
அருங்காட்சியகங்கள் அரிய கலை மற்றும் கலாச்சாரப் பொருட்களைப் பாதுகாத்து வரும் பொக்கிஷ அறைகளாகும். அவை ஒவ்வொரு தேசத்தின் பழங்கால சின்னமாகவும் திகழ்கின்றன. வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றி மக்களுக்கு கற்பிக்கவும் பயன்படுகின்றன. இந்தப் பதிவில் உலகின் மிகப் பழமையான முதல் அருங்காட்சியகம் பற்றிப் பார்ப்போம்.
ஆரம்பகால அருங்காட்சியகங்கள் என்பவை பணக்கார தனி நபர்கள், குடும்பங்கள் அல்லது கலை நிறுவனங்களால், அரிய, இயற்கை மற்றும் கலைப்பொருட்களின் தனிப்பட்ட சேகரிப்புகளாகத் தொடங்கின. இவை பெரும்பாலும் அதிசய அறைகள் அல்லது அலமாரிகளில் காட்சிப்படுத்தப்பட்டன.
உலகின் முதல் அருங்காட்சியகம்
1925 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் லியோனார்ட் வூலி ஒரு பாபிலோனிய அரண்மனையை அகழ்வாராய்ச்சி செய்யும் போது ஒரு சுவாரஸ்யமான கலைப்பொருட்களின் தொகுப்பைக் கண்டுபிடித்தார். அதுவே உலகின் மிகப் பழமையான அருங்காட்சியகம். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கடைசி நியோ-பாபிலோனிய மன்னரான நபோனிடஸின் மகள் இளவரசி என்னிகால்டியால் கட்டப்பட்ட அரண்மனை. இது இன்றைய ஈராக்கில் உள்ள பண்டைய நகரமான ஊர் நகரில் கி.மு 530 இல் உருவாக்கப்பட்டது.
என்னிகால்டி அருங்காட்சியகம் (Ennigaldi-Nanna Museum)
இந்த அருங்காட்சியகம் பல வெவ்வேறு காலங்கள் மற்றும் இடங்களைச் சேர்ந்தவை. ஆனால், அவை நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு பெயரிடப்பட்டிருந்தன. இந்த அருங்காட்சியகத்தில் முந்தைய மெசபடோமிய நாகரிகங்களின் பண்டைய பொருட்கள் இருந்தன. அவற்றில் சில ஏற்கனவே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. ஒவ்வொரு கலைப்பொருளிலும் அதை விவரிக்கும் ஒரு களிமண் லேபிள் இருந்தது. சுமேரியன் உட்பட பல மொழிகளில் எழுதப்பட்டது.
அதில் காசைட் காலத்தைச் சேர்ந்த ஒரு குதுர்ரு (எல்லைக் கல்), கடவுள்களின் சின்னங்கள் மற்றும் உருவங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. பிரபல சுமேரிய மன்னரான ஷுல்கி மன்னரின் சிலையின் ஒரு பகுதி, கிமு 1400 ஆம் ஆண்டு வாக்கில் சொத்துரிமை பொறிக்கப்பட்ட ஒரு கருப்பு ஓவல் கல் போன்ற அரிய பொருட்கள் இருந்தன.
கலைப்பொருட்களை லேபிளிடுதல்:
என்னிகால்டி-நன்னாவின் அருங்காட்சியகம் கலைப்பொருட்களை விவரிக்க முதன்முதலில் லேபிள்களைப் பயன்படுத்தியது. இந்த லேபிள்கள் சுமேரியன் உட்பட மூன்று மொழிகளில் எழுதப்பட்டு, ஒவ்வொரு பொருளும் என்ன, அது எங்கிருந்து வந்தது என்பதை விளக்கின. லேபிளிங் செய்யும் இந்த நடைமுறை இப்போது அனைத்து நவீன அருங்காட்சியகங்களிலும் ஒரு நிலையான அம்சமாக உள்ளது. இது பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களைப் புரிந்துக்கொள்ள உதவுகிறது.
கல்வி நோக்கம்:
என்னிகால்டி-நன்னா தனது பாதிரியார் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க இந்த அருங்காட்சியகத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். இன்று, உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள் மாணவர்களுக்கு அரிய பழமையான பொருட்கள் பற்றி விளக்குகின்றன. கடந்த காலத்தைப் பற்றி மக்கள் அறிய உதவும் தகவல்களை வழங்குகின்றன
பாதுகாப்பு மற்றும் அமைப்பு:
சேகரிப்பில் வெவ்வேறு காலங்கள் மற்றும் இடங்களிலிருந்து வந்த பொருட்கள் இருந்தன. அனைத்தும் கவனமாக ஒழுங்கமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. எதிர்கால சந்ததியினருக்காக கலைப்பொருட்களை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் ஒழுங்கமைத்தல் என்ற இந்த யோசனை நவீன அருங்காட்சியகங்கள் அமைப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகித்தது.
கலாச்சார பாரம்பரியம்:
நவீன அருங்காட்சியகங்கள் சமூகங்களின் வரலாறு மற்றும் சாதனைகளைப் பாதுகாத்து காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பது போல, என்னிகால்டி-நன்னாவின் அருங்காட்சியகம் அவரது நாகரிகத்தின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியது.
உலகின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமான வாட்டிகான் அருங்காட்சியகங்கள் (மியூசி வாடிகானி), 1506 ஆம் ஆண்டு போப் ஜூலியஸ் அவர்களால் தொடங்கப்பட்டது. இது ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட மகத்தான சேகரிப்பிலிருந்து படைப்புகளைக் காட்சிப்படுத்துகிறது. இதில் உலகின் மிகவும் பிரபலமான கிளாசிக்கல் சிற்பங்கள் மற்றும் மறுமலர்ச்சி கலையின் மிக முக்கியமான தலை சிறந்த படைப்புகள் அடங்கும்.