தமிழரின் வீர வரலாறு பேசும் நடுகற்கள்: தகடூர் யாத்திரையின் சிலிர்ப்பூட்டும் ரகசியங்கள்!

Tamil Hero Stones - நடுகற்கள் வரலாறு
Tamil Hero Stones - நடுகற்கள் வரலாறுAI Image
Updated on

"பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்

பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் - அகநானூறு - 67

ஒரு இனத்தின் வரலாற்றை அறிய அதன் அரண்மனைகளைப் பார்க்க வேண்டியதில்லை; அதன் நினைவுகளைச் சுமந்து நிற்கும் கற்களைப் பார்த்தாலே போதும். தமிழனின் வீரத்தையும், வாழ்வியலையும், விழுமியங்களையும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மௌனமாகச் சொல்லிக்கொண்டிருப்பவை நடுகற்கள் வரலாறு.

நான் பிறந்து வளர்ந்தது தர்மபுரி. சங்க காலத் தகடூர். குழுவில் பகிரப்பட்ட ஒரு பயணச் செய்தியைப் பார்த்தவுடன், எந்தச் சூழலிலும் இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் ஏற்பாடு செய்த தகடூர் யாத்திரை எனும் இப்பயணத்தில் இணைந்தது, ஒரு சுற்றுலாவில் பங்கேற்றதல்ல; தமிழரின் தொன்மையான நினைவுப் பாதையில் சில அடிகள் நடந்து வந்ததுபோல இருந்தது.

நேற்றும் இன்றும் கண்ட நடுகற்களும் (Hero Stones) கல்திட்டைகளும் (Dolmens) என் மனதில் பல கேள்விகளையும் பல உணர்வுகளையும் எழுப்பின.

இந்த மண் எத்தனை குருதித்துளிகளை உள்வாங்கியிருக்கும்? எத்தனை வீரர்களின் கடைசி மூச்சைக் கேட்டிருக்கும்? எத்தனை காதல்களின் காத்திருப்பையும், எத்தனை பிரிவுகளின் பசலையையும் மடலேறுதலையும் கண்டு வியந்திருக்கும்? எத்தனை தாய்மார்களின் கண்ணீரையும், எத்தனை மனைவியரின் மௌன வேதனைகளையும் தாங்கியிருக்கும்?

எத்தனை அரசர்கள் இம்மண்ணில் நடந்து சென்றிருப்பார்கள்! எத்தனை வெற்றிகளும் தோல்விகளும் இங்கு நிகழ்ந்திருக்கும்! எத்தனை விசுவாசங்கள் மலர்ந்திருக்கும்! எத்தனை நம்பிக்கைத் துரோகங்கள் நிகழ்ந்திருக்கும்!

ஆனால் காலம் அனைத்தையும் எடுத்துச் சென்ற பின்னரும், சில கற்களை மட்டும் விட்டுச் சென்றுள்ளது. அவை சாதாரணக் கற்களல்ல; ஒரு சமூகத்தின் நினைவகங்கள்.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறையை மணக்க வைத்த பூட்டான்: உலகின் முதல் வாசனை தபால் தலையின் சுவாரசிய வரலாறு!
Tamil Hero Stones - நடுகற்கள் வரலாறு

"காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்"

-தொல்காப்பியம்

முதலில் காட்சி - நடுகல் நடுவதற்கு தகுதியான வீரனின் பெயரும் புகழும் செதுக்கப்பட நல்லதோர் கல்லை தேர்ந்தெடுத்தல்.

இரண்டாவது கால்கோள் - தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த புனித கல்லை சுமந்து கொண்டு ஊருக்குள் வருதல்.

மூன்றாவது நீர்ப்படை - அப்புனித கல்லை நீர்நிலை ஒன்றிலிட்டோ அல்லது புனித நீரில் நீராட்டியோ தூய்மைப்படுத்துதல்.

நான்காவது நடுகல் நடுதல் - சுத்தம் செய்யப்பட்ட அக்கல்லில் வீரனின் உருவம், பெயர் மற்றும் அவனது வீரதீர செயல்களை செதுக்கி அவன் இறந்த இடத்திலோ அல்லது போர்க்களத்திலலோ நட்டு வைத்தல்.

Tamil Hero Stones - நடுகற்கள் வரலாறு
Tamil Hero Stones - நடுகற்கள் வரலாறுAI Image

ஐந்தாவது பெரும்படை - அப்புனித கல்லை தெய்வத்திற்கே உண்டான சிறப்பு சடங்குகளைச் செய்து படையலிட்டு வழிபடுதல்.

ஆறாவது வாழ்த்தல் - நிறைவாக நடுக்கல்லாக மாறிய அந்த வீரனின் புகழைப்பாடி அவனது தியாகத்தைப் போற்றி வாழ்த்தி வணங்குதல்.

இப்படியாக வீரர்களின் தியாகத்தை நினைவில் நிலைநிறுத்த நடுகல் நாட்டும் வழக்கத்தைத் தொல்காப்பியம் பதிவு செய்கிறது. உலகின் பல நாகரிகங்கள் தங்கள் மன்னர்களுக்காக நினைவுச் சின்னங்களை எழுப்பின. ஆனால் சாதாரண வீரனின் தியாகத்திற்காக கல் நாட்டி வழிபட்ட பெருமை தமிழருக்கே உரியது.

எங்கள் பயணத்தில் பல நடுக்கற்கள் கல்திட்டைகள் காணும் பேறு பெற்றோம். ஒரு நடுகல்லை உங்கள் மனதுக்கு நெருக்கமாக காட்சி படுத்துகிறேன்.

மாவட்டம் - தருமபுரி. அரசு - பல்லவர்

வட்டம் - அரூர். மன்னன் - ஈச்சுவரபருமன்

ஊர் - கூக்கடப்பட்டி. ஆட்சி ஆண்டு - 2 ஆம் ஆண்டு

மொழி - தமிழ். வரலாற்று ஆண்டு - கிபி 7 ஆம் நூற்றாண்டு.

எழுத்து - வட்டெழுத்து.

இடம் - உலகக் கவுண்டர் வயல் நடுவில் உள்ள முத்து வேடியப்பன்.

இதையும் படியுங்கள்:
நெல்லை மண்பாண்டங்கள்: சர்வதேச சந்தையை வென்ற காருக்குறிச்சி கிராமத்தின் ரகசியம்!
Tamil Hero Stones - நடுகற்கள் வரலாறு
Tamil Hero Stones - நடுகற்கள் வரலாறு
Tamil Hero Stones - நடுகற்கள் வரலாறுAI Image

குறிப்புரை: பல்லவ மன்னன் ஈச்சுவரபருமன் உடைய காலத்தில் கந்தவாண்ணதி அரைசர் மேற்கங்க படையோடு போரிட்டார். அப்போரில் கந்தவாண்ணதி அரைசருடைய சேவகன், நாவிண்ணதீரனார் என்பவனுடைய மகன் சாத்தன் வீர மரணம் அடைந்தான். அவன் நினைவாக எடுத்தது இக்கல். இக்கல்லில் வீரனுடைய உருவம் குதிரை மீது ஏறி போர்க்களம் செல்கின்ற நிலையில் பொறிக்கப்பட்டுள்ளது.

வீரன் இடக்கையில் கேடயத்தை முன் நீட்டி வலக்கையில் வேல் பற்றி எய்யும் தோற்றத்தில் பொறிக்கப்பட்டுள்ளான். செருமுனை நோக்கிப் பாய்ந்து செல்லும் வீரனை சிற்பி நன்றாக இதில் காட்டி உள்ளான். கல்வெட்டில் மெய்யெழுத்துக்கள் புள்ளியுடன் உள்ளன.

கல்வெட்டு:

  1. கோவிசைய ஈச்சுவர பருமற்கு இரண் 

  2. டாவது கந்தவாண்ணதி அரைசர் மேற்கங்க 

  3. ப் படைஓ டெறிந்த 

  4. ஞான்றவர் சேவகன் 

  5. நாவிண்ணதீரனார் ம

  6. கன் சாத்தன் பட்டான்.

(நன்றி: த.நா.தொ. ஆய்வுத்துறை. தொடர் எண் : 1974/67)

அந்த நடுகற்களின் அருகில் நின்றபோது, ஏதோ ஒரு விசித்திரமான உணர்வு மனதை ஆட்கொண்டது. அங்கிருக்கும் காற்று கூட ஏதோ ஒன்றை நமக்குச் சொல்ல முயல்கிறது. கல்லின் மீது செதுக்கப்பட்ட உருவங்களைப் பார்க்கும்போது, அவர்கள் வெறும் வரலாற்றுப் பாத்திரங்களாகத் தோன்றவில்லை; சில கணங்களுக்கு முன்புதான் போர்க்களத்திலிருந்து திரும்பியவர்களைப் போலத் தோன்றினர்.

அவர்களின் வீரம் தெரிகிறது. அவர்களின் தியாகம் தெரிகிறது. அவர்கள் காத்த மண்ணின் மணம் தெரிகிறது.

தமிழனின் வரலாறு வெறும் போர்களின் வரலாறல்ல; அது அன்பின் வரலாறும் கூட. வீரமும் ஈரமும் ஒன்றாக வாழ்ந்த இனத்தின் வரலாறு. வாளைப் பிடித்த கையும், யாழைப் பிடித்த கையும் ஒரே இனத்தினுடையது என்பதற்கு சான்று நம் சங்க இலக்கியங்களும் இந்த நடுகற்களும்.

அந்தக் கற்களின் முன் நின்றபோது, "தமிழன்டா!" என்ற பெருமிதம் நெஞ்சமெங்கும் பரவியது. நூல்களில் படித்த வரலாறு, அந்தக் கணத்தில் மண்ணிலிருந்து எழுந்து நம் கண்முன் நின்றது.

Tamil Hero Stones - நடுகற்கள் வரலாறு
Tamil Hero Stones - நடுகற்கள் வரலாறு

எத்தனையோ தலைமுறைகளாக வீரத்தையும் ஈரத்தையும் சுமந்து வரும் அதிசயமான மண் நம் தமிழ் மண். அந்தத் தமிழ்த் தடம் பதிந்த மண்ணில் நம் தடங்களும் பதிந்தன. அது ஒரு பயணம் மட்டுமல்ல; முன்னோர் வாழ்ந்த காலத்தோடு நிகழ்ந்த ஒரு சந்திப்பு.

வீடு திரும்பிய பிறகும் அந்த நடுகற்கள் மனதைவிட்டு அகலவில்லை. அவை சொல்லாமல் சொல்லும் ஒரு செய்தி மட்டும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

"நம் முன்னோர் வாழ்ந்த வரலாற்றை மறந்துவிடக்கூடாது; ஏனெனில் அந்த வரலாறுதான் நம் அடையாளம்."

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், நூல்களில் மட்டுமே படித்துப் பழகிய தமிழரின் வீர வரலாற்றை, கள ஆய்வுப் பார்வையில் நேரில் கண்டுணர்ந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் பயண அனுபவத்தைப் பெறுவீர்கள். உங்கள் முன்னோர்களின் தியாக அடையாளங்களை அடையாளம் கண்டு, உங்கள் தமிழ் வேர்களைப் பெருமிதத்துடன் கொண்டாடும் வரலாற்றுத் தெளிவு உங்களுக்குக் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com