
மகாராஷ்டிர மாநில மேனாள் துடுப்பாட்ட வீரர் ரோஹன் பேட் என்பவர், இந்தியாவில் துடுப்பாட்டம் தொடர்பான பல்வேறு பொருட்களைச் சேகரித்து, துடுப்பாட்ட ஆர்வலர்களுக்கான சிறந்த அருங்காட்சியகம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டார். இந்த அருங்காட்சியகத்திற்காக, உலகக் கோப்பை வென்ற அணிகளின் அணித்தலைவர்கள் கையொப்பமிட்ட துடுப்பாட்ட மட்டைகள், உலகக் கோப்பை வென்ற அணிகளின் உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மட்டைகள், துடுப்பாட்ட உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் கையெழுத்திட்ட உடைகள் மற்றும் துடுப்பாட்டம் தொடர்புடைய பொருட்களையும் சேகரித்தார்.
அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 5,000 சதுர அடிப் (460 மீ) பரப்பளவில் துடுப்பாட்டப் பெருமை அருங்காட்சியகம் (Blades of Glory Cricket Museum) ஒன்றை அமைத்தார். அந்த அருங்காட்சியகத்தை 2012 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் சச்சின் டெண்டுல்கர் திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகம், புகழ்பெற்ற துடுப்பாட்ட வீரர்களால் தனிப்பட்ட முறையில் கையெழுத்திடப்பட்ட பொருட்கள் உட்பட அரிய மற்றும் அசாதாரண துடுப்பாட்ட நினைவுப் பொருட்களைக் காட்சிப்படுத்துகிறது. இங்கு சச்சின் டெண்டுல்கருக்கு என்று உருவாக்கப் பெற்ற தனிப் பகுதி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய துடுப்பாட்ட மட்டைகள், துடுப்பாட்ட உடைகள் மற்றும் துடுப்பாட்டப் பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் 100 சிறிய அளவிலான மட்டைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் டெண்டுல்கரின் பன்னாட்டுச் சதங்களில் ஒன்றைக் குறிக்கின்றன. இது அவரது குறிப்பிடத்தக்க சாதனைகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.
துடுப்பாட்ட மட்டையாளர்களைத் தவிர, பந்து வீச்சாளர்களின் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கிறது. இங்கு 300 தேர்வு திட்டிகள் (Test Wicket) கொண்ட குழுவின் இரண்டு உறுப்பினர்களைத் தவிர, பிரெட் ட்ரூமேன் மற்றும் மால்கம் மார்ஷல் போன்ற புகழ்பெற்ற பந்து வீச்சாளர்கள் உட்பட பல பந்து வீச்சாளர்களின் கையொப்பமிடப்பட்ட பந்துகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாள் போட்டிகளில் 300 திட்டிகள் (Wicket) கொண்ட குழுவின் 11 உறுப்பினர்களில் ஒவ்வொருவரும் கையொப்பமிட்ட பந்துகளையும், 50 சுற்று (Over) வடிவத்தில் அவர்களின் சாதனைகளைக் கொண்ட காட்சியகம் காட்சிப்படுத்துகிறது.
துடுப்பாட்டம் ஒரு குழு விளையாட்டு என்பதை துடுப்பாட்டப் பெருமை அருங்காட்சியகம் (Blades of Glory Cricket Museum) அங்கீகரிக்கிறது. இங்கு பல்வேறு வேளைகளில், பல்வேறு அணிகளால் கையொப்பமிடப்பட்ட ஏராளமான மட்டைகள் இடம் பெற்றிருக்கின்றன. 2000 ஆம் ஆண்டுத் தேர்வுப் போட்டிக்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து கையொப்பமிட்ட மட்டைகளும், 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகள் கையொப்பமிட்ட மட்டைகளும், பிற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் 75,000 க்கும் அதிகமான துடுப்பாட்டப் பொருட்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த அருங்காட்சியகம், துடுப்பாட்டத்தின் வளமான வரலாறு, பண்பாட்டு முக்கியத்துவம் மற்றும் கூட்டுச் சாதனைகளுக்கு ஒரு சான்றாக இருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் பார்வையாளர்களுக்கு விளையாட்டின் மரபு வழியைக் கொண்டாடும் ஒரு சிறந்த அனுபவத்தை இது வழங்குகிறது. அதே நேரத்தில் வருங்கால மரபு வழியினருக்கு ஒரு உத்வேகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
துடுப்பாட்ட நினைவுப் பொருட்கள் மற்றும் கலைப்பொருட்களின் விரிவான வரிசையை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைப்பதன் மூலம் ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தில் மூழ்குவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை இந்த அருங்காட்சியகம் வழங்குகிறது. கடந்த காலத் துடுப்பாட்டத்தின் முக்கியமான தருணங்களைப் பாதுகாத்து வருங்கால மரபுவழியினருடன் பகிர்ந்து கொள்வதே இந்த அருங்காட்சியகத்தின் முதன்மை நோக்கமாகவும் இருக்கிறது. மேலும், வளங்கள் அல்லது வாய்ப்புகள் இல்லாத திறமையான நபர்களை ஆதரிக்கவும் முயல்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் ஒரு துடுப்பாட்டச் சமூகத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தை 450-க்கும் அதிகமான புகழ் பெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்கள் பார்வையிட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த அருங்காட்சியகத்தை வார நாட்கள் அனைத்திலும் காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை பார்வையிட முடியும். 2 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நுழைவுக் கட்டணமாக ரூபாய் 200 பெறப்படுகிறது. 50-க்கும் அதிகமானவர்களைக் கொண்ட குழுக்களாகப் பார்வையிடும் போது கட்டணச் சலுகை அளிக்கப்படுகிது.
அப்புறமென்ன, ஒரு முறை புனே சென்று இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு வரலாமே!