உங்கள் தொழில் செழிக்க விஸ்வகர்மா பூஜை மகத்துவத்தை அறிந்துகொள்ளுங்கள்!
ஆண்டுதோறும் செப்டம்பர் 17ம் தேதி விஸ்வகர்மா ஜயந்தி என்கிற விஸ்வகர்மா பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையானது இந்து கடவுளான விஸ்வகர்மாவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் கொண்டாடப் படுகிறது. இந்து புராணங்களின்படி, இந்து தெய்வங்களின் மாளிகைகள், வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் இவை அனைத்தும் விஸ்வகர்மாவால் படைக்கப்பட்டவை ஆகும். தென்னிந்தியாவில் இந்த பூஜையை ‘ஆயுத பூஜை’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். நவராத்திரியின் ஒன்பதாம் நாளன்று சரஸ்வதி பூஜையோடு ஆயுத பூஜையையும் சேர்த்துக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், மற்ற மாநிலங்களில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி அன்றுதான் இதை கொண்டாடுகிறார்கள்.
விஸ்வகர்மா ஜயந்தி இந்தியாவில், குறிப்பாக ராஜஸ்தான், தில்லி, ஒரிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், திரிபுரா போன்ற இடங்களில் கொண்டாடப் படுகிறது. இது, 'கன்யா சங்கராந்தி' அல்லது ‘பத்ர சங்கராந்தி’ என்றும் அழைக்கப்படுகிறது. திறமையான கைவினைஞர்களுக்கு விஸ்வகர்மா பூஜையானது மிகவும் அவசியமான மற்றும் அற்புதமான நாளாகக் கருதப்படுகிறது.
விஸ்வகர்மா பூஜையின் பின்னணியில் உள்ள கதை: விஸ்வகர்மா பூஜை பண்டைய காலங்களிலேயே தொடங்கப்பட்டது மற்றும் இந்து வேதங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறலாம். விஸ்வகர்மா தெய்வீகக் கட்டடக் கலைஞர் மற்றும் பிரபஞ்சத்தின் படைப்பாளராக அறியப்படுகிறார். விஸ்வம் என்றால் பிரபஞ்சம், கர்மா என்றால் படைத்தவர் என்று பொருள்.
பிரபஞ்சத்தின் வடிவமைப்பாகவும் மற்றும் கட்டமைப்பிற்குப் பின்னால் உள்ள சக்தியாகவும் இவர் திகழ்கிறார் என்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. புராணத்தின்படி, விஸ்வகர்மா சமுத்திரக் கலவரத்தில் (சமுத்திர மந்தனம்) பிறந்ததாக நம்பப்படுகிறது. புராணங்களைச் சேர்ந்த விஸ்வகர்மா, சொர்க்கம், லங்கா, ஹஸ்தினாபுரம் மற்றும் இந்திரபிரஸ்தம் ஆகியவற்றின் ஒரே தெய்வீக சிற்பி ஆவார்.
ஸ்ரீ கிருஷ்ணருக்காக கம்பீரமான மற்றும் அழகான துவாரகை நகரத்தை அமைத்தது முதல் பாண்டவர்களுக்காக இந்திரபிரஸ்தம் என்ற அரண்மனையை வடிவமைத்தது வரை, இந்து புராணங்களில் மிகவும் புராதனமான சின்னமான சில பகுதிகளையும் ஆயுதங்களையும் கட்டியதற்காக புராணங்கள் இவரைப் போற்றுகின்றன.
மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம், சிவனின் திரிசூலம், கார்த்திகேயனின் தெய்வீக ஈட்டி போன்ற சக்தி வாய்ந்த தெய்வீக ஆயுதங்களையும் இவர்தான் வடிவமைத்தார் என நம்பப்படுகிறது. இந்தப் புகழ் பெற்ற சாதனைகளுக்கு அப்பால், கட்டடக்கலை மற்றும் இயந்திர வடிவமைப்பு பற்றிய பண்டைய அறிவை விவரிக்கும் புனித நூலான, ‘ஸ்தபத்ய வேதத்தை’ அவர் எழுதியதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, கருவிகள், இயந்திரங்கள் மற்றும் வடிவமைப்புடன் பணிபுரிபவர்களுக்கு பாதுகாவலராகவும் உத்வேகமாகவும் விஸ்வகர்மா கௌரவிக்கப்படுகிறார். ஆகவேதான் விஸ்வகர்மா ஜயந்தி அன்று தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்கள் தங்கள் கருவிகளையும் இயந்திரங்களையும் வணங்கி, அவருக்குத் தங்களுடைய நன்றியை தெரிவித்தும் மேலும் அவருடைய அருளையும் பெறுகிறார்கள். வாகனங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.