Velu Nachiyar
Velu Nachiyar

தமிழகத்து வீர பெண்மணி வேலு நாச்சியார்!

Published on

நம் நாட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஏராளமான பெண்களும் ஈடுபட்டுள்ளனர். இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஜான்சி ராணி லட்சுமி பாய், சகோதரி நிவேதிதை, டாக்டர் அன்னிபெசன்ட் உட்பட பலர் அடங்குவர். இந்த வரிசையில் தமிழக வீர பெண்மணிகளில் முக்கியமானவர் வேலு நாச்சியார்.

ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகளாகப் பிறந்த இவர், கல்வியில் மட்டுமல்லாமல் கத்தி பயிற்சி, குதிரை ஏற்றம் போன்ற பல்வேறு திறமைகளில் ஜாம்பவானாக திகழ்ந்தார். சிவகங்கை சீமை முத்து வடுகநாத பெரிய தேவரை திருமணம் செய்து பட்டத்து ராணி ஆனார். காசி முதல் ராமேஸ்வரம் வரை பல தர்ம சத்திரங்களை நிறுவியது, காசியில் தருமபுர ஆதீன கிளையை நிறுவ வல்லக்குளம் என்ற கிராமத்தை வழங்கியது என பல தான தர்மங்களை செய்து தன் கணவரின் நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்தார்.

பூலித்தேவன், கட்டபொம்மன் போலவே முத்து வடுகநாதரும் ஆற்காடு நவாப்புக்கும் ஆங்கிலேயருக்கும் கப்பம் கட்ட மறுத்தார். அதன் காரணமாக ஆங்கிலேயர்கள் மற்றும் ஆற்காடு நவாப் படைகள் இணைந்து காளையார் கோவில் மீது 1772 போர் தொடுத்தன. கடுமையான போர் நடந்தாலும் ஆங்கிலேயரின் பீரங்கி தாக்குதலால் முத்து வடுகநாதர், இளையராணி கௌரி உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

காளையார் கோவில் தாக்குதலின் போது கொல்லங்குடியில் தங்கியிருந்த வேலு நாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியார் மருது சகோதரர்கள் பிரதானி தாண்டவராயன் பிள்ளையுடன் திண்டுக்கல் அருகே விருப்பாச்சி பாளையத்தில் தஞ்சம் புகுந்தார். விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கரும் அவர்களுக்கு தஞ்சம் கொடுத்தார். அங்கிருந்தபடியே சிவகங்கை சீமை நாட்டார்களுடன் ராணி வேலுநாச்சியார் கடித போக்குவரத்து தொடர்ந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. சிவகங்கை சீமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வீரர்கள் விருப்பாச்சி பாளையத்திற்கு குடியேறினர். அப்போது ஆங்கிலேயர்கள் மற்றும் ஆற்காடு நவாபை ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்ட ஹைதர் அலி, தனது படையை அனுப்பி உதவ, மருது சகோதரர்களுடன் சிவகங்கை மீது ராணி வேலுநாச்சியார் போர் தொடுத்தார். வழியில் தடுக்க வந்த நவாப் படைகள் தவிடு பொடியாகப்பட்டன.

இதையும் படியுங்கள்:
ஆங்கிலேய தளபதியின் சிலையை கோடரியால் வெட்டி உடைக்க முயன்ற வீரப்பெண் யார் தெரியுமா?
Velu Nachiyar

மதுரை அருகே கோச்சடை என்ற ஊரில் ஆங்கிலேயர்கள் மற்றும் நவாப் படைகளை வேலு நாச்சியாரின் படைகள் புறமுதுகிட்டு ஓடச்செய்தன. பின்னர் தனது படையை சிவகங்கை, திருப்பத்தூர், காளையார் கோவில் என மூன்று பிரிவுகளாக பிரித்த வேலுநாச்சியார், காளையார் கோவில் பிரிவிற்கு மருது சகோதரர்களையும், திருப்பத்தூர் பிரிவுக்கு கள்ளியம்பலம் என்பவரையும் தலைமை தாங்க வைத்தார். சிவகங்கை நோக்கி சென்ற படை பிரிவுக்கு தானே தலைமை தாங்கினார். ஒரே நேரத்தில் நடந்த மும்முனை தாக்குதலால் அந்நியப் படைகள் தலை தெறித்து ஓடின.

1780ல் சிவகங்கை சீமைக்கு தனது மகள் வெள்ளச்சி நாச்சியாரை இளவரசி ஆக்கிய வேலுநாச்சியார், அவரது பிரதிநிதியாக ஆட்சி செய்தார். 1789ல் வெள்ளச்சி நாச்சியார் அகால மரணம் அடைந்தார். அவரது கணவரும் தனது மருமகனுமான பெரிய உடைய தேவரை சிவகங்கை மன்னர் ஆக்கினார் ராணி வேலு நாச்சியார்.

அவரது படைத் தளபதிகளான மருது சகோதரர்கள், மெய் காப்பாளராக இருந்த குயிலி, கொல்லங்குடியில் ராணியை காட்டிக் கொடுக்காததால் வெட்டிக் கொல்லப்பட்ட சிறுமி உடையாள் என ஒவ்வொருவரின் பெயரும் சரித்திரத்தில் இன்றளவும் பேசப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com