துங்கும்போது நமக்கு வரும் கனவுகள் நல்ல விஷயங்கள் மற்றும் தீய விஷயங்கள் இரண்டையுமே சொல்லக்கூடியவை. கனவு என்பது நம் வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருந்துக் கொள்வதற்கு நமக்குச் சொல்லப்படும் அறிகுறியாகும். எனவே, நல்ல கனவுகள் வந்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வதும், தீய கனவுகள் வந்தால் எச்சரிக்கையாக இருந்துக் கொள்வதும் நல்லது. கனவில் இறந்தவர்கள் வந்தால் என்ன பலன் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
உங்கள் கனவில் இறந்துபோன தாய், தந்தையர் வந்தால் கனவு கண்டவருக்கு வரவிருக்கும் ஆபத்து அல்லது இடையூறை சுட்டிக்காட்டுவதற்காக வந்திருப்பதாகப் பொருள். இது பலரின் வாழ்க்கையில் நடந்த உண்மை அனுபவமாகும்.
இறந்த தாய் கனவில் வந்தால், உங்கள் குடும்பத்தில் யாருக்கோ பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று அர்த்தம். இதுவே, இறந்த தந்தை கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாத பிரச்னையை விரைவில் முடிப்பீர்கள் என்று பொருள்.
நாமே இறந்து விட்டது போன்ற கனவு கண்டால், நன்மையேயாகும். வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படப்போகிறது என்று அர்த்தம். மேலும், ஆயுள் கூடும் என்று சொல்வார்கள். இறந்தவர்கள் கனவில் தோன்றி நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால், வாழ்வில் எல்லாவித நன்மைகளும் ஏற்படும்.
இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்து அழுதாலோ அல்லது கோபமாக பேசினாலோ அவர்களுக்கு ஏதோ நிறைவேறாத ஆசையிருப்பதாக அர்த்தம்.
நோய்வாய்ப்பட்டு இறந்த ஒருவர் உங்கள் கனவில் வந்து ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் பேசினால், அவர்கள் நல்ல இடத்தில் இருப்பதாகப் பொருள்.
இறந்துபோனவர்களை நாம் தூக்கி சுமந்து செல்வதுபோல கனவு கண்டால், நமக்கு நன்மைகள் வந்து சேரும். இதுவே, இறந்தவர்கள் நம் வீட்டில் படுத்து உறங்குவது போல கனவு கண்டால், பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள். இறந்தவர்கள் நம்முடன் அமர்ந்து சாப்பிடுவது போல கனவு கண்டால், நற்புகழும், செல்வ செழிப்பும் ஏற்படும்.
இறந்தவர்கள் நமக்கு உணவு பரிமாறுவது போல கனவு கண்டால், மகிழ்ச்சியான செய்திகள் வரும், தடைப்பட்ட காரியம் தடை விலகி சுபமாக நடக்கும். சிலருக்கு இறந்த உயிரினங்கள் கனவில் வந்தால் கவலை பறந்து போகும், மனதில் நிம்மதி பிறக்கும் என்று பொருள்.