கடவுளுக்கான பிரசாதத்தில் சுண்டல், லட்டு, பொறி, வாழைப்பழம் போன்ற அனைத்தையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த மக்கள் விநாயகருக்கு சிவப்பு ஃபான்டா வைக்கிறார்களாம். பாருங்களேன்…
உலகம் நவீனமயம் ஆக்கப்பட்டத்திலிருந்து ஏராளமான மாற்றங்களை நாம் அனைத்திலுமே பார்க்கலாம். அதேபோல், கோவில் பிரசாதத்தைப் பொறுத்தமட்டில், சுண்டல், கஷாயம், பொங்கல், அனைவருக்கும் பிடித்த புலி சாதம் என்பதிலிருந்து, இன்று ஃப்ரைட் ரைஸ், வர காபி , பீட்ஸா வரை மாறிவிட்டது. காலத்தால் ஏற்பட்ட மாற்றங்களில் அறிவியல்மாற்றம் உகந்ததுதான். ஆனால், பக்தி விஷயத்தில் இது சரியானதா? என்ற கேள்வி எழுவது சகஜம்தான். இங்கு சரியா? தவறா? என்பது விஷயமல்ல. அவர்களின் அந்த முறையைப் பற்றியும், அதை ஏன் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பற்றியும், தெரிந்துக்கொள்வதுதான் சுவாரசியமானது.
அன்றைய காலத்தில் பாரத நாட்டில் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நேப்பாளம், தாய்லாந்து போன்ற நாடுகளும் அடங்கும். சிலர் தாய்லாந்து, பாரதத்தின் பகுதியாக இருக்கவில்லை என்று கூறுகிறார்கள். எது எப்படியோ? இரு நாடுகளும் கலாச்சாரத்தில் ஒத்தது என்பதைக் கட்டாயம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஏனெனில், ஆதாரங்கள் ஏராளம். தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே கலை, கலாச்சாரம், பாரம்பரியம், கடவுள்கள் என அனைத்திலும் பல ஒற்றுமைகளைப் பார்க்கலாம். ஆம்! நீங்கள் கணிப்பது சரிதான். தாய்லாந்தில் உள்ள தாய் மக்களே இந்த விசித்திர முறையை பின்பற்றுகிறார்கள்.
பண்டைய இந்தியாவில் சில கடவுள்களுக்கு உயிர்பலி கொடுத்து ரத்தத்தைப் படைக்கும் வழக்கம் இருந்து வந்தது என்று நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். ஆனால், காலங்கள் மாற மாற மனிதர்களையும் சில விலங்குகளையும் பலியிடக் கூடாது என்ற சட்டம் வந்தது. இதனையடுத்து ஆடு, கோழி போன்ற உயிர்கள் மட்டுமே பலியிடப்பட்டன.
இந்த விஷயத்தின் அடிப்படையில்தான், விநாயகருக்கு ரெட் ஃபான்டா படைக்கும் வழக்கம் தோன்றியது. ஆம்! சிவப்பு ரத்தத்தைப் போலவே இருக்கும் ஒன்றை கடவுளுக்கு வைக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர். அதன்விளைவாகத்தான், சிவப்பு ஃபான்டாவை கடவுளுக்குப் படைக்க ஆரம்பித்தனர். குறிப்பாக, அவர்களுடைய முதன்மை கடவுளான விநாயகருக்கு சிவப்பு ஃபான்டாவைப் பிரசாதமாகப் படைத்து வருகின்றனர். சிலசமயம் அதனுடன் இரண்டு முட்டைகளும் படைக்கப்படுகின்றன.
நமக்கு விநாயகர் என்றால், எப்படி மோதகம் நினைவுக்கு வருமோ? அதேபோல் அவர்களுக்கு ரெட் ஃபான்டாதான் நினைவுக்கு வரும்.
இப்போதும் நீங்கள் தாய்லாந்து சென்றால், மால்கள் போன்ற பொது இடங்களில் இருக்கும் விநாயகருக்கு முன் ஃபான்டா வைக்கபட்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஒருவேளை விநாயகருக்கும் ஃபான்டா பிடித்துப்போயிருக்குமோ? இருக்கும்ம்ம்ம்….