சிற்பக் கலைகளின் சுரங்கம்; ஆகச்சிறந்த பொக்கிஷம் - குடுமியான்மலை சிற்பங்கள்!

Kudumiyanmalai Sculptures
Kudumiyanmalai Sculptures
Published on

ஆயக்கலைகள் 64 இல் வரலாற்றை தாங்கி பிடிப்பதில் எப்போதும் சிற்பக் கலைகளுக்கு ஒரு தனித்துவமான பங்கு உண்டு. ஏனெனில் ஒருமுறை வரலாற்றை சிற்பமாக வடித்து விட்டால் அவ்வளவு எளிதில் அதனை மற்றவர்களால் கைப்பற்றவோ, அழிக்கவோ முடியாது. அந்த வகையில் இந்தியாவில் வாழ்ந்த  பல்வேறு அரசர்களின் சிற்ப வேலைபாடுகளை கம்பீரமாக போற்றும் வகையில் இன்று வரை நின்று கொண்டிருப்பது குடுமியான்மலை சிற்பங்கள். முதன்முதலாக கர்நாடக சங்கீதத்திற்கு கல்வெட்டு வடித்தது முதல் வலம்புரி விநாயகர் சிற்பம் என பல்வேறு அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த குடுமியான்மலை சிற்பங்களை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குடுமியான்மலை. இந்தக் குடுமியான் மலையில்தான் குடுமி தேவர் சிவன் கோயில் அல்லது சிகாபுரீஸ்வரன் ஆலயம் என்று அழைக்கப்படக்கூடிய சிவன் ஆலயம் அமைந்துள்ளது. மலை குன்றின் அடிப்பகுதி, மேல் பகுதி என இந்த மலையை  சுற்றி மட்டும் மொத்தம் 4 கோயில்கள் உள்ளன.

குன்றின் அடிவாரத்தில்  சிகநாதசுவாமி கோவில் முழுவதும் பல்வேறு அழகிய நுணுக்கமான கலை நுட்பத்துடன் கூடிய  சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதைப் போலவே இதற்கு அருகில் இருக்கும் குடைவரை கோவிலில் கர்நாடக சங்கீத விதிகள் குறித்து இசை கல்வெட்டுகள்  வடிக்கப்பட்டுள்ளன. குன்றின் மேல் பகுதி முழுவதும் சமணர்  படுக்கைகள் அமைந்துள்ளன. தமிழர்களின் இருப்பையும் அவர்களின் வாழ்வியலையும் விளக்கும் வகையில் இந்த குடுமியான்மலை  முழுவதும் கிட்டத்தட்ட 120 கல்வெட்டுகள் அமைந்துள்ளன.

குகைக்கோயிலில் தென்பகுதியில் சங்கீத விதிகளை பற்றிய கல்வெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் இசையை பற்றிய அடிப்படை குறிப்புகளும், அடிப்படையான ராக அமைப்பு முறைகள், ஏழு ராகங்கள் பற்றிய  குறிப்புகள், ஏழு ஸ்வரங்களுக்கும் உரிய விதிமுறைகள் இப்படி இசையை பற்றிய பல்வேறு குறிப்புகள் பாலி கிரந்த மொழியில் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இசையின் மகத்துவத்தை போற்றும் வகையில் பல்வேறு கோவில்களில் இசை தூண்களும், இசை படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு இருந்தாலும் கூட, இசையைப் பற்றிய இவ்வளவு அடிப்படை விளக்கத்துடன் கூடிய கல்வெட்டுகள் இந்தியாவில் இங்கு மட்டும்தான் உள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை சுற்றிலும் கற்களால் ஆன கல் பந்தல்  அமைக்கப்பட்டுள்ளது மேலும் சிறப்பாகும்.

இங்குள்ள கோவிலுக்கு குடுமித் தேவர் சிவன் கோயில் என்று ஒரு பெயர் உண்டு. அதற்கு ஏற்ப கர்ப்ப கிரகத்தில் லிங்க வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள லிங்கத்திலும் குடுமி இருப்பது போன்றே அமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இங்குள்ள சிவபெருமான் குடுமித்தேவர் சிவபெருமான் என்று அழைக்கப்படுகிறார்.

குகையின் வாயிலில் இரண்டு புறமும் துவாரபாலகர்களின் சிலை சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் துவாரபாலகர்கள் சிலை வைப்பது வழக்கம்தான் என்றாலும் கூட இங்கு உள்ள துவாரபாலகர் சிலைகள் மட்டுமே சிரித்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற துவாரபாலகர்களின் சிற்பங்கள் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள துவாரபாலகர் சிலைகள் குகைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன.

குன்றின் அடிவாரத்தில் கிழக்கு பகுதியில் அமைந்திருக்க கூடிய சிகானந்த சுவாமி கோவிலில் ஆயிரம் கால் மண்டபத்தில் இருக்கும் முகப்புத்தூணில் பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ராமாயண காட்சிகளை விளக்கும் வகையில் லட்சுமணனுக்காக அனுமன் மலையை பெயர்த்து எடுத்துச் செல்லும்  காட்சி, எளியவர்களை துன்புறுத்திய இரணியனை நரசிம்மர் வதம் செய்யும் காட்சி, ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று என்பதற்கு ஏற்ப முருகன் மயில் மீது அமர்ந்திருக்கும் காட்சி, ஒற்றை காலை தூக்கி ஆடும் விநாயகர் போன்றவை எல்லாம் சிற்பமாக தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் குகைகளை குடைந்து வலம்புரி விநாயகர் சிற்பமும் எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் - மண்டையோடு மர்மங்களும் அகழாய்வு அதிசயங்களும்!
Kudumiyanmalai Sculptures

வசந்த மண்டபத்தில் மன்மதன், ரதி போன்றவரின் சிற்பங்களும் உலகின் ஒட்டு மொத்த அழகையும் மொத்த உருவமாய் கொண்டு மோகினி வடிவம் எடுத்த விஷ்ணுவையும் சிற்பங்களாக செதுக்கியுள்ளனர். மேலும் 12 கைகளுடன் கூடிய  சண்முகநாதன், கருடன் மீது அமர்ந்து  பயணம் செய்யும் விஷ்ணு, வீரம் நிறைந்தவனாகவே இருந்தாலும் அதர்மத்தை கையில் எடுத்தால் அழிவு  நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையில் பத்து தலை ராவணன்  போன்றவரின் சிற்பங்கள் மிகவும் தத்துரூபமாக செதுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக எல்லா சிவன் கோயில்களும் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் இருக்கும். ஆனால் இந்த கோவிலில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் இல்லை. இதற்கு பதிலாக சுற்றுப்புற பிரகாரத்தில்  நின்று மலையைப் பார்த்தால் 63 நாயன்மார்களின் வடிவங்களும் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரே ரிஷபத்தில் சிவபெருமான், பார்வதி அமர்ந்திருப்பது போன்றும்,  63 நாயன்மார்களையும் பார்க்கும் வகையிலும்  வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு கலை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள குடுமியான்மலை சிற்பங்கள், சிற்பக் கலைகளை முழுமையாக கண்டு ரசிக்க விரும்புபவர்களுக்கு  ஒரு ஆகச்சிறந்த பொக்கிஷமாகவே இருக்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com