
இந்தியாவில் "கோயில் யாருக்கு சொந்தம்? தேரை யார் முதலில் இழுப்பது? கோயிலில் முதல் மரியாதை யார் வாங்குவது?" போன்ற விஷயங்களுக்கு கலவரம், வன்முறை எல்லாம் நடைபெற்றுள்ளன. ஆனால், வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஹிந்து மதக் கோயிலுக்காக இரண்டு புத்தமத நாடுகள் போர் செய்வது பற்றி தெரியுமா? இது இன்று நேற்று நடைபெறும் சண்டையல்ல. பல நூற்றாண்டுகளாக கோயில் மீது உரிமை கோரி பல போர்கள் நடந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல், தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையில் எல்லைச் சண்டை நடைபெற்று வந்தது.
இந்த இரண்டு அண்டை நாடுகளுக்கும் இடையில் 900 கிமீ எல்லை உள்ளது. இந்த எல்லையில் ஒரு சிவன் கோயில் அமைந்துள்ளது.
தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு நாடுகளும் இந்தக் கோயிலுக்கு உரிமை கொண்டாடுகின்றன. ஜூலை 25 அன்று, கம்போடியா இராணுவம் தாய்லாந்தின் இராணுவத் தளங்களைத் தாக்கியது. இந்த தாக்குதலில் 16 தாய்லாந்து குடிமக்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக தாய்லாந்து F-16 விமானங்களை பயன்படுத்தி கம்போடியாவின் மீது தாக்குதலை நடத்தியது. இந்த போரின் காரணமாக எல்லையோர கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த இரு நாடுகளுக்கும் இடையில் சீனா சமாதான பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. ஆனால் , இரண்டு நாடுகளும் சீனாவின் மத்தியஸ்தத்தை புறக்கணித்து விட்டன.
நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வழக்கம் போல தாய்லாந்து - கம்போடியா போரை நிறுத்த வலியுறுத்தினார். அவ்வாறு நிறுத்தாவிட்டால் அமெரிக்கா வர்த்தகம் செய்வதை நிறுத்தும் என்று எச்சரித்தார். இந்நிலையில் மலேசிய பிரதமர் அன்வர் இரு நாடுகளுக்கும் இடையில் சமரசம் பேசி போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். அதை இரண்டு நாடுகளும் ஏற்று போரை நிறுத்தி விட்டன.
போருக்கான காரணம்... ?
கம்போடியா அதன் பாரம்பரிய கட்டடக் கலைக்கு உலகப் புகழ்பெற்றது. அதன் அடையாளமாக உலகின் மிகப் பிரம்மாண்டமான அங்கோர்வாட் கோயில் உள்ளது. இந்த கோயில் மட்டுமல்லாது கம்போடியா முழுவதும் சிறிய ஹிந்து கோயில்களும் உள்ளன. கம்போடிய மன்னர்கள் தமிழ் மன்னர்களின் கலப்பு வம்சாவளியில் வந்தவர்கள்.
கம்போடியாவின் முக்கிய வருமானமே ஹிந்துக் கோயில்களை பார்க்க வரும் சுற்றுலாகாரர்கள் மூலம் பெறுவது தான். அங்கோர்வாட் கோயில் போல பிரேய விஹார் சிவன் கோயிலும் உலகளவில் பிரசித்தி பெற்றது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் கம்போடியாவின் செழுமையான கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. கம்போடியா மற்றும் தாய்லாந்து எல்லையில் உள்ள டாங்கிரெக் மலைகளின் மீது பிரேய விஹார் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் கட்டும் பணி 11 ஆம் நூற்றாண்டில் மன்னர் முதலாம் சூரியவர்மனால் தொடங்கப்பட்டு பின்னர் இரண்டாம் சூரியவர்மனால் முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் அற்புதமான கட்டடக்கலை கெமர் மன்னர்களின் கலைநயத்திற்கு பெரிய சான்றாக இருக்கிறது.
கோயிலின் பெரும்பகுதி கம்போடியா எல்லையில் இருந்தாலும் , வடக்கு வாசல் மட்டும் தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ளது.
கோயிலின் கருவறையில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். பல இந்து கடவுளர்களின் சிலைகளும் கோயிலில் நிறுவப்பட்டுள்ளன. கோயில் முழுக்க இந்து புராண காட்சிகள் சுவர்களின் செதுக்கப்பட்டுள்ளது. கோயில் கோபுரங்களிலும் மிகவும் அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன.
பல நூற்றாண்டுகளாக பிரேய விஹார் சிவன் மீது தாய்லாந்து மக்களுக்கு ஈர்ப்பு இருக்கிறது. தாய்லாந்து மற்றும் கம்போடியா புத்தமத நாடுகளாக இருந்தாலும் ஹிந்து கடவுள்களையும் வழிபடுகின்றனர். கம்போடியாவை விட தாய்லாந்து ஆழமான ஹிந்து மதப்பற்றை கொண்டுள்ளது. இதன் காரணமாக பல நூற்றாண்டுகளாக சிவன் கோயிலுக்காக தாய்லாந்து உரிமை கோரி போர் புரிகிறது.
1962ஆம் ஆண்டு பிரேய விஹார் கோயில் உரிமை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சர்வதேச நீதிமன்றம் அக்கோயில் கம்போடியாவிற்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது. ஆனாலும் அதற்கு பின்னரும் அவ்வப்போது கோயில் தொடர்பாக சண்டைகள் ஏற்பட்டு வருகின்றன. 2008ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக பிரேய விஹார் கோயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.