வரலாற்றுச் சான்றுகளின் பொக்கிஷமாய் திகழ்ந்த யாழ் நூலகம்!

யாழ் நூலகம்
யாழ் நூலகம்

லகிலேயே மிகச் சிறந்த நூலகம் என்றால் அது யாழ்ப்பாணம் நூலகம்தான். ஏனென்றால், அதில் உள்ள நூல்கள் உலக வரலாற்றையே உள்ளடக்கியதாக இருந்தது. ஒவ்வொரு மொழி, இனம் என அனைத்தும் இங்கு ஒருமித்த சங்கமமாய் திகழ்ந்தது. எந்த வரலாற்று பதிவாக இருந்தாலும் அது யாழ்ப்பாணம் நூலகத்தில் தேடினால் நிச்சயம் கிடைக்கும் என்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பெருமைமிகு நூலகத்தில் வரலாற்றைப் பற்றி பார்ப்போம்.

யாழ் நூலகத்தின் உருவாக்கத்திற்கு மூல காரணமாக இருந்தவர் அச்சுவேலியைச் சேர்ந்த கே.எம்.செல்லப்பா. இவர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் காரியதரிசியாக பணிபுரிந்தவர். 1933ம் ஆண்டில் அவர் தனது வீட்டிலேயே தன்னிடம் இருந்த சில நூல்களை வைத்து நூல் நிலையம் ஆரம்பித்து வைத்து, சான்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் புதிய திறவுகோலை வழங்கினார் எனலாம்.

இந்த நூலகம் பலருக்கும் பயன்பட வேண்டும் என்று எண்ணி, 09.06.1934 அன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் ஜசாப் தம்பையாவின் தலைமையில் கூட்டம் வைத்தார்கள். அன்று நூலகத்திற்கென சேர்த்த காசு மொத்தம் 182.22 ரூபாய் மட்டுமே. அன்றைய காலகட்டத்தில் இந்தக் காசு பெரும் மூலதனமாக அமைந்துள்ளது. ஆசுப்பத்திரி வீதியில் ஒரு வாடகை அறையில், 01.08.1934 அன்று, 844 நூல்கள் மற்றும் 36 பருவ வெளியீடுகளுடன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நூலகம் தயாராயிற்று.

அடிப்படை வசதிகளின்றி நூலகம் இடர்பட்டுக்கொண்டிந்த வேளையில், யாழ்ப்பாண கட்டட சபை பொறுப்பேற்று 1935ல் இடமாற்றம் செய்தது. 1952ம் ஆண்டு, ஆனி 14ம் நாள் சாமி சபாபதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டினை அடுத்து நவீன கட்டடம் அமைக்க ஆரம்பித்தனர். புதிய நூலகக் கட்டடத்தை கட்டியெழுப்புவதற்கு அதிவனபிதா லாங் பக்கத்துணையாக இருந்து ஆதரவு அளித்து வந்தார். நூலகத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ்.ஆர்.ரங்கநாதன் ஆதரவு கொடுத்தார். சென்னை மாகாண அரசின் கட்டடக்கலை நிபுனர் கே.எஸ்.நரசிம்மன், நூலகத்தின் வடிவமைப்பிற்கான திட்டங்களை வகுத்து, வரைபடங்களை தயாரித்துக் கொடுத்தார்.

29.03.1953 அன்று கட்டட அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது. 1959ம் ஆண்டில் முதல்கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு, அப்போது யாழ் முதல்வராக இருந்த ஆல்பிரட் துரையப்பாவால் பெரும் விமர்சையாக திறக்கப்பட்டது. முழுமை பெற்று இயங்கிவந்த நூலகத்தில் அன்று 33 நூலகர்கள் பணிபுரிந்தனர்.

இவ்வளவு பெருமை மிகுந்த யாழ் நூலக எரிப்பு எப்போது, எப்படி, எதற்காக எரிக்கப்பட்டது தெரியுமா?

பல கட்டங்களைத் தாண்டி, படிப்படியாக உருவெடுத்து பெரும்புகழ் பெற்ற அறிவுக் களஞ்சியம் என யாழ் நூலகம் திகழ்ந்து வந்தது. அத்தகைய பெருமைகளையும் சிறப்பையும் இல்லாதொழிக்க, தீக்கிரையாக்கி பொசுக்கிய நாளாக, தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக, மே மாதம் 31ம் நாள் துயர்மிகு வரலாற்று பக்கங்களில் இடம்பெற்றது. அன்றைய சம்பவம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடுத்த பரிமாணத்திற்கு கொண்டு செல்ல ஒரு முக்கிய காரணியாயிற்று என்றும் கூறலாம்.

இதையும் படியுங்கள்:
எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் 5 வகை ஃபுட் காம்பினேஷன் தெரியுமா?
யாழ் நூலகம்

தமிழ் மக்களிடையே உறுதியடைந்து வந்த தமிழ் தேசிய நிலைப்பாடு, பௌத்த சிங்கள இனவாதிகளுக்கு மிகவும் வெறுப்பூட்டியது. அதுவே தமிழ் மக்கள் மீதும் தமிழ் மக்களின் அடையாளங்கள் மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து அவர்களது உடைமைகளை சூரையாடத் தூண்டிவிட்டது. அந்த வகையில், தமிழ் மக்களின் வரலாற்றை அழித்தால் தமிழினத்திற்கென்றே அடையாளம் இல்லாமல் போய்விடும் எனச் சதித்திட்டம் தீட்டிய இனவாத அரசு தமிழ் மக்களின் கருவூலமான யாழ் நூலகத்தை சாம்பலாக்கினர்.

1981 மே 31ம் திகதி நள்ளிரவு சுமார் 12 மணிக்குப் பின்னர் தீமூட்டப்பட்ட யாழ் நூலகம் எரிந்தது. கட்டடத்தோடு, 1800களில் இருந்து யாழில் வெளியாகிய செய்தி ஏடுகள், தொன்மை வாய்ந்த வரலாற்று ஆவணங்களுடன், எம்மவரின் எழுத்துருவாய் திகழ்ந்த நூலகத்தில் சுமார் 97,000த்திற்கும் மேற்பட்ட, கிடைப்பதற்கு அரிய பல தமிழ், ஆங்கில நூல்களும், பல ஓலைச்சுவடிகளும் உருகுலைந்து சாம்பலாகின.

தீக்கிரையாகிய பலவற்றில், இலக்கியம், இலக்கணம், தத்துவம், மொழியியல் பிரிவுகளின் கீழ் 6000 நுல்களும், 1585ல் கத்தோலிக்க மதத்தலைவர்களால் தமிழில் எழுதப்பட்ட பல நூல்களும் இதில் அடங்கும். அரிய புத்தகங்களுள் 1660ல் றோபேட் நொக்ச் (Robert Knox) அவர்களால் எழுதப்பட்ட ‘ஹிஸ்ட்டரி ஆப் சிலோன்” (History of Ceylon), யாழ்ப்பாண வரலாற்று நூலாகிய முதலியார் நாயகத்தின் ‘பண்டைய யாழ்ப்பாணம்’, தமிழில் முதன் முதல் வெளிவந்த முத்துத்தம்பிப்பிள்ளையின் இலக்கிய கலைக் களஞ்சியமான ‘அபிதான கோசம்’, அதன் பின்னர் வந்த சிங்கார முதலியாரால் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ சித்த வைத்தியம் கூறும் பனை ஓலைகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டது.

இச்சம்பவம், இலங்கை பேரினவாதத்தின் மீதிருந்த இறுதி நம்பிக்கையையும் சிதைத்து, தமிழ் மக்களின் போராட்டத்திற்கு விதையானது. யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது தெரிந்து உலகமே கண்ணீர் வடித்தது என்று கூறினால் அது மிகையல்ல. எழுதுபவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் தான் தெரியும் ஒரு நூலகத்தின் அருமை. பல வரலாற்று பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டாலும் இன்னும் ஏதோ ஒரு விதங்களில் அவை நமக்கு கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பது ஒரு சின்ன ஆறுதல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com