திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் மேற்கு பிராகாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆறுமுகநயினார் சன்னிதி முன் மண்டபத்தில் தாளங்களை விளக்கும் தாளச்சக்கரம் ஒன்று பதிப்பிக்கப்பட்டுள்ளது. சூளாதி சப்த தாளம் முப்பத்தைந்து தாள வகை இந்த சக்கரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சக்கரம் தாமரை வடிவமாக அமைந்துள்ளது. கல்லில் தாமரை இதழ்களில் தாளத்தில் ஆறு அங்க அடையாளங்களும் லகுவின் ஜாதி பேதங்களால் உண்டான முப்பத்தைந்து தாளங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சக்கரத்தில் காணப்படும் லகுவின் ஜாதி பேதங்களின் அடையாளங்கள் தற்கால வடிவத்திற்கு மாறுபட்டு இருக்கின்றன.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் ஆலயத்தின் மணிமண்டபத்தில் ஒரே பெருங்கல்லில் நாற்பத்தி எட்டு சிறு தூண்களைக் கொண்ட கூட்டமாக அமைந்துள்ள இசைத்தூண்கள் சிறப்புடையன. அவ்வாறு கீழ் பக்கம் நான்கும் மேற்பக்கம் நான்கும் வட, தென்பக்கங்களில் இரண்டுமாக பத்து தூண் கூட்டங்கள் உள்ளன. அவற்றில் மொத்தம் நூற்றி அறுபத்தி ஒன்று தூண்கள் உள்ளன. அவை அனைத்தும் ஒலி தரக்கூடியன என்றாலும், முதல் தொகுதி தூண்களே இனிய நாதமுள்ளவை. பலவித ஓசை விகற்பங்களை உடைய இந்தத் தூண்கள் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தவை.
இசைத் தூண்களை சுருதி தூண்கள், கன தூண்கள், லயத் தூண்கள் என்று மூன்று விதமாகப் பிரிக்கலாம். சுருதி தூண்கள் பாடுவதற்கு ஆதாரமான சுருதியை கொடுக்கும். இதனை ஆதாரமாகக் கொண்டு தேவார இன்னிசைகளையும் வேதங்களையும் பாடினார்கள்.
கன தூண்கள் சில ராகங்களின் அவரோக ஸ்வரங்களை தருவனவாக இருக்கின்றன. உதாரணமாக, இத்தூண்கள் கரகரப்பிரியா, ஹரிகாம்போதி ராகங்களின் ஸ்வரங்களை பஞ்சமம் வரை கொடுக்கின்றன. லய தூண்கள் பாடுவதற்கு தாள வாத்தியமாக அமைந்துள்ளன. சோடச உபசாரத்தில் நாட்டியமாடுகின்றவர்களுக்கு உரிய ஜதிகளை இதன் லய தூண்களில் வாசிக்கலாம்.
இந்த இசைத் தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர். இந்த ஒவ்வொரு சிறிய தூண்களைத் தட்டினால் சப்த சுரங்களான தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது. சில பெரிய தூண்களை சுற்றி இடம்பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது. இதில் பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும் அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின் இசையை தருகின்றது. இந்த இசைத் தூண்களை ‘மிடறு’ என்று அழைத்தார்கள்.
மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான சரியான சுரம் கிடைக்கும். தமிழ்நாட்டில் இசைத் தூண்கள் அமைந்துள்ள கோயில்களில் காலத்தால் முற்பட்ட இசைத் தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.