பாராளுமன்றத்தில் தமிழ்ச் செங்கோல் – பின்னணி என்ன?

Tamil sengol in Parliament
Tamil sengol in Parliament

செய்தி: நேற்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளிடமிருந்து செங்கொல் மறுப்பு கூக்குரல் ஒலித்தது. ‘இது என்ன முடியாட்சியா, குடியாட்சிதானே?‘ என்பது அந்தக் குரலின் அடிநாதம்.

இந்த கூக்குரல் ஒரு புறம் இருக்க, இந்த செங்கோலுக்கான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்:

நம் நாட்டை ஆண்ட இங்கிலாந்தின் எலிஸபெத் அரசி மற்றும் அவருடைய இந்தியப் பிரதிநிதியான மவுன்ட்பேட்டன் பிரபு இருவரும், ஆட்சி மற்றும் அதிகாரத்தை தம் அரசப் பிடியிலிருந்து தளர்த்தி, நாட்டைக் குடியரசாகப் பிரகடனம் செய்ததன் அடையாளம்தான் செங்கோல்.

இந்த சரித்திரம் என்ன?

நம் நாட்டில் 1947, ஆகஸ்ட் 14ம் நாள் நள்ளிரவு, முடியாட்சி முடிவுக்கு வந்து குடியாட்சி குடியேறிய நேரம். இங்கிலாந்து அரசியாரின் அனுமதி பெற்ற மவுன்ட் பேட்டன், தம் பொறுப்புகளை ராஜிய சம்பிரதாயமாக, ஒப்பளிக்க விரும்பினார். எந்த முறையைக் கையாளலாம் என்று ஜவஹர்லால் நேருவிடம் யோசனை கேட்டார். இனிவரும் ஆண்டுகளில் சுதந்திர இந்தியாவின் எல்லாவகையான வளர்ச்சிக்கும் அன்றைய தினம் ஆரம்பம் என்பதால் இதை இந்திய சம்பிரதாயப்படி அணுகுவதுதான் சரியென்று நேருவுக்குப் பட்டது. ஆகவே அவர் மூதறிஞர் ராஜாஜியைக் கலந்தாலோசித்தார்.

Nehru with Sengol
Nehru with Sengol

Nehruதமிழ்நாட்டு சரித்திரப்படி புதிதாக அரியணை ஏறும் மன்னர் முந்தைய மன்னரிடமிருந்து செங்கோலைப் பெறுவது மரபாக இருந்தது. அது ஆட்சி மாற்றத்தின் அடையாளம்; நீதி நேர்மை வழுவாத ஆட்சியைத் தொடர்வதாக எடுத்துக் கொள்ளும் பதவிப் பிரமாணம். இவ்வாறு தமிழ் மன்னர்கள் செங்கோல் பிடித்து நேர்மையாக ஆட்சி புரிந்ததை நேருவிடம் விளக்கினார் ராஜாஜி. அவரும் அதை ஏற்று, செங்கோல் உருவாக்கும் பொறுப்பை ராஜாஜியிடமே ஒப்படைத்தார்.

அடுத்து தமிழகத்தில் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் அம்பலவாண தேசிக மூர்த்தி அவர்களை ராஜாஜி தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தார். இவரும் சென்னை நகைக்கடை உரிமையாளரான உம்மிடி பங்காரு செட்டியிடம் செங்கோல் தயாரித்துத் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி உச்சியில் நந்தி, கீழே அடுத்தடுத்து தாமரை, பீடம், கழுத்து, கோல் என்று ஐந்தடி உயரத்தில் வெள்ளியால் உருவாக்கி மேலே தங்க முலாம் பூசப்பட்ட செங்கோல் உருவாயிற்று.

திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரானான சடைச்சாமித் தம்பிரான், மாணிக்கம் ஓதுவார், ஆஸ்தான நாதஸ்வர வித்வான் டி.என். ராஜரத்தினம் பிள்ளை, மற்றும் மடத்து நிர்வாகிகள் சிலரோடு அவர்களுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக விமானத்தில் இந்த செங்கோலை தில்லிக்கு எடுத்துச் சென்றார்கள்.

அங்கே விழாவாகக் கொண்டாடப்பட்டு, செங்கோல் மவுன்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுக்கப்பட, அதை அவர் நேருவிடம் வழங்கினார். (இத்தருணத்தில், தான் வழக்கமாக அணியும் தொப்பி இன்றி, சாஸ்திரபூர்வமாக நேரு காட்சியளித்தார்) ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரம் முழங்க, திருஞான சம்பந்தர் இயற்றிய கோளறு திருப்பதிகம் பாடப்பெற்றது. அதாவது கோள்களால் ஏற்படும் பாதிப்புகளை விலக்கவோ அல்லது அவற்றிலிருந்து மீளும் மன உறுதி பெறவோ இந்தப் பதிகத்தைப் பாடுவது வழக்கம் என்ற தமிழக ஆன்மிகப் பண்பாடு அங்கே உணரப்பட்டது. செங்கோலை அளித்துப் பதிகமும் பாடியதால் கோள் பாதிப்புகளைக் களைந்து, கோன் (பிரதமர்) மீட்பான் என்ற நம்பிக்கையும் வலுப்பெற்றது. இந்தத் திருப்பதிகப் பாடல்களைப் பாடுவதால் என்னென்ன நற்பலன்கள் கிட்டும் என்பதை விளக்கும் பலச்ருதி என்ற பதினோராவது பாடலில் இடம்பெறும் ‘அடியார்கள் வானில் அரசாள்வார் ஆணை நமதே‘ என்ற சொற்றொடரானது, இந்தப் பதிகத்தைப் பாடுவோர் அனைவரும் இந்நாட்டின் மன்னர் என்று குடியரசுத் தத்துவமாகப் பொருள் தருகிறது.

Tamil sengol
Tamil sengol
இதையும் படியுங்கள்:
அண்டை நாடுகளை இணைக்கும் 7 ரயில் நிலையங்கள் தெரியுமா?
Tamil sengol in Parliament

விழாவில் பீகாரைச் சேர்ந்த திரு ராஜேந்திர பிரசாத் (இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்), ஆந்திரத்தைச் சேர்ந்த உம்மிடி நிறுவனத்தினர், தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தார் முன்னிலையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு செங்கோல் பெற, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய தேசிய கீதம் ஒவ்வொருவர் மனதிலும் ஒலித்த அந்தச் சிறப்பானது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு அப்போதே அடிகோலியது என்றே சொல்லலாம்.

75 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சரித்திரச் சம்பவம் மீண்டும் சென்ற ஆண்டு மே மாதம் 28ம் நாள் நிகழ்ந்தது. அப்போது போலவே இப்போதும் பின்னணியில் கோளறு திருப்பதிகமும், நாதஸ்வர இசையும் முழங்க, ஆதீன கர்த்தர் செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் அளிக்க, மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக கண்ணாடிப் பேழையில் அவர் அதனை நிறுவினார்.

கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியம், பௌத்தம் உள்ளிட்ட 12 மதங்களின் பிரதிநிதிகள் தத்தமது முறைப்படி பிரார்த்தனைகளை மேற்கொண்டார்கள்.

செம்மை, செழுமை, சீரான நீதி என்றெல்லாம் பொருள் தரும் செங்கோல், குடிமக்கள் யாவருக்கும் பாரபட்சமற்ற நீதியை வழங்கவல்லது; நாட்டை நிர்வகிக்கும் மக்கள் உறுப்பினர்களின் மனசாட்சியாகவும் விளங்கவல்லது.

நாட்டை ஆளும் தலைமகனும் சாதா குடிமகனும் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com