காக்கி என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது காவல்துறைதான். காவல்துறையினருக்கு பல்வேறு நாடுகளில் வெவ்வேறு சீருடைகள் இருந்தாலும், இந்தியாவில் காக்கிச் சீருடையை பயன்படுத்துவதன் காரணம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
நம்மை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் 'கார்ப்ஸ் ஆப் கைட்ஸ்' என்ற குழு இந்தியாவின் ஒரு பகுதியான பெஷாவர் என்ற இடத்தில் காவலுக்கு 1846ம் ஆண்டு இருந்தது. அந்தப் பகுதியில் இருந்த மண்ணும் தூசியும் சுற்றுச்சூழலை சமாளிப்பதில் அவர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலேயர்களிடம் இருந்த சிவப்பு நிற மேலாடை, வெள்ளை நிற பேண்ட் குளிர்காலத்திற்கு தகுந்தாற்போல் கம்பளியால் தயாரிக்கப்பட்டிருந்ததால், அது இந்தியாவின் கால நிலைக்கு உகந்ததாக இல்லாததால் ஆங்கிலேய காவலர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
மேலும், அந்த சீருடையில் கறைகளும் தூசிகளும் ஒட்டிக்கொண்டு அசிங்கமாக இருந்ததோடு, சில இந்தியக் கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேய காவலர்களைத் தாக்கும் சமயத்தில், அவர்களைப் போல வேடமணிவதற்கு ஆற்றின் ஓரம் இருந்த மணலை வெள்ளை துணியில் சேர்த்து அந்த ஆற்றில் முக்கி எடுத்து, பார்ப்பதற்கு ஆங்கிலேய வீரர்களின் அழுக்கான வெள்ளை சீருடை போல் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர்.
இதற்குத் தீர்வு காண நினைத்த ஆங்கிலேயப் படைத்தலைவர் ஹாரி லும்ஸதேன், சீருடையின் நிறத்தை உருவாக்குவதற்கு காபி இலை, தேயிலை, புகையிலை மற்றும் மல்பெரி செடியின் இலை ஆகியவற்றைக் கலந்து மண் சேற்றின் நிறத்தைக் கொண்டு வந்ததுதான் காக்கி நிறம்.
1880களுக்குப் பின்னர், நவீனமான ஆயுதங்கள் வந்த பிறகு ராணுவப் படைகள், எதிரிகளிடம் அதிக கவனமாக செயல்படுவதற்கும், காக்கிச் சீருடை மறைந்திருந்து தாக்குவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தது.
முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலங்களில் கூட அனைத்து நாட்டு இராணுவங்களும் அந்தந்த நாடுகளின் சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற்போல காக்கியின் நிறத்தில் சிறிது வேறுபாடுகள் கொடுத்து சீருடையாக அணிந்து வந்தனர். இன்றும் கூட இந்த காக்கிச் சீருடையைத்தான் நம் இந்திய நாட்டின் காவலர்கள் பயன்படுத்துகின்றனர்.
பாதுகாவலர்களின் அடையாளமாகவும் பாதுகாப்பாளர்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும் காக்கிச் சீருடை இன்று வரை மரியாதையின் சின்னமாகவே கருதப்பட்டு வருகிறது.