அதிசயத்திலும் அதிசயம் திருச்செங்கோடு மலைக்கோயில் சிற்பங்கள்!

Thiruchengode temple
Thiruchengode temple
Published on

ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் சிற்பக்கலையும் ஒன்று. கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்பதற்கேற்ப இறைபக்தி மற்றும் மனிதர்களின் வாழ்வியலின் வெளிப்பாடே இந்த சிற்பக் கலைகள் என்று சொன்னால் அது மிகையாகாது.

கல் எடுத்து வேட்டையாடுவதில் தொடங்கிய ஆதிமனிதனின் வாழ்க்கை கல் குடைந்து சிலையை வடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் நிச்சயம் மனிதன் ஒரு அற்புதப் படைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்படி ஒரு அற்புதமான கலை சிற்பங்களால் நிரம்பப் பெற்ற கோவில் தளம் தான் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள மலைக்கோயில் என்று அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வரர் கோயில். சுமார் 650 அடி உயரத்தில் 1200 படிக்கட்டுகளுடன் மலைமேல் கம்பீரமாய் காட்சியளிக்கிறது இந்த மலைக்கோயில்.

மலையை கீழிருந்து பார்க்கும் போது ஒருபுறம் ஆண் அமைப்பு போன்றும் ஒருபுறம் பெண் போன்றும் காட்சியளிப்பது போலிருக்கும். ஆணும் பெண்ணும் சரிக்கு சமம் என்பதையும்  தாண்டி தன் உடலில் பகுதியை தனது மனையாளுக்கு அளித்த எம்பெருமான் சிவனும் பார்வதியும் இரு உயிர் ஓருடலாய் விளங்குவதால் இத்தலம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் என்று பெயர் பெற்றது.

இந்த கோவிலில் பலவிதமான சிறப்புகள் உள்ளன. அதிலும் முக்கியத்துவமாக இங்கு உள்ள சிற்பக் கலைகள் மிகுந்த தனித்துவம் வாய்ந்தவை.

பல்வேறு வகையான சிற்பங்கள்: 

கவிழ்த்து வைக்கப்பட்ட தாமரைப்பூவை (தேங்காய் போன்று தோற்றமளிக்கும் ) சுற்றி 8 கிளிகள் உட்கார்ந்திருப்பது போன்று வடிக்கப்பட்ட சிற்பம் ஒரே கல்லினால் செய்யப்பட்ட சிற்பம் ஆகும். இதன் மையத்தில் உள்ள தாமரையை நம்மால் சுழற்ற முடியும். 

இசைக் கலைஞர்கள் :

ஒரே அடியில் செதுக்கப்பட்டிருக்கும் பறை இசை கலைஞர் ஒருவர் வாசிப்பது  போன்று நிற்கும் சிற்பமும் மற்றும் வீணை வாசிக்கும் வீணை கலைஞர் ஒருவரின் சிற்பமும் மிகவும் பிரமிப்பூட்டக்கூடியவை. இந்த இசை கலைஞர்களின் சிற்பங்கள் அன்றைய காலகட்டங்களில் இசை கலைஞர்களுக்கு இருந்த முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக உள்ளன.

ராமனும் அனுமனும் :

மகர தோரண வாயிலின் கீழ், வில் அம்புடன் ராமன் நிற்க, ஒருபுறம் அணுமனும், மறுபுறம் கருடனும் நிற்பதை போன்று செதுக்கப்பட்டிருக்கும் சிற்பம் மிகவும் தத்ரூபமாக இருக்கும். இதை பார்க்கும் போது அப்படியே இராமாயணத்தில் வரும் காட்சிகளை கண்முன் கொண்டு வந்தது போன்று இருக்கும்.

வெளிநாட்டு தொடர்பு :

அன்றைய காலகட்டங்களில் ஆட்சி செய்து வந்த மன்னர்களின் வெளிநாட்டு தொடர்புகளை வெளிப்படுத்தும் வகையில் அரசன் ஒருவன் அரியணையில் அமர்ந்திருக்க, அவருக்கு முன்னே தொப்பி அணிந்த வெளிநாட்டவர் ஒருவர் அரசனுக்கு மாலை அணிவிக்க காத்திருப்பது போன்ற ஒரு சிற்பம் வடிக்கப்பட்டு இருக்கும். இது அன்றைய காலகட்டங்களில் நிலவிய வாணிபத் தொடர்பையும் சிறப்பான நல்லாட்சியையும் எடுத்துரைக்கிறது.

சிவலிங்கமும் பாம்பும் :

சிவலிங்கத்தின் முன் பாம்பாட்டி ஒருவர் மகுடியை வைத்து ஊத பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடுவதை போன்று சிற்பம் வடிக்கப்பட்டிருக்கும். இதுவும் பார்ப்பதற்கு மிகவும் அதிசயத்தக்க வண்ணம் உள்ளது.

Thiruchengode temple
Thiruchengode temple

போர்வீரர்களின் சிற்பங்கள் :

கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளி மீது அமர்ந்த போர் வீரர்களை தாங்கி நிற்கும் 30 ஒற்றை கற்தூண்கள் சிறப்பான சிற்ப வேலைப்பாடு மிக்கவை. இரும்பில் நாம் அடிக்கும் சங்கிலிகளே இங்கு கல்லால் வடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளன.

ஆமையும் தேரும் :

செங்கோட்டு வேலவர் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் தேர் போன்ற வடிவம் செதுக்கப்பட்டு அதன் கீழ் ஒரு ஆமை வடிவம் செதுக்கப்பட்டிருக்கும். இதைப் பார்க்கும்போது அந்த ஆமையே  இந்த தேரினை ஓட்டிச் செல்வது போல மிகுந்த பிரமிப்பாக  இருக்கும். அத்தகைய காலகட்டங்களில் வாழ்ந்த ஆகச் சிறந்த சிற்பிகளின் கலை படைப்பு இவை என்று சொன்னால்  அது மிகையாகாது.

இதைத் தாண்டி ஒற்றைக் கல்லினால் செதுக்கப்பட்டுள்ள வீரபத்திரர், காளி, ரதி மன்மதன் போன்றோரின் சிற்பங்களும் கண்ணை கவரும் வகையில் உள்ளன. படிக்கட்டுகள் வழியாக மலைக் கோவிலுக்கு செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டிருக்கும் நாகர் சன்னதியும் ஒரு மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடு என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பூ விழுங்கி பலன் கூறும் அதிசயப் பிள்ளையார்!
Thiruchengode temple

முதன்முதலாக இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைத்து வழிபாடு செய்த மனிதன் பிற்காலங்களில் கடவுளின் திருவுருவச் சிலைகளை செதுக்கும் அளவுக்கு உருமாறி இருக்கிறான் என்று சொன்னால் அது நிச்சயம் காலத்தின் மாற்றம் தான். 

கல்லையும் கடவுளாக மாற்றும் சிற்பக்கலை நிச்சயம் நாம் வளர்த்தெடுத்து அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய முக்கிய கலைகளில் ஒன்றே!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com