லாமல் சென்றாலோ அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் விளக்கு அணைந்து போனாலோ போலீஸார் பிடித்து அபராதம் விதிப்பர்.

திருவல்லிக்கேணி அந்த காலத்திலேயே ஜனநெருக்கடி மிகுந்த ஒரு பகுதியாகத் திகழ்ந்தது. நீளமான மற்றும் குறுகலான தெருக்கள், ஒன்றோடு ஒன்று ஒட்டி அமைந்த வீடுகள் என பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் கைபம்புகள் காணப்படும். அன்றாடத் தேவைகளுக்கு மக்கள் இந்த தண்ணீரையே பயன்படுத்துவர். தண்ணீர் பெரும்பாலும் உப்புகரிப்பாகவே காணப்படும். திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜாரில் ஏராளமான பூக்கடைகளும் நாட்டு மருந்து கடைகளும் காணப்படும்.

திருவல்லிக்கேணி மேன்ஷன்களுக்குப் புகழ் பெற்றது. பிழைப்பு தேடி மெட்ராசுக்கு வரும் இளைஞர்களுக்கு சொற்ப வாடகையில் அடைக்கலம் தருவது இத்தகைய மேன்ஷன்கள்தான்.

ஒரு சிறிய அறையில் நான்கைந்து பேர்கள் வரை தங்கிக் கொள்ளுவர். காமன் பாத்ரூம் டாய்லெட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேலை கிடைக்கும் வரை கையில் இருக்கும் சொற்ப காசை வைத்து காலத்தைத் தள்ளுவர். வேலை கிடைத்த பிறகும் திருமணம் ஆகும் வரை மேன்ஷன் வாசம்தான். மெட்ராஸின் ஒரு சிறப்பு என்னவென்றால் கையில் சொற்ப பணம் இருந்தாலும் காலத்தைக் கழித்துவிடலாம். அக்காலத்தில் இரண்டே ரூபாயை வைத்து ஒருநாளைக்கு மூன்று வேளைகள் காபியுடன் சாப்பிடலாம்.

மெட்ராஸ்வாசிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை சகாய விலைக்கு வாங்கச் செல்லும் இடம் மூர்மார்க்கெட். தற்போதைய சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அருகில் இந்த மார்க்கெட் அமைந்திருக்கும். இங்கே கிடைக்காத பழைய பொருட்களே இல்லை எனலாம். வீட்டிற்குத் தேவையான டிரான்சிஸ்டர், டார்ச் லைட், பழைய புத்தகங்கள், குடை, பழைய துணிகள், பொம்மைகள், பழங்காலப் பொருட்கள் மற்றும் நாணயங்கள், கேமிராக்கள், பாடப்புத்தகங்கள் முதல் கதைப்புத்தகங்கள் என எதை வேண்டுமானாலும் பேரம் பேசி மிகக்குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

என்னுடைய சித்தப்பா என்னையும் அவ்வப்போது மூர்மார்க்கெட்டிற்கு சைக்கிளில் டபுள்ஸில் அழைத்துச் செல்லுவார். அங்கே அவருக்குத் தேவையான பொருட்களை சாதுர்யமாக பேரம் பேசி வாங்கிவிடுவார். 1898ல் சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்த சர்.ஜார்ஜ் மூர் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1900 ல் பயன்பட்டிற்கு வந்த மூர் மார்க்கெட் 1985ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருந்தீவிபத்தினால் களையிழந்து போனது ஒரு சோகமான நிகழ்வு.

ஐம்பது வருடங்களுக்கு முன்னால் சென்னை என்பது திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, இராயபுரம், சாந்தோம், பிராட்வே, புதுப்பேட்டை, மயிலாப்பூர், அடையார், சிந்தாதிரிப்பேட்டை, இராயப்பேட்டை, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், வடபழனி என பல பிரபலமான ஊர்கள் சேர்ந்த ஒரு நகரமாக விளங்கியது. பிற்காலத்தில் மெல்ல மெல்ல விரிவடைந்து தற்போது சென்னை ஒரு மாநகரமாக புகழ்பெற்று விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
கோலிவுட் பிறந்த கதை: மெட்ராஸ் எப்படி சினிமா தலைநகரமாக மாறியது தெரியுமா?
Madras

முற்காலத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட தற்போதைய சென்னையில் அக்காலத்தில் இருந்த பாரகன், சாந்தி, தேவி பாரடைஸ், கெயிட்டி, காசினோ, வெலிங்டன், சபையர் முதலான பெரும் புகழ் பெற்று விளங்கின. பாரகன் தியேட்டரில் சிறுவயதில் சினிமா பார்த்த அனுபவம் மறக்க முடியாதது.

வாலாஜா சாலையில் சிறுவர்களுக்கான படங்களைத் திரையிட பிரத்யேகமாக ஒரு திரையரங்கமே இயங்கிக் கொண்டிருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? பிற்காலத்தில் இந்த திரையரங்கம் கலைவாணர் அரங்கமாக மாற்றம் பெற்றது.

“தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்...”

திருவல்லிக்கேணிக்கு விடுமுறைகளில் செல்லும் போது தவறாமல் செல்லும் ஒரு இடம் மெரீனா பீச். அக்காலத்தில் மெரீனா பீச்சில் தற்போது போல கூட்டம் அதிகம் காணப்படாது. அண்ணா சமாதியை ஒட்டிய திறந்த கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து காற்று வாங்குவோம்.

அங்கே விற்பனைக்குக் கிடைக்கும் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் பெரும் புகழ் பெற்றது. சுவையும் அபாராமாக இருக்கும். அதை வாங்கி சாப்பிடாமல் வீட்டிற்குத் திரும்பியதில்லை. சிலர் கடற்கரை மணலில் மூன்று அடி அளவிற்கு பள்ளம் தோண்டி அதில் சுரக்கும் தண்ணீரை ஒரு பிளாஸ்டிக் டம்ளரில் எடுத்து விற்பனை செய்வார்கள். சொற்ப விலைக்குக் கிடைக்கும் இந்த தண்ணீர் உப்புக்கரிக்காமல் அபார சுவையுடையதாக இருப்பது ஒரு வியப்பு.

திருவல்லிக்கேணியை ஒட்டி தற்போது அண்ணா சாலை என அழைக்கப்படும் மவுண்ட்ரோடில் எல்ஐசி கட்டடம் அமைந்துள்ளது. அக்காலத்தில் தமிழ்நாட்டிலேயே மிக உயரமான பதினான்கு மாடிக் கட்டடம் என்று புகழைப் பெற்று பலரால் வியப்புடன் பார்க்கப்பட்ட பெருமை உடையது. மெட்ராஸின் வியப்பான அடையாளங்களில் இதுவும் ஒன்று.

தற்காலத்தில் ஆடை ஆபரணங்கள் முதலான எல்லா பொருட்களும் கிடைக்கும் ஒரு ஊராக தியாகராயநகர் உள்ளது. ஆனால் அக்காலத்தில் துணி வாங்க வேண்டுமென்றால் புரசைவாக்கத்திற்குச் செல்லுவது வழக்கம். புரசைவாக்கத்தில் துணிக்கடைகள் மிகவும் பிரபலமாக இருந்தன.

அதேபோல காய்கறி பழங்கள் வாங்க வேண்டுமென்றால் பிராட்வே பகுதியில் அமைந்திருந்த கொத்தவால்சாவடிக்குத் செல்லுவர். பிராட்வேயில் பூக்கடை என்ற ஒரு பகுதியே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

பிராட்வேயில் என்எஸ்சி போஸ் சாலையில் நகைக்கடைகள் பரவலாக இருந்தன. பிராட்வேயை ஒட்டி அமைந்துள்ள பர்மா பஜார் அக்காலத்தில் பெரும் புகழ் பெற்று விளங்கியது. வெளிநாட்டுப் பொருட்கள் எது வாங்க வேண்டுமென்றாலும் இங்கே தான் செல்ல வேண்டும்.

தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பிழைப்பு தேடி தன்னிடம் வந்து அடைக்கலமானவர்களுக்கு தங்க இடமளித்து உழைக்க வேலை கொடுத்து உயர வாய்ப்பளித்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி தலை நிமிர்ந்து நடக்கச் செய்த பெருமை மெட்ராஸ் என்று செல்லமாக அழைக்கப்பட்ட சென்னைகே உரிய சிறப்பு.

இதையும் படியுங்கள்:
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!
Madras

இன்றும் தொய்வில்லாமல் சென்னை இந்த அழகான மகத்தான பணியினைச் செய்து வருகிறது என்பது வியப்பு. அன்றும் இன்றும் புகழ் பெற்று விளங்கும் சென்னை எதிர்காலத்தில் இன்னும் புகழ் பெற்று விளங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com