சீனாவில் காகிதங்கள் எப்போதும் அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கின்றன.
சீனாவின் காகித வெட்டுக் கலை (Chinese Paper Cutting) என்பது, சீனப் பண்பாட்டின் மரபு வழியிலான நாட்டுப்புற கலைகளில் ஒன்றாக உள்ளது.
சீனாவில் உள்ள கிழக்கு ஹான் வம்சத்தைச் சேர்ந்த சாய் லுன் என்பவரால் முதலில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் காகித வெட்டுக் கலை, இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று கருதப்படுகிறது.
காகிதம் மிகவும் மலிவானதாக மாறியதால், காகித வெட்டுதல் சீன நாட்டுப்புற கலையின் மிக முக்கியமான வகைகளில் ஒன்றாக மாறியது. பின்னர், இந்தக் கலை வடிவம் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது. வெவ்வேறு பகுதிகள் தங்கள் சொந்தப் பண்பாட்டுப் பாணியை ஏற்றுக் கொண்டன.
இக்கலை வடிவங்கள் பெரும்பான்மையாக, கதவுகள் மற்றும் ஜன்னல்களை அலங்கரிக்கப் பயன்படுவதால், அவை சில நேரங்களில் சுங் ஹு, ஜன்னல் பூக்கள் அல்லது சாளர காகித வெட்டுக்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. மக்கள் காகிதக் கட்டைகளை ஜன்னல்களின் வெளிப்புறத்தில் ஒட்டினர். எனவே, வெளியே இருந்து வரும் வெளிச்சம் காகித வடிவமைபின் எதிர்மறை இடத்தின் வழியாக வீட்டினுள்ளே விழுகிறது.
காகித வெட்டு என்பது சீனாவின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றாகும். இதைப் புவியியல் வழியாக, தெற்கு மற்றும் வடக்குப் பாணியாகப் பிரிக்கலாம். தெற்குப் பாணி, சியாங்சு மாகாணத்தில் உள்ள யாங்ஜோ மற்றும் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள லெக்கிங்கின் படைப்புகளால் குறிப்பிடப்படுகிறது. இதில் தனித்துவமான மற்றும் அழகான வடிவமைப்புகள், நேர்த்தியான செதுக்குதல் மற்றும் சுவாரசியமான வடிவங்கள் உள்ளன.
சீனக் காகித வெட்டுக் கலை செய்முறைக்கு இரண்டு வழிகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று கத்தரிக்கோலையும், மற்றொன்று கத்திகளையும் பயன்படுத்திக் காகிதத்தை வெட்டும் முறையாகும்.
கத்தரிக்கோல் முறையில், பல காகிதத் துண்டுகள் (இரண்டு முதல் எட்டு எண்ணிக்கை வரை) ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. பின்னர் கூர்மையானக் கத்தரிக்கோலால் வெட்டப்படுகிறது.
கொழுப்பு மற்றும் சாம்பல் கலவையை உள்ளடக்கிய ஒப்பீட்டளவில் மென்மையான அஸ்திவாரத்தில் பல அடுக்குக் காகிதங்களை வைப்பதன் மூலம் கத்தி வெட்டல் வடிவமைக்கப்படுகிறது. ஒரு மாதிரியைப் பின்பற்றி, கலைஞர் ஒரு கூர்மையான கத்தியால் காகிதத்தில் மையக்கருத்தை வெட்டுகிறார். இது பொதுவாக செங்குத்தாக வைக்கப்படுகிறது. திறமையான கைவினைஞர்கள் கூட வெவ்வேறு வரைபடங்களை இந்த முறையில் செய்கின்றனர்.
வடக்குப் பாணி, முக்கியமாக ஏபெய் மாகாணத்தில் உள்ள யூக்ஸியன் மற்றும் ஃபெங்கிங் மற்றும் வடக்கு சேன்ஸ்கி, படைப்புகளால் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. இது, மிகைப்படுத்தப்பட்ட வடிவங்கள், வீரியம், தெளிவான சித்தரிப்புகள் மற்றும் மாறுபட்ட வடிவங்களைக் கொண்டுள்ளது.
சாளரக் காகித வெட்டுக்களில் மிகவும் பிரபலமானது பாரம்பரிய சீன கதைகளை அடிப்படையாகக் கொண்டது ஆகும். பெரும்பாலான நுகர்வோர்கள் விவசாயிகள் என்பதால், இதன் விலை குறைவாக உள்ளது. இதில், பொதுவாக விவசாயம், நூற்பு, மீன்பிடித்தல் மற்றும் கோழி வளர்ப்பை விவரிக்கும் கதைகள் காணப்படுகிறது.
சீனாவில் வழக்கமாக, கலைப்படைப்புகள் சிவப்புக் காகிதத்தால் செய்யப்படுகின்றன. ஏனெனில், சிவப்பு என்பது சீனப் பண்பாட்டில் பண்டிகைகள் மற்றும் மகிழ்ச்சியுடன் தொடர்புடையது. ஆனால், மற்ற வண்ணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, காகிதம் வெட்டும் கலைப்படைப்புகள் வசந்த விழா, திருமணங்கள் மற்றும் பிரசவம் போன்ற பண்டிகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று, காகித வெட்டல் முக்கியமான அலங்காரப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. அவை, வீடுகளில் சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள், நெடுவரிசைகள், கண்ணாடிகள், விளக்குகளில் அலங்காரமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் அவை பரிசுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. அல்லது பரிசுகளாக வழங்கப்படுகின்றன.
சீனாவில், நுழைவாயில்களில் அல்லது அதற்கு அருகில் ஒட்டப்பட்ட காகித வடிவமைப்புகள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது.