அட்டகங்கி (Stomacher) என்பது பெண்களின் ஆடையின் முன்பக்கத்தில் காணப்படும் திறப்பில் பின்னல் செய்து அலங்கரிக்கப்பட்ட ஒரு முக்கோண வடிவப் பகுதியாகும். அட்டகங்கி பெண்களின் இடுப்பில் இறுக்கமாக அணியும் சிற்றாடையின் ஒரு பகுதியாக உருவாக்கப்படும் அல்லது அதன் ஒரு முக்கோணப் பகுதியாக இணைத்து வடிவமைக்கப்படும். இது ஒரு அலங்காரப் பொருளாக மட்டும் பயன்படுத்தப்பட்டால் இது ஆடையின் முன்பக்கத்தில் வைத்து தைக்கப்படும் அல்லது ஊசி வைத்து இணைக்கப்படுகிறது. சில வேளைகளில் உடுப்பின் இரு பக்கமும் பூத்தையல் இழை அல்லது நாடா கொண்டு இணைக்கப்படும்.
15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் ஆண், பெண் இரு பாலாரும் இந்த அட்டகங்கியை ஒரு அலங்கார ஆடையாக முன்புறம் திறப்போடு தங்களது மேற்சட்டை அல்லது உடுப்புகள் மீது அணிந்து வந்தனர். இந்த அட்டகங்கி மற்றும் அதோடு இணைந்து அணியப்படும் தலை அலங்கார ஆபரணங்கள் உள்ள ஓவியங்களில் அவற்றின் பாணியும் வடிவமைப்பும் வைத்து ஓவியங்கள் வரையப்பட்ட காலங்கள் கணக்கிடப்படுகிறது. 1603 ஆம் ஆண்டில் சவுத்தாம்டன் நகரச் சீமாட்டியாகிய எலிசபெத் ரியோத்சுலி என்பவர் தன் கணவருக்கு எழுதியக் கடிதத்தில் "கருஞ்சிவப்பு நிறத்தில், ஒரு முழ அகலத்தில் நான் குதிரையை ஓட்டிச் செல்லும் நாட்களில் என் வயிறை வெது வெதுப்பாக வைத்துக் கொள்ளும் நீளத்தில் ஒரு அட்டகங்கி வாங்கி வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
1570 ஆம் ஆண்டு முதல் 1770 ஆம் ஆண்டு வரை பெண்களின் கவுன்களில் அட்டகங்கி இன்றியமையாத அங்கமாக மாறிவிட்டது. இதே போன்று, பெண்ணின் ரவிக்கையின் முன்பகுதியில் நீண்ட V அல்லது U வடிவ அமைப்பில் அட்டகங்கி இடம் பெற்றது. அதன் பிறகு, அட்டகங்கி என்பது அலங்காரத்தைச் சேர்ப்பது மற்றும் கட்டமைப்பை வழங்குவது என்று ஆகிப்போனது.
தற்போது பெண்களுக்கான சோளி, சல்வார் கமீஸ், சுடிதார், குர்தா, ரவிக்கை என்று அனைத்து உடைகளிலும் அட்டகங்கி இடம் பெற்றிருப்பது நவீன ஆடையாகக் கருதப்படுகிறது.