தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் ஆயிரம் வருடங்கள் பழைமையான புராதன சிவன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றியவர். மிகவும் பழைமை என்னும் பொருள் விளங்கும்படி புராதன என்னும் அடைமொழியைக் கொண்டு புராதனவனேஸ்வரர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார். அம்பாள் திருநாமம் பெரிய நாயகி.
வனத்தில் வாழ்வதும் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமே என்று உலகோருக்கு உணர்த்துவதற்காக சிவபெருமான் பார்வதி தேவியுடன் ஒருமுறை அடர்ந்த கானகப் பகுதிக்குச் சென்று அங்கே கடுந்தவத்தில் அமர்ந்தார். அவருடன் தேவர்களும், ரிஷிகளும் அங்கே சென்று வசிக்கலானார்கள். சிவபெருமான் ஆழ்ந்த தவத்தில் இருப்பதால் அசுரர்கள் மிக்க துணிச்சலுடன் அங்கே வந்து தேவர்களையும், ரிஷிகளையும் துன்புறுத்தினர். இதை எப்படி சமாளிப்பது என்று கலங்கிய பார்வதி தேவி மன்மதனை அழைத்து சிவன் மீது மலர்க்கணை எய்து அவரது தவத்தைக் கலைக்கும்படி செய்தாள்.
தவம் கலைந்த சிவபெருமான் கோபத்துடன் தனது நெற்றிக்கண்ணைத் திறக்கவே மன்மதன் சாம்பலாகிப் போனான். மன்மதனுக்கு உயிர்ப்பிச்சை தர தேவர்களும் பார்வதி தேவியும் வேண்டவே, சிவபெருமான் எரிந்த அவனது சாம்பல் மீது பால் தெளிக்கச் சொன்னார். அதன்படியே செய்ய மன்மதனும் உயிர் பெறுகிறான். அதனால் இத்தலம் பாலத்தளி எனப்படுகிறது. இதை நினைவு கூறும் வகையில் இங்குள்ள காமன் பொட்டலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் காமன் பண்டிகை நடைபெறுகிறது. இத்தல சிவபெருமானும் புராதனவனேஸ்வரர் என்னும் திருநாமத்தால் அழைக்கப்படலானார்.
இக்கோயிலின் மிகப்பெரிய விசேஷம் இங்குள்ள பூவிழுங்கி பிள்ளையார்தான். அம்பாள் பெரியநாயகி சன்னிதியின் வலப்பக்கத்தில் இந்த பிள்ளையார் சன்னிதி அமைந்துள்ளது. பக்தர்களுக்கு அருள்பாலிப்பதில் இவர் மிகவும் வரப்ரசாதி. இவரது இரு காதுகளின் துவாரங்களில் பூவை சொருகிவிட்டு நம் கோரிக்கையை மனதில் நினைத்துக் கொண்டு பிரதட்சணம் வந்து பார்த்தால், நாம் வைத்த பூவை அவர் உள்ளே இழுத்துக் கொண்டிருப்பாராம். அப்படி நடந்தால் அந்த பக்தரின் கோரிக்கை விரைவில் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
நினைத்த காரியம் நிறைவேறாது என்றிருந்தால் வைத்த பூ வைத்தபடியே அப்படியே இருக்குமாம். இது இன்றும் நிகழ்ந்து வரும் அதிசயமாகும். இதனால் இவருக்கு, ‘பூ விழுங்கி பிள்ளையார்’ என்று பெயர் ஏற்பட்டது. இந்த அதிசய பிள்ளையார் பெயராலேயே இந்தப் புராதனவனேஸ்வரர் கோயிலும் பூவிழுங்கி பிள்ளையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. திருமணம், குழந்தைப்பேறு போன்ற அனைத்துக் காரியங்களுக்கும் இந்தப் பிள்ளையாரை வேண்டிக்கொண்டால் நிச்சயம் நிறைவேறும் என்னும் நம்பிக்கை இப்பகுதி பக்தர்களிடையே நிலவுகிறது.