
நமது இந்தியப் பெரும் நாடு, மக்கள் தொகையில் உலகில் முதலிடத்திற்கு வந்துள்ளதை அனைவரும் அறிவோம். புத்தர் பிறந்த பொன்னாடான இதில் எத்தனையோ போக்குவரத்துச் சாதனங்கள் இருந்தாலும், சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பும் சாதனம், ரயில்தான்! தொலை தூரப் பயணங்களையும் சுகமாக்குவது ரயில்களே! உலுக்கல், குலுக்கல் இல்லாமல், உறங்கிக் கொண்டும் செல்லும் வசதிகள், ரயில்களைப்போல் வேறு எந்த வாகனத்திலும் இல்லை. பயணியர் ரயில், சரக்கு ரயில் என்று இதில் பிரிவுகள் உள்ளன!
ஒரு நாளின் 24 மணி நேரத்தில், நமது நாட்டில் 13000 ரயில்கள் இயக்கப்படுவதாகவும், சுமார் 4 கோடி மக்கள் பயணம் மேற்கொள்வதாகவும் விபரங்கள் தெரிவிக்கின்றன.
மிகப்பெரும் நகரங்களை மட்டுமல்லாது, பெரும்பாலான ஊர்களை இணைக்கும் பாலமாக விளங்குகின்றன நமது ரயில்கள்! சமீபத்தில் தேஜஸ், வந்தே பாரத் போன்ற ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பை, சென்னை போன்ற நகரங்களில் புறநகர் ரயில்களின் சேவை, பாராட்டுக்குரியது!
பள்ளி, கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை என்று செல்வோர் அனைவருக்கும் வரப் பிரசாதம் புற நகர் ரயில்களே! வீட்டிலிருந்து உரிய நேரங்களில் உழைப்பிடம் செல்லவும், மாலை சரியான நேரத்தில் உறைவிடம் சென்று சேரவும் உதவுபவை ரயில்களே!
ரயில் நிலையங்கள் முன்பு போல் இல்லாமல் இப்பொழுது தூய்மை காக்கின்றன! மின் விசிறிகள், எஸ்கலேட்டர் என்று பயணியரின் நலம் காக்கப்படுகிறது.
சரக்கு ரயில்கள் பொருட்களை உரிய நேரத்தில் கொண்டு சென்று, மக்களின் பசி போக்கிகளாகவும், வணிகத்தைப் பெருகச் செய்பவையாகவும் திகழ்கின்றன. பெரு நகரங்களில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுகையில், நீர் ஆதாரங்கள் அதிகமுள்ள இடங்களிலிருந்து நீரைப் பெரு நகரங்களுக்குக் கொண்டு சேர்க்கும் மகத்தான சேவையை சரக்கு ரயில்கள் செய்யத் தவறுவதில்லை!
அவ்வாறான ஒரு சரக்கு ரயில் 295 சரக்குப் பெட்டிகளுடன், 6 எஞ்சின்களுடன் சுமார் 3.5 கி.மீ நீளத்துடன் இயங்கி வருகிறதென்றால், ஆச்சரியமாக இருக்குமல்லவா?ஆச்சரியம்! ஆனால் உண்மைதாங்க! இந்தியாவின் மிக நீளமான ரயில் என்ற பெருமையோடு இது இயங்கி வருகிறது! சூப்பர் வாசுகி ரயில் என்பதே இதன் பெயர்!
சத்தீஷ்கரிலிருந்து நாக்பூருக்குச் செல்லும் இந்த ரயிலில் 27000 டன் நிலக்கரியை ஏற்றிச் செல்லலாமாம்! சத்தீஷ்கரின் கொர்பா சுரங்கத்திலிருந்து நாக்பூருக்கு இது தினசரி பயணத்தை மேற்கொள்கிறதாம்.
வாசுகி என்று பெயரிடுவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? பரமசிவன் கழுத்தில் ஊர்ந்து கொண்டிருக்கும் பாம்பின் பெயர் தான் வாசுகி. பாம்பு எவ்வாறு நீண்ட உருவையுடையதோ அதைப்போல இந்த ரயில் 3.5 கி.மீ.,நீளம் கொண்டதாலேயே இந்தப் பெயராம்! ம்! பொருத்தமான பெயர்தானே! இந்த நெடு ரயில் ஒவ்வொரு நாளும் 11.20 மணி நேரம் பயணிக்கிறதாம்.
என்னங்க! அதுக்குள்ளே எங்க கிளம்புறீங்க? என்னது? வாசுகி ரயிலை 295 பெட்டிகளுடனும்,6 எஞ்சின்களுடனும் நேரில்,பார்க்க நாகபுரி போறீங்களா?
சுயநலமா யோசிக்காதீங்க! எனக்கும் சேர்த்து ஒரு டிக்கட் போடுங்க! எல்லோருமா சேர்ந்து போய்ப் பார்த்துட்டு வருவோம்!