
அந்த காலத்தில் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படித்த மாணவர்களின் மிக முக்கியமான எழுது கருவிகள்தான் சிலேட்டும் பல்பமும். சப்பணமிட்டு அமர்ந்து, மடியில் சிலேட்டை வைத்துக் கொண்டு, இடது கையால் அந்த சிலேட்டு அசையாதபடி அணைத்துக் கொண்டு, வலது கை கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரலால் பல்பத்தைப் பற்றிக் கொண்டு எழுத, அந்த சிறிய கறுப்பான பலகை, வெளுப்பாக அறிவு ஞானத்துக்கு வழிகாட்டும்!
கொஞ்சம் தடிமனான வெண்மை நிற மாவு பலபம் மற்றும் மெல்லிய, பென்ஸில் கார்பன் போன்ற கறுப்பு நிற பலப்பமும் பயன்பட்டன. பல்பம் வெண்மையாகவோ, கறுப்பாகவோ இருந்தாலும் எழுத்துகள் மட்டும் பளிச்சென்று சலவை வெளுப்பாக ஒளிரும். காலணாவுக்கு (இப்போதைய நாணய மதிப்பில் ஒன்றரை பைசா) நான்கு பல்பம் கிடைக்கும். முற்றிலும் வெண்மையானதாக அல்லது மூன்று வண்ணங்கள் சேர்ந்ததாக, ஒவ்வொன்றும் சராசரியாக ஒரு சாண் (சுமார் 4 அங்குலம்) நீளம் கொண்டதாக இருக்கும். இந்த முழு பல்பத்தையும் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு எழுதும்போது சிலசமயம் அது உடைந்துவிடும். ஆனாலும் உடைந்த துண்டு கடைசியில் பொடியாகும்வரை பயன்படுத்துவது உண்டு. சிலர் சின்னச் சின்ன துண்டுகளாக அதை உடைத்து ஒரு டப்பாவில் போட்டு சேகரித்துக் கொள்வார்கள். சக மாணவர்களிடம் அந்த சேமிப்பைக் காட்டி பெருமைபட்டுக் கொள்ளவும் செய்வார்கள்.
சிலேட்டு மூன்று வகைகளில் கிடைத்தது. ஒன்று, மாவு சிலேட்டு. அதாவது மாக்கல்லால் உருவாக்கப்பட்டது. சதுரமாக சுமார் கால் அங்குல பருமனுக்கு வெட்டப்பட்ட இந்தப் பலகையைச் சுற்றி மரத்தால் சட்டம் போடப்பட்டிருக்கும். (இதற்குப் பின்னரே பிளாஸ்டிக் ஃப்ரேம் வந்தது) இந்தப் பலகையில் எழுதியதை ஈரத்துணியால் துடைத்துவிட்டு, சற்று காய்ந்ததும் மறுபடி அதில் எழுதலாம். இதை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். கீழே விழுந்தால் அவ்வளவுதான், சில்லுச் சில்லாக உடைந்துவிடும்.
அட்டை சிலேட்டு என்று இன்னொரு வகை. இது உடையாது என்றாலும், ஈரத் துணியால் எழுதியதைத் துடைத்தால், ஈரத்தால் அட்டை உப்பிவிடும்.
தகர சிலேட்டு மூன்றாவது சாய்ஸ். இதிலும் ஒரு சிக்கல். நாளாக ஆக, தகரத்தின் இரு பக்கமும் மழுங்கி விடும். ஆதலால், பல்ப்பத்தால் எழுதினால் சிலசமயம் எழுத்துக்கு பதிலாக கீறல்தான் விழும்! அதுமட்டுமல்ல, மழை நீர் (பொதுவாக அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்துக்குப்போய் வரும்போது மழை பிடித்துக் கொண்டால், சிலேட்டைதான் தலைக்கு மேலே வைத்துக்கொண்டு மாணவர்கள் ஓடுவார்கள்) சிலேட்டின் ஓரங்களில் சட்டத்திற்குள் போய் தங்கிக் கொண்டு, தகர சிலேட்டைத் துருப்பிடிக்க வைத்து விடும்!
பல்பத்தைக் கொஞ்சம் தண்ணீரில் தோய்த்துக் கொண்டு மாவு சிலேட்டில் எழுதினால் அப்படியே பெயின்ட் அடித்தாற்போல பளிச்சென்று இருக்கும். சிலசமயம் இந்த எழுத்துகள் சட்டென அழியாது. அதனாலேயே ஆசிரியர் அந்த சிலேட்டிலேயே (வீட்டுக்) கணக்குப் பாடம் எழுதிக் கொடுப்பார். வீட்டிற்கு வந்தும் அழியாத அந்தப் பாடத்தின் விடையை பின்பக்கத்தில் மாணவன் எழுதிக் கொண்டுபோய் அவரிடம் காட்டுவான். சிலசமயம், துடுக்கான பிள்ளைகளின் தந்தை, அவன் பாடம் எழுதிய சிலேட்டுப் பக்கத்திலேயே ‘இவன் வீட்டில் பாடம் படித்தான்‘ என்று எழுதி கையொப்பமும் இடுவார்கள்! அப்போதுதான் ஆசிரியருக்கும் நிம்மதியாகும்.
மாவு சிலேட்டில் பல்ப எழுத்தை அழிக்க சிலர் சிறு ஸ்பாஞ்சை உபயோகிப்பார்கள். கிராமங்களில் கோவைக்காயைப் பயன்படுத்துவார்கள். அதைக் குறுக்கே வெட்டி, உள்ளிருக்கும் ஈரப்பசையால் எழுத்தை அழிப்பார்கள். சில பிள்ளைகள் ஆசிரியர் கவனிக்காத வண்ணம், தம் எச்சிலால் துடைத்து அழிப்பதும் உண்டு!
பலகையை ஊன்றி பார்த்து எழுதுவதால், நல்ல பார்வை, விரல் நுனிகளால் பல்பத்தைப் பிடித்து எழுதுவதால் நரம்பு பலப்படுதல், இவ்வாறு செயல்படும்போது மனமும், மூளையும் ஒருங்கிணைவதால், கலையாத கவனம் என்று பல நன்மைகளை தாங்களே அறியாமல் பெற்றார்கள் அன்றைய பாலக மாணவர்கள்.