
தஞ்சாவூர் என்றாலே நம் நினைவிற்கு வருபவை தஞ்சை பெரியகோவிலும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை களும்தான். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தஞ்சாவூரை பல்லவர்கள், முத்தரையர்கள், பிற்கால சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள், தஞ்சை நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆட்சி செய்துள்ளார்கள்.
தஞ்சாவூர் பெரியகோவில் முதலாம் இராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலுக்கு இராஜராஜசோழன் சூட்டிய பெயர் “இராஜராஜேச்சுரம்” என்பதாகும். பெரியகோவிலின் கட்டிடப்பணிகள் கி.பி.1003 ல் தொடங்கப்பட்டு கி.பி.1010 ல் முடிக்கப்பட்டது.
தஞ்சை பெரியகோவில் இராஜராஜசோழனால் கட்டப்பட்டது என்ற விஷயம் கி.பி.1895 ஆம் ஆண்டில் ஹால்ஸ் என்ற ஜெர்மன் நாட்டு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கூறிய பிறகே வெளிஉலகிற்குத் தெரியவந்தது. இதற்கான கல்வெட்டு கருவறையின் வடக்குப்புறச் சுவரில் உள்ளது.
தஞ்சாவூர் பெரியகோவிலைக் கட்டிய தச்சன் “வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன்” என்பராவார். இவருக்கு “மதுராந்தகனான நித்தவினோத பெருந்தச்சன்” மற்றும் “குலத்திசடையனான கண்டராதித்த பெருந்தச்சன்” ஆகியோர் உதவியாளர்களாக இருந்தார்கள்.
நான்கு திசைகளிலும் திசைக்கொன்றாக நான்கு நுழைவாயிலைக் கொண்டிருந்த பெரியகோவிலின் வடக்கு திசை நுழைவாயிலானது அரசகுடும்பத்தினரால் பயன்படுத்தப்பட்டது. தற்போது கிழக்குதிசையில் உள்ள நுழைவாயில் மட்டும் பயன்பாட்டில் உள்ளது.
பெரிய கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மஹா மண்டபம், தபன மண்டபம், நர்த்தன மண்டபம் மற்றும் வாத்திய மண்டபம் என்ற ஆறு பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது.
கருவறையில் ஆவுடையார் எண்பது மீட்டர் உயரமும் இருபது மீட்டர் சுற்றளவும் உடையது. இதன்மீது 6.90 மீட்டர் உயரமுடைய லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய லிங்கமாகக் கருதப்படும் இந்த லிங்கம் நர்மதை நதிக்கரையிலிருந்து கொண்டு வரப்பட்டது.
கருவறையைச் சுற்றி உள்ள உட்புறச் சுவர்களினல் இராஜராஜ சோழனின் காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.
பெரிய கோவிலின் கருவறை கோபுரத்தின் உச்சியில் எண்பது டன் எடையுள்ள ஒரு கல் உள்ளது. அக்கல்லை வைப்பதற்கு முன்னால் தஞ்சையில் வாழ்ந்த அழகி எனும் இடையர்குலப் பெண் ஒருவள் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் தாகத்தைத் தணிக்க மோர் கொடுத்ததற்காக அவளுடைய வேண்டுகோளை ஏற்று அவள் கொடுத்த ஒரு சிறிய கலையை சிற்பிகள் இராஜராஜசோழனுக்குத் தெரியாமல் கோபுரத்தில் பதித்தார்கள்.
ஒருநாள் சிவபெருமான் சோழ மன்னரின் கனவில் தோன்றி “நீ கொடுத்த மறைவிலும் இடைச்சி கொடுத்த நிழலிலும் பொன்மணித்தட்டார் இதயத்திலும் நாம் மகிழ்ந்திருக்கிறோம்“ என்று கூறியதாக கூறப்படுகிறது. இதன்பிறகு அழகி கொடுத்த கல்லைப் பற்றிய விவரத்தை அறிந்த இராஜராஜசோழன் சிவபெருமானின் அன்பிற்குப்பாத்திரமான அழகியின் பெயரில் நிலங்களை மானியமாக வழங்கி அழகியின் பெயரில் தஞ்சையில் குளம் ஒன்றையும் வெட்டினார். அந்த குளமே தற்போது தஞ்சாவூரில் “அழகிகுளம்” என்றழைக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள லேபாஷி என்ற இடத்தில் அமைந்துள்ள வீரபத்திர சுவாமி கோவில் நந்தியும் தஞ்சை பெரிய கோவில் நந்தியும் இந்தியாவில் மிகப்பெரிய நந்திகளாகக் கருதப் படுகின்றன.
பதினாறு கால் மண்டபத்தில் ஐநூறு அடி நீளமும் இருநூற்றி ஐம்பது அடி அகலமும் உடைய ஒரு மேடையில் பெரிய கோவில் நந்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நந்தி பனிரெண்டு அடி உயரமும் பத்தொன்பதரை அடி நீளமும் எட்டேகால் அடி அகலமும் உடையதாகும். இதன் எடை இருபத்தி ஐந்து டன்களாகும்.