
ஆசிரியர் - மாணவர் உறவு என்பது அந்தக் காலத்தில் இருந்து உயர்வு பெற்ற ஒன்றாகும். அப்பொழுதெல்லாம் குழந்தைகளின் படிப்பைப் பற்றி, எந்த படிப்பை படித்தால் இவன் மேலோங்குவான் என்பதை பெற்றோர்களுக்கு விவரமாக குறிப்பிடுபவர்கள் ஆசிரியர்கள் தான். ஆசிரியர்களின் மீது பெற்றோர்களும், மாணவர்களும் அளவுக்கு அதிகமான மதிப்பையும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு நிகழ்வை இப்பதிவில் காண்போம்.
ஆன் சுலைவன் கண் பார்வை இழந்தவர். சிகிச்சை மூலம் மிகச் சிறிய அளவு கண் பார்வை பெற்றவர். விசேஷ கல்வியிலும் மிகச் சாதாரணமாக பயிற்சி பெற்றவர். இவர் கண் பார்வை இழந்த, காது கேளாத வாய் பேச முடியாத 7 வயது ஹெலன் ஹெல்லருக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ஹெலன் தனக்குள் எரிமலையாக பொங்கி எழும் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடியாத சிறுமியாக இருந்தார்.
ஹெலன் சாப்பிடும் போது தன் வீட்டில் உள்ள அனைவரது சாப்பாட்டு கோப்பைகளிலும் தன் விரல்களை வைத்து சாப்பாடு எடுத்து உண்பதும், பின்பு அகோப்பைகளை எடுத்து தூக்கி வீசி எறிந்து உடைப்பதும் அவரது வழக்கமாக இருந்தது.
ஒரு முறை அவரது ஆசிரியரான ஆன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதும் அதையே செய்ய முயற்சி செய்தபோது, ஹெலனின் கையை அவர் தட்டி விட்டார். இச்செயல் ஹெலனின் பெற்றோருக்கு கோபத்தை உண்டாக்கியது. அவர்கள் சாப்பாட்டு அறையை விட்டு வெளியேறினார்கள். ஆன் கதவை பூட்டிவிட்டு தனது சாப்பாட்டை தொடர்ந்தார். அவரது மன உறுதிக்கு ஏற்பட்ட முதலாவது சோதனை இதுதான்.
அப்பொழுது ஹெலன் நிலத்தில் புரண்டு அழுததோடு காலால் ஆன்னை உதைத்தும் அழிச்சாட்டியம் பிடித்தார். இது எதையும் கண்டுகொள்ளாமலே இருந்தார் ஆன். திடீரென ஹெலன் தனது பெற்றோரை சாப்பாட்டறையில் தேடினார். அவர்கள் இல்லாததால் ஆவேசம் கொண்டு பின்னர் அமைதியானார். உணவை உட்கொள்ள தொடங்கியபோது ஸ்பூனை கொடுத்தார். ஹெலன் அந்த ஸ்பூனால் ஆனின் தலையை அடித்து விட்டார். மன உறுதிக்கான அடுத்த சோதனையாக ஆனுக்கு இது மாறியது.
ஹெலனின் மனம் குன்றாதபடியும் அவளின் சுயமதிப்பு பாதிக்காத படியும் அவளை ஒழுங்குக்கு கொண்டு வருவதே எனது முதலாவது பணி. படிப்படியாக அவளது அன்பைப் பெறுவேன் என்று தன் வீட்டிற்கு ஆன் கடிதம் எழுதினார்.
பிறகு அருகாமையில் உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்று ஓடிப் பிடித்து விளையாடிய போது ஹெலனின் மாற்றத்தை கவனித்தார்.
ஹெலன் வாழ்கையில் முதலாவது மைல் கல் போல ஒரு சொல்லை உச்சரித்தார். அவரில் மறைந்திருந்த மொழி ஆற்றல் வேகமாக வெளிப்படத் தொடங்கியது. ஆன்னின் நுண்ணறிவும், ஆற்றலுமே நிகழ்ந்த இந்த அதிசயத்திற்கு மூல காரணமாகியது.
மனிதருக்குள் இருக்கும் வித்தியாசமான திறமைகளை, மன மாற்றங்களை, மனநிலைகளை, உற்சாகப்படுத்தக்கூடிய வழிமுறைகளை , விருப்பங்களை, அபிலாசைகளை, நோக்கங்களை எல்லாம் அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலை உள்ளடக்கியது தான் பிறரை உணர்ந்து விளங்கும் நுண்ணறிவு என்பது. இதை ஆங்கிலத்தில் Interpersonal Intelligence என்பர்.
இந்த ஆற்றல் மேலோங்கி இருப்பவர்கள் மற்றவர்களில் மறைந்து கிடக்கும் ஆற்றலை அறிந்து விடுவார்கள். இவர்கள் இருவரின் வரலாற்றை நோக்கும் போது மொழியை மட்டுமே மையப்படுத்தியதல்ல. ஒருவரது உட்பார்வை இதில் முக்கிய பங்கு அளிக்கிறது . இந்த Interpersonal Intelligence உடையவர்கள் சாதித்ததை ஒரு பட்டியல் போடலாம். அதற்கு முதன் முதல் எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் இவர்கள் இருவருமே.
இது போன்ற கதைகளையும் கற்று தெரிந்தால் தான் ஒரு ஆசிரியரின் அறப்பணி என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். அது கலை இலக்கியத்தோடு எப்படி சம்பந்தப்பட்டது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.