
ஒரு சமயம் ஸ்ரீ ராமானுஜர் திருவரங்க வீதி வழியாக தனது சீடர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். தெருவில் சிறுவர்கள் மண்ணைக் குவித்து வைத்து சாமி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு மண் குவியல்தான் சாமி. பூவரசு இலைகளைக் கிள்ளி வைத்து, அவற்றில் சிறிது சிறிதாக மணலைப் பரப்பி வைத்து அதை நைவேத்தியம் என்றனர். ஒரு சிறுவன் மணியடிப்பது போல வாயால் ஒலியெழுப்பினான், இன்னொருவன் சுவாமிக்கு பூஜை செய்தான்.
இதைக் கண்ட ராமானுஜரின் சீடர் ஒருவர், "பசங்களா, இது என்னடா பாதை நடுவே விளையாட்டு. சுவாமிகள் எத்தனை பெரியவர்... பாருங்கள் நடந்து வருகிறார். அவருக்கு இடைஞ்சலாக இல்லாமல் ஒதுங்கி வழி விட்டு போங்கடா" என்றார்.
விளையாடிக்கொண்டிருந்த துடுக்குமிக்க சிறுவன் ஒருவன், "நீங்க ஒதுங்கிப் போங்களேன்... சுவாமிக்கு திருவமுது படைக்கிற நாங்கள் எப்படி திடீரென ஒதுங்கிறது. இப்ப சுவாமிக்கு தீபாராதனை நடக்கப்போவுது. நின்று சேவிக்கிறதுன்னா சேவிச்சுக்குங்க. இல்லேன்னா போய்க்கிட்டே இருங்க" என்றான்.
அதைக் கேட்ட சீடருக்கு மகா கோபம். ஆனால் ராமானுஜரோ, "பேசாம எல்லாரும் நின்னு சுவாமிய சேவிப்போம். பசங்களோட பூஜையில் புகுந்து ஏதும் குழப்பம் பண்ண வேண்டாம்"என்றபடி அவரும் நெடுஞ்சான்கிடையாக நடு வீதியில் விழுந்து சுவாமியை வணங்கினார்.
அதைக் கண்ட சீடர்களும் அவ்வாறே செய்தனர். தொடர்ந்து, "என்ன சுவாமி நீங்க... இது அறியாப் பசங்க விளையாட்டுதானே? இந்த மண் குவியலா அரங்கன்? இதைப்போய் நாம வணங்கியிருக்கணுமா?” என்று கேட்டனர்.
அதைக் கேட்ட ராமானுஜர், "அப்பா… இது தவறான சிந்தனை. இந்த மண் குவியலில் அந்தப் பெருமாளே எழுந்தருளி இருப்பதாக அந்தப் பிள்ளைகள் பக்திபூர்வமாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கைதான் பக்திக்கே அடித்தளம். இது வெறும் மண் குவியல்தானேன்னு நாம நினைச்சா, அங்கே கோயில்ல இருக்கிறதும் வெறும் சிலைதானே. அதுல மட்டும் எப்படி பெருமாள் எழுந்தருளுவார்? இது சின்னப் பசங்க விளையாட்டுன்னா, அது பெரியவங்க நாம நடத்தும் விளையாட்டு. அவ்வளவுதானே? பக்தி மனசுக்குள்ளே இருந்தா நாம இங்கேயும் அரங்கனை தரிசிக்கலாம். அங்கேயும் தரிசிக்கலாம்" என்றார்.
அதைக்கேட்ட சுவாமிகளின் அத்தனை சிஷ்யக்கோடிகளும் உண்மையான பக்தியின் பொருளை உணர்ந்து மெய் சிலிர்த்தனர்.