
நமது முன்னோர்கள் நன்கு சிந்தித்து விழா, பண்டிகை, விரதம் என்று திட்டவட்டமாகக் கூறி உள்ளனர். சக்தி இல்லையேல் சிவம் இல்லை. ஆதலால் சக்தியை வேண்டி வரம் பெற, இந்த நவராத்திரி விழாவைத் துவங்கினார்கள்.
முதல் மூன்று நாட்கள் துர்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் மற்றும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபாடு செய்து விரதம் இருப்பார்கள். விரதம் என்பது கண்டிப்பாக இல்லை. முடிந்தவர்கள் மதியம் வேளை சாப்பிட்டுவிட்டு இருக்கலாம். இது இன்று பெரும்பாலும் நடப்பதில்லை.
மூன்று மூன்று நாட்களும் மூன்று விதமான பிரிவுகளைக் கொண்டு உள்ளது.
1. தமஸ் : இது செயலற்ற நிலை
2. ரஜஸ் : இது ஆற்றலை போற்றுவது.
3. சாத்வீகம் : முழுமையாக நல்ல செயல்கள் செய்வது.
இந்த மூன்று நிலைகளும்… மூன்று தேவியைக் குறிக்கும்.
1. துர்கா வீரம்
2. லட்சுமி செல்வம்
3. சரஸ்வதி கல்வி.
10வது நாள் விஜயதசமி. அதாவது வெற்றி நாள். வெற்றியைக் கொண்டாடும் தினம்.
எதற்காக நவராத்திரி?
இதற்கு ஒரு விசேஷக் காரணம் உண்டு. இந்து வாழ்க்கை முறையில் பெண்ணின் இயல்பை வெளிக்கொண்டு வர, பெண்மையை வலுப்படுத்த நவராத்திரி விழா அவசியம் என்று ரிஷிகள் சொல்லிவிட்டு போய் விட்டார்கள்.
நவராத்திரி முழுக்க முழுக்க பெண்கள் பண்டிகை. அதுவும் கன்னி பெண்களுக்கு முதலிடம். நவராத்திரி பண்டிகை அல்ல. ஒரு விழா.
10 நாட்களும் சுண்டல் செய்து தேவிக்கு நைவேத்தியம் செய்வார்கள். பிறகு பொட்டுக்கடலையில் சர்க்கரை கலந்து எல்லோருக்கும் பிரசாதமாகக் கொடுப்பார்கள். அக்கம் பக்கம் உள்ள அனைவருக்கும் போய் அவர்களுக்குக் கொடுப்பார்கள்.
கொலு…!
எல்லாரும் தங்கள் வசதிப்படி 9,7,5,3 படி அமைத்து பொம்மைகளை வைத்து 10 நாளும் பார்த்து வழிபடுவார்கள். குட்டீஸ்க்கு ஒரே கொண்டாட்டம் தான். அம்மா அல்லது அக்காவுடன் சேர்ந்து எல்லோர் வீட்டிற்கும் செல்வார்கள். நிச்சயமாக சுண்டல் உண்டு.
9-ம் நாள் மிக மிக முக்கியமான நாள். ஆம். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை இது விழா மட்டும் அல்ல. பெரிய பண்டிகைகூட. சரஸ்வதி அருள் இல்லை என்றால் மக்கள் இல்லை. கல்வியின் தேவதை சரஸ்வதி தான்.
ஆம். நாம் ஏன் ஆயுத பூஜையையும் அன்றே கொண்டாடி மகிழ்கிறோம்? மனிதன் இன்றி ஆயுதம் இல்லை. இங்கு ஆயுதம் என்று குறிப்பது அத்தனை ஆயுதங்களையும் குறிக்கும்.
மனித சிந்தனையின் விளைவே ஆயுதம். பேனா, பென்சில், காம்பஸ், டிவைடர், சம்மட்டி, ஏர், இரும்புச் சாமன்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் மனிதனுக்குக் கிடைத்த சரஸ்வதி கடாட்சம்தான்.
கல்வி இல்லை என்றால் தொலைக்காட்சி, தொலைபேசி மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின் இல்லவே இல்லை. அதே போல்தான் ஒரு சின்ன டெஸ்டர், ஸ்பேனர், சைக்கிள், ஸ்கூட்டர், பைக், பஸ், ரயில், விமானம் என எல்லாமே மனிதன் சிந்தித்ததன் விளைவு.
மனித சிந்தனை இன்றி ஆயுதமும் இல்லை. எனவே, தான் 9ம் நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை இரண்டையும் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம்.
சரி முடிக்கிறேன். எல்லோரும் நவராத்திரி கொண்டாடுங்கள். கொலு வைத்து அலங்கரியுங்கள். 9-ம் நாள் மிகச் சிறப்பாக சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடுங்கள். இது நமக்கு பண்டிகை! பண்டிகை என்றால் எல்லோருக்கும் குஷிதான்!! கொண்டாடுவோம்!