இந்தியாவில் பாலைவனம் என்றதும் நம் நினைவிற்கு வருவது ‘தார்’ பாலைவனம் தான். ஆனால் கர்நாடகாவில் ஒரு குட்டி பாலைவனம் இருக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதுவும் அந்த பாலைவனம் ஒரு பெண்ணின் சாபத்தால் உருவானது என்றால் ஆச்சர்யமாகதானே உள்ளது. இந்த பதிவில் அதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 'தலக்காடு', மைசூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் காவேரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. பாலைவனம் போல காட்சித்தரும் இந்த ஊரில் உள்ள கோவில்களும் மணலால் நிரம்பியுள்ளது. இவ்விடத்தை தென்னிந்தியாவில் உள்ள பாலைவனம் என்றே கூறலாம்.
ஒருமுறை 'சோமதத்தா' என்றொரு துறவி, இவ்விடத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்துள்ளார். அவர் திரும்பி செல்லும் வழியில் சோமதத்தாவையும் அவரின் சீடர்களையும் காட்டு யானைகள் கொன்று விடுகின்றது. சோமதத்தா யானையாக மறுபிறவி எடுத்து அங்குள்ள ஒருமரத்தில் வாசம் செய்யும் சிவபெருமானை தரிசித்து கொண்டு வருகிறது. அச்சமயம் மரம் வெட்டுவதற்காக தல, காடு என்னும் இரு சகோதரர்கள் வருகிறார்கள்.
அவர்கள் வெட்டிய மரத்தை யானை வழிபடுவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். பிறகு மரத்தை வெட்டுவதை நிறுத்த சொல்லி அசரீரி கேட்க, அவர்களும் நிறுத்தி விடுகிறார்கள். கடைசியில் அனைவருமே மோட்சம் அடைகிறார்கள் என்பதே கதை. இதனாலேயே இவ்விடத்திற்கு தலக்காடு என்று பெயர் வந்தது. சோழர்கள் தலக்காட்டை 11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த போது, ‘ராஜபுரா’ என்று அழைத்தார்கள்.
விஜயநகர பேரரசு தலக்காட்டை ஆட்சி செய்த காலம், ஸ்ரீரங்கப்பட்டினத்தை விஜயநகர பேரரசான ஸ்ரீரங்கய்யா ஆட்சி புரிந்து வந்தார். ஸ்ரீரங்கய்யாவின் உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் தலக்காட்டில் உள்ள வைதீஸ்வரர் கோவிலை தரிசிக்க விரும்பினார். அச்சமயம் அவருடைய இரண்டாவது மனைவியான அலமேலம்மாவை ராஜ்ஜியத்தைப் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு சென்றார்.
பிறகு சிறிது காலத்தில் தன்னுடைய கணவர் இறக்கும் தருவாயில் இருப்பதை கேள்விப்பட்டு, அலமேலம்மா தலக்காட்டிற்கு அவரை காண செல்கிறார். அப்போது தன்னுடைய ஆட்சி பொறுப்பை மைசூர் ராஜா உடையாரிடம் கொடுத்துவிட்டு செல்கிறார். ஆனால் ஸ்ரீரங்கய்யா இறந்துவிடுகிறார்.
ராஜா உடையாருக்கு ராணியின் நகை மீதும், ஆட்சி மீதும் ஆசை வர அதை பறிக்க முயற்சிக்கிறார். இதனால் இவற்றை காப்பாற்ற ராணி ஆற்றில் நகையுடன் குதித்து விடுகிறார். அதற்கு முன் ஒரு சாபம் கொடுக்கிறார். அதாவது, "தலக்காடு மண்ணாகட்டும், மாலங்கி நீர்ச்சுழல் ஆகட்டும். மைசூர் ராஜாவிற்கு பிள்ளைபேரு இல்லாமல் போகட்டும்" என்பதே அந்த சாபமாகும். இன்றுவரை இச்சாபம் இருப்பதாக நம்பப்படுகிறது. இன்றும் தலக்காடு பாலைவனமாகவேயுள்ளது.
இப்போதும் தலக்காடு மணலில் புதைந்துதான் கிடக்கிறது. தென்மேற்கு பருவக்காலத்தால் ஏற்படும் மணல் திட்டுகளால் இங்குள்ள மக்களும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். தலக்காட்டில் 12 வருடத்திற்கு ஒருமுறை பஞ்சலிங்க தரிசன திருவிழா நடைப்பெறும். இந்த திருவிழா 5 நாட்கள் நடைப்பெறும் அதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலக்காட்டில் உள்ள ஐந்து சிவன் கோவில்கள் என்னவென்றால், பாதாலேஸ்வரர் கோவில், மருலேஸ்வரர் கோவில், அர்கேஸ்வரர் கோவில், வைத்தியநாதேஸ்வரர் கோவில், மல்லிகார்ஜூனா கோவிலாகும்.