உலகிலேயே மிகவும் பழைமையான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் நகரம். எந்நேரமும் மக்கள் விழித்திருக்கும் தூங்கா நகரம். சங்க கால இலக்கியத்தையும், தமிழின் பெருமையையும் தாங்கி நிற்கும் நகரம் நம்முடைய மதுரை மாநகரமாகும்.
அப்படிப்பட்ட மதுரையின் வீதிகளில் நடக்கும் ஒவ்வொரு அடியிலும் நம்முடைய முன்னோர்களின் பாத அடிச்சுவடுகள் பதிந்திருக்கிறது. ஒவ்வொரு வரலாற்றையும், நிகழ்வுகளையும் தன்னுள்ளே கொண்டு சாட்சியங்களாக இருப்பதுதான் தெருக்களும், வீதிகளும் ஆகும். அப்படி மதுரையில் உள்ள முக்கியத் தெருக்களின் வரலாற்றை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
மதுரையில் பல தெருக்கள் இருந்தாலும், சில குறிப்பிட்ட பிரபலமான தெருக்களைப் பற்றித்தான் இப்பதிவில் பார்க்க உள்ளோம். அதில் முதலாவதாக பார்க்கப்போவது, பாண்டியன் அகழ் தெரு. சங்க காலத்தில் மதுரையைச் சுற்றி பெரிய மதில் சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கும் செய்தியை சங்க இலக்கியங்களின் மூலம் நாம் தெரிந்துக்கொண்டோம். அந்த மதில்களைச் சுற்றி ஆழமான நீர் நிறைந்த அகழிகளும் அமைக்கப்பட்டிருந்தன. யானைகளும் செல்வதற்கு ஏற்றவாறு சுரங்கங்களும் அமைக்கப்பட்டதை பின்வரும் பாடலின் மூலம் புரிந்துக்கொள்ளலாம்.
‘அகழியிற் பெருங்கை யானை இனநிரை பெயரும் சுருங்கை வீதி’
இடைச்சங்க காலத்திலும் மதுரையில் அகழிகள் இருந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக 19ம் நூற்றாண்டில் மதுரை விரிவாக்கப்பட்டபோது மதில்கள் இடிக்கப்பட்டு அகழிகள் அகற்றப்பட்டுள்ளன. என்னதான் அகழியை அகற்றினாலும், பாண்டியன் அகழ் தெருவின் மூலம் மதுரையில் அகழியிருந்தது நமக்கு உறுதியாகத் தெரிகிறது. மதுரையில் தெருக்கள் சுருங்கியது போல ‘அகழி’ என்ற பெயர் ‘அகழ்’ என்று சுருங்கிவிட்டது.
பாண்டியன் அகழ் தெருவிற்கு ‘கழுதை அக்ரஹாரத் தெரு’ என்ற பெயரும் உண்டு. கழுதை என்றவுடன் விலங்கான கழுதையை எண்ண வேண்டாம். ‘கைதை’ என்ற பெயர் திரிபுதான் கழுதையானது. பாண்டிய மன்னனுக்கு ‘கைதவன்’ என்ற குலப்பெயர் உண்டு. பிற்காலத்தில் இது கைதை என்று மாறி, கழுதை என்று மருவியிருக்க வாய்ப்பிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் மதுரையில் அகழியிருந்ததற்குச் சான்றாக பாண்டியன் அகழ் தெரு இன்றும் இருக்கிறது.
முகமது யூசுப்கான் பற்றி கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். அவருடைய மற்றொரு பெயர்தான், மருதநாயகம். இவரே கான்சாகிப் என்று அழைக்கப்பட்டார். மதுரை மக்களின் நலனுக்காக பல திட்டங்களைத் தீட்டினார். சிறந்த ஆட்சியாளராக இருந்தார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மானியம் வழங்கி வழிபாடு நடக்கவும் ஆங்கிலேயர் காலத்தில் அவர் ஏற்பாடு செய்திருந்தார். மதுரை மக்களுக்கு பல நல்ல காரியங்கள் செய்திருந்தாலும் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு எதிரியாகி விட்டார். அவர் வாழ்ந்த வீட்டை பிரிட்டிஸார் இடித்துத் தள்ளினர். அந்த இடம் ஒரு மேடுப்போல மாறியது. அதுதான் தற்போது கான்சாப் மேட்டுத்தெரு என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழுக்கும் மதுரைக்கும் உள்ள தொடர்பு 2000 முதல் 3000 வருடங்கள் பழைமையானதாகும். தமிழை வளர்த்த பாண்டியரின் தலைநகரமாக மதுரை இருந்திருக்கிறது. தமிழுக்கு சங்கம் வளர்த்து அதன் பெருமையை உலகுக்கு எடுத்துச் சென்ற பெருமை மதுரைக்கு இருக்கிறது. மதுரைக்கு வந்த பாண்டியர்கள் அங்கே மூன்றாம் தமிழ் சங்கத்தை நிறுவினார்கள். நக்கீரரை தலைமையாகக் கொண்டு பல்வேறு புலவர்கள் மொழியை ஆராய்ந்து தமிழை வளர்த்தனர். பாண்டியப் பேரரசு அழிந்த பிறகு தமிழ் சங்கமும் அழிந்துப்போனது. 1901ல் மதுரையில் நான்காம் தமிழ் சங்கத்தை தொடங்கி வைத்தார்கள். இந்த நான்காம் தமிழ் சங்கம் அமைந்துள்ள சாலையின் பெயர்தான் 'தமிழ் சங்கம் ரோடு' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.