பெங்களூரு விதான சௌதா - அரங்கம் உருவான விவரம் தெரியுமா?

Vidhana Soudha
Vidhana Soudha
Published on

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவின் குறிப்பிடத் தக்க அடையாளங்களில் ஒன்று – விதான சௌதா. அதாவது மாநில சட்ட மன்ற மாளிகை. 

பிரமாண்டமான இதன் வெளித் தோற்றத்தைக் கண்டு நாம் பிரமித்திருப்போம். கலைத்திறன் மிக்க கட்டட நேர்த்தியைக் கண்டு வியந்திருப்போம். ஆனால் இந்த அரங்கம் உருவான விவரம் தெரியுமா?

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, இந்தியாவிலேயே இதுதான் மிகப் பெரிய சட்டசபை கூடம். 1951ம் ஆண்டு, அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அப்போதிலிருந்து நான்கு ஆண்டுகள் ஆயின இந்த கட்டமைப்பு முழுமை பெற. ஆமாம் 1956ம் ஆண்டுதான் பூர்தியாயிற்று.

மைசூர் மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த கெங்கல் ஹனுமந்த்தைய்யா என்பவரின் முயற்சிதான்  விதான சௌதா மிகவும் துரிதமாக, குறுகிய காலத்தில்  உருவாக முக்கிய காரணம். 

இந்த மாளிகை உருவாக ஐந்தாயிரம் பேர் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் பெங்களூரு மத்திய சிறைச்சாலை கைதிகள்! அரசியல் மற்றும் சமுதாயக் குற்றங்களுக்காக பல்வேறு வழக்குகளின் தீர்ப்புப்படி இவ்வாறு தண்டனை அனுபவித்து வந்தவர்களை கட்டிடப் பணியின் அமர்த்த உத்தரவிட்டவர் ஹனுமந்த்தைய்யாதான். இவர்களுக்கு ஊதியம் மட்டுமல்லாமல், மாளிகை முழுமை பெற்ற உடனேயே விடுதலையும் செய்யப்படுவார்கள் என்று ஊக்கமும் அளிக்கப்பட்டது.

இந்த ‘கைதி‘ பணியாளர்கள் தவிர, சிற்பிகள், மரவேலைப்பாடு வல்லுநர்கள், கட்டட நிபுணர்கள் என்று கூடுதலாக 1500 பேரும் சேர்ந்து உழைத்திருக்கிறார்கள். 

தரைத் தளத்தில் மூன்று விசாலமான பகுதிகள் என்று கொண்ட இந்த மாளிகையின் மொத்தப் பரப்பு, 5,05,505 சதுர அடிகள்; மொத்த வளாகமும் 60 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது.  ஆங்கிலேய, திராவிட, இந்தோ-இஸ்லாமியக் கட்டடக் கலை பாணிகளின் கலவையாக நிமிர்ந்து நிற்கிறது.

பெங்களூரு பகுதியிலே கிடைத்த ‘பெங்களூர் கிரானைடு‘களைச் செதுக்கி, உருவாக்கப்பட்டது. இதோடு இளஞ்சிவப்பு மகாடி கற்கள் மற்றும் கறுப்பு நிற துருவெக்கரே கற்களும் சேர்ந்துகொண்டு எழில் கூட்டியிருக்கின்றன. 

இந்த மாளிகையின் அப்போதைய கட்டுமானச் செலவு, பதினேழரை கோடி ரூபாய். ஆனால் இப்போது இதற்கான வருடாந்திர பராமரிப்புச் செலவு மட்டும் இருபது கோடி ரூபாய்!

இதையும் படியுங்கள்:
சிற்பக் கலைகளின் சுரங்கம்; ஆகச்சிறந்த பொக்கிஷம் - குடுமியான்மலை சிற்பங்கள்!
Vidhana Soudha

இந்த மாளிகையின் முன்னால் ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கிறது: ‘‘அரசாங்க சேவை என்பது ஆண்டவனுக்கான சேவை‘‘ (Government’s work is God’s work). பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட அடாரி கச்சேரி (உயர் நீதிமன்றம்) கட்டடத்தின் வாமன ரூபம் என்று இந்த மாளிகையை வர்ணிக்கலாம். 

சட்ட மன்ற வளாகத்தில் இடம் பெற்றிருக்கும் மரப் பொருட்கள் எல்லாம் முற்றிலும் சந்தன மரத்தால் ஆனவை. சபைத் தலைவரின் நாற்காலி ‘மைசூர் ரோஸ்வுட்‘ மரத்தால் உருவானது. மாளிகையின் மேற்கு வெளிப்புற வடிவமைப்பு ராஜஸ்தன் அரண்மனை போன்ற தோற்றம் அளிக்கிறது. வடக்குப் பகுதி, மைசூர் கிருஷ்ண ராஜ சாகர் அணையைப் போன்ற வடிவம் கொண்டிருக்கிறது. 

விசேஷ தினங்களில் மட்டுமன்றி, எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரவில் இந்த மாளிகை ஜகஜ்ஜோதியாக ஒளிர்கிறது. 

இந்த விதான சௌதா கட்டட பாணியிலேயே பெல்காம் என்ற பெலகவி மாவட்டத்தில் ‘விகாஸ் சௌதா‘, ‘ஸ்வர்ண சௌதா‘ ஆகிய கட்டடங்களும் காட்சி தருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com