
புதிய நாகரீகம் நல்லதுதான். ஆனால் அந்த நாகரீகத்தால் நம்முடைய கலாச்சாரம், பண்பாடு போன்ற பழக்கங்களை, நம் முன்னோர்கள் காலங்காலமாக கட்டிக்காத்த அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகின்றோம். தமிழர் பண்பாடு காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் மாற்றங்களையும், சிதைவுகளையும் சந்தித்து வருகின்றது. நவீன நாகரிகம் மற்றும் பிற பண்பாடுகளின் தாக்கம் காரணமாக தமிழர் பண்பாட்டின் சில அம்சங்கள் மறைந்தும் அழிந்தும் வருகின்றன.
அழிந்து வரும் தமிழர் பண்பாட்டின் சில முக்கியமான அம்சங்கள்:
1) பாரம்பரிய கலைகள்:
தமிழ்நாட்டில் பல பாரம்பரிய கலைகள் அழிந்துவரும் நிலையில் உள்ளன. குறிப்பாக நாட்டுப்புற கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், தோற்பாவை போன்ற கூத்து வகைகளும் அழிவின் விளிம்பில் உள்ளன. இந்த கலைகள் நம் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தாலும், நவீன மயமாக்கலின் காரணமாக இவற்றின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. கிராமிய நடனங்கள், நாடகம், கிராமிய இசை போன்ற பாரம்பரிய கலைகள் நலிந்து வருகின்றன. பாரம்பரிய கலைகளை கற்கும் ஆர்வம் குறைந்து வருகின்றது. அத்துடன் இவற்றை கற்றுக் கொடுக்கும் கலைஞர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.
2) உணவு பழக்கம்:
நவீன உணவு பழக்கங்களுக்கு மாறுவதால் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வந்த உணவு பழக்கங்கள் இப்போது மெதுவாக மறைந்து வருகின்றன. நகரமயமாக்கல் மற்றும் மேற்கத்திய உணவு பழக்கங்களுக்கு மாறுவது நம் பாரம்பரிய உணவுப் பொருட்களை மெள்ள புறம் தள்ளுகிறது. துரித உணவு மற்றும் வெளிநாட்டு உணவுகளின் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் பாரம்பரிய தமிழர் உணவு வகைகளின் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது.
சில பாரம்பரிய உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அதிக செலவு பிடிக்கும். இதனால் மக்கள் மலிவான, எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை நாடுகிறார்கள். நவீன விவசாய முறைகள் அதிக விளைச்சல் தரும் பயிர்களை மட்டுமே பயிரிட ஊக்குவிக்கின்றன. இதனால் பாரம்பரிய பயிர்கள் மற்றும் விதைகள் அழிந்துவருகின்றன.
3) பாரம்பரிய தொழில்கள்:
அதீத தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நவீன நாகரிகத்தின் தாக்கத்தால் பல பாரம்பரியமான தொழில்கள் அழிந்து வருகின்றன. மண்பாண்டம் செய்தல், நெசவுத் தொழில் போன்ற தொழில்கள் இயந்திரமயமாக்கலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. புடவை, வேட்டி போன்ற கைத்தறி துணிகள் இயந்திரத்தால் செய்யப்படும் துணிகளுடன் போட்டியிட முடியாமல், கைத்தறி நெசவாளர்கள் பலர் வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். பனை மரத்தின் பொருட்களிலிருந்து தயாரிக்கும் கட்டில் போன்ற தொழில்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.
4) பழக்கவழக்கங்கள்:
பாரம்பரிய பழக்க வழக்கங்களான விருந்தோம்பல், பண்டிகைகளை கொண்டாடும் முறை போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெரியோரை மரியாதையுடன் அழைப்பது, காலணிகளை வெளியேவிடுவது, கைகுலுக்காமல் கைகூப்பி வணங்குவது போன்ற பழக்கங்கள் நவீன நாகரிகத்தின் தாக்கம் காரணமாக குறைந்து வருகின்றது.
5) மொழியின் பயன்பாடு:
உலகமயமாக்கல் காரணமாக ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் தமிழைப் பேசுவதே குறைந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. தமிழ் பேசும் மக்கள் பிற பகுதிகளுக்கு குடிபெயரும் பொழுது அவர்கள் அந்தந்த இடங்களின் மொழியைப் பயன்படுத்த தொடங்குவதால் தமிழின் பயன்பாடு குறைந்து வருகிறது. உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கட்டாயமாக்க வேண்டும். தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க அரசாங்கம், கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும்.
6) உடை கலாச்சாரம்:
நாகரீக வளர்ச்சி மற்றும் மேற்கத்திய உடை கலாச்சாரத்தின் ஊடுருவல் காரணமாக மேற்கத்திய உடைகள் அதிகம் உடுத்தப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டு தட்பவெப்பநிலைக்கேற்ற உடைகளை அணிவதுதான் சிறப்பு. வேட்டி சட்டை மட்டுமே தமிழர்களின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு என்பதல்ல. ஆனால் வேட்டியும் சட்டையும் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று என்பதை மறக்கவேண்டாம்.
நவீனமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் காரணமாக பிற பண்பாடுகளின் தாக்கங்கள் அதிகரித்து, தமிழர் பண்பாட்டின் தனித்துவம் குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு சமூக வலைதளங்களும் முக்கிய காரணமாகின்றன.
7) பாதுகாக்கும் வழிமுறைகள்:
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
பாரம்பரிய கலைகளை கற்றுக்கொடுக்கும் கலைஞர்களுக்கு ஆதரவு அளிப்பதுடன் அவற்றை கற்றுக்கொள்ள இன்றைய இளைஞர்களை ஊக்குவிக்கவும் வேண்டும்.
சூழலியல் சார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இயற்கை வளங்களை பாதுகாப்பதுடன் பாரம்பரிய தொழில்களையும் பாதுகாக்க முடியும்.
உள்ளூர் உணவு பழக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் பாரம்பரிய உணவு வகைகளின் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.
சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தமிழர் பண்பாட்டை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நம்முடைய பழக்கவழக்கங்களையும் பண்பாடுகளையும் வருங்கால சந்ததிகளுக்கு கற்றுத் தருவோம். நம் அடையாளங்களை தொலைக்காமல் பாதுகாப்போம்!