நமது கலாசாரத்தின் அடையாளம் எத்தனையோ காணாமல் போய்விட்டது. நம் முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறார்கள், எவ்வளவு அறிவியல் பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொண்டால் நம் பாரம்பரியம் காக்கப்படும். ஆச்சரியப்படும் பல உண்மைகள் வெளிவரும்.
முன்பெல்லாம் ஒவ்வொரு கிராமத்திலும் சுமைதாங்கி கற்கள் ஊருக்கு வெளியே நாம் செல்லும் பாதையில் ஆங்காங்கே இருக்கும். ஆனால், அது ஏதோ ஒரு கல் என்று நினைத்தது கொண்டிருக்கும் தலைமுறை 50 வயதாகும் நம் தலைமுறை. ஆனால், இன்றைய தலைமுறைகளுக்கு அப்படி ஒரு விஷயமே தெரியாது. ஏனென்றால், பெரும்பாலான இடங்களில் சுமைதாங்கி கற்கள் கிடையாது.
கிராமப்புறங்களில் அதுவும் சாலையோரமாக அமைந்திருக்கும் இந்த சுமைதாங்கி கல் மேடை. இன்றைய இளைய தலைமுறையினர், ‘சுமைதாங்கி கல், சுமைதாங்கி கல் மேடை, அப்படினா என்ன?’ என்று கேட்கும் அளவிற்கு தற்போது நிலை உள்ளது.
கருவுற்ற பின்னர் வயிற்றில் குழந்தையுடன் இறந்துபோன ஒரு பெண்ணின் துயரம், சுமைதாங்கி கல் மேடை மீது துன்பச் சுமையாக அந்தக் குடும்பத்தினரால் இறக்கி வைக்கப்பட்டிருக்கும். கிராமங்களில் இந்த வழக்கம் இருந்து வந்துள்ளது. ஒரு வீட்டில் பெண் கருவுற்று குழந்தை பிறப்பதற்கு முன்பாக வயிற்றில் குழந்தையுடன் அந்தப் பெண் இறந்துவிட்டால், அதன் நினைவாக அந்த ஊருக்கு வெளியே சாலையோரமாக சுமைதாங்கி கல் மேடை அமைப்பது வழக்கம்.
சுமைதாங்கி கல் மேடை: அந்த சுமைதாங்கி கல் மேடை அந்தப் பெண்ணின் நினைவாக மட்டும் இல்லை, தற்போது இருப்பதுபோல பஸ், லோடு ஆட்டோ, டூவீலர் போன்ற வாகனங்கள் அதிக அளவு அந்தக் காலத்தில் இல்லை. கிராமத்து மக்கள் தங்கள் விளைபொருட்களை தலைச் சுமையாகத்தான் அங்கிருந்து நகரப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்று வந்தாக வேண்டும். அவ்வாறு சுமைகளை தலையில் தூக்கிச் செல்பவர்கள், சாலையோரமாகத் தென்படுகின்ற சுமைதாங்கி கல் மேடையில் தலைச்சுமையினை இறக்கிவைத்து, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துப் பின்னர் தங்களது சுமைகளை மீண்டும் தூக்கிச் செல்வார்கள்.
தரையில் இருந்து 4 அடி உயரத்துக்கு இரண்டு கல் தூண்கள். ஒன்றரை அடி அகலம் 6 அடி நீள கல் பலகை ஒன்று அந்த இரு தூண்கள் மீதாகக் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒரு சுமைதாங்கி கல் மேடையின் அமைப்பு இதுதான். காலப்போக்கில் இன்றைய நடைமுறையில் இதுபோல சுமைதாங்கி கல் மேடை அமைக்கும் பழக்கம் இல்லாமலே போய்விட்டது.
உங்கள் ஊரில் கூட இப்படிப்பட்ட சுமைதாங்கி கற்கள் சாலையோரமாக இருந்தால் அதைப் பராமரித்து நம் பாரம்பரியம் காக்க முன் வாருங்கள். இதன் பெருமைகளை நம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுங்கள். நம் கலாசாரத்தின் அடையாளங்களை நாம் காப்பாற்ற முன் வரவேண்டியது நம் கடமை அல்லவா?