
இப்போதெல்லாம் பொதுமக்கள் பயணிக்கும் ரயில் மற்றும் பேருந்துகளில் வரும் அனைவரும் காதில் பஞ்சால் அடைப்பதுபோல் ஒரு ஹெட்செட்டை கொண்டுதான் பயணிக்கிறார்கள். இந்த கலாச்சாரத்தை தொடங்கியவர்கள் யார்? இதன் தாக்கத்தை நாம் தெரிந்துகொள்வோமா?
ஹெட்செட்டின் அறிமுகம்:
1979இல் சோனி வாக்மேன் (Sony Walkman) ஹெட்செட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானில் பயணம் செய்யும்போது இவ்வசதியின் மூலம் இசையைக் கேட்கும் பழக்கம் அறிமுகமானது. இதன் மூலம் தனிநபர்கள் எங்கு சென்றாலும் தங்களுக்குப் பிடித்தமான இசையைக் கேட்டுக்கொண்டு செல்ல முடிந்தது.
நெரிசலான ரயில்கள், பேருந்துகள், தனிமையான நடைபாதை (Solowalk) என்று எதுவாக இருந்தாலும் சரி, அனைத்து சூழலுக்கும் இந்த வசதி பொருந்தியது.
ஜப்பானின் நகர்ப்புற வாழ்க்கை முறையில், மக்கள் அதிக அளவில் பொது போக்குவரத்தைச் சார்ந்திருந்தாதால் இந்த ஹெட்செட் பயன்பாடு அங்கு வேகமாக வளர்ந்தது. டோக்கியோ(Tokyo) போன்ற ஜப்பானின் பரபரப்பான நெரிசல் மிகுந்த நகரங்களில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் ஒரு தவிர்க்க முடியாத கலாச்சாரமாக மாறியுள்ளது.
இப்போதுள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளின் (streaming platforms) வளர்ச்சியால் இந்த ஹெட்செட் கலாச்சாரம் அடுத்த நிலைக்குச் சென்றுள்ளது.
பெரிய பெரிய கேசட்டுகளில் (cassette) அடைந்திருந்த பாடல்கள் எல்லாம் சிறிய நூலகங்கள் போல் கைக்கு அடக்கமாக உள்ளன.
தற்போது அமெரிக்கா, தென் கொரியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த ஹெட்செட் கலாச்சாரத்தை இளைய தலைமுறையினர் பரவலாக பயன்படுத்துகின்றனர்.
Spotify மற்றும் Apple Music போன்ற தளங்கள் வழங்கும் வசதிகள் மக்களின் ஈடுபாட்டை அதிகரித்து ஹெட் செட் கலாச்சாரத்துடன் மூழ்க வைத்துள்ளன. குறிப்பாக, இந்தியாவின் சினிமா இசைத் துறை மற்றும் மலிவு விலை ஸ்மார்ட்போன் போன்ற விஷயங்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை என்று அனைவரையும் ஹெட் செட் கலாச்சாரத்துடன் ஈர்த்துள்ளது.
என்னென்ன நன்மைகள்?
இது அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல குழப்பங்களுக்கு மத்தியில் ஒரு ஆறுதல் தரும் தோழனாக சிலருக்கு அமைகிறது.
இது தனிநபர்களின் பயண அனுபவங்களை ஸ்ட்ரெஸ் பிரீயாக (Stress free) வைக்க உதவுகிறது; இன்னும் சிலருக்கு படைப்பாற்றல் (Creativity) கூட இதனால் மெருகேற்ற படுகிறதாம்.
கூடுதலாக, இது பாட்காஸ்ட்கள் (Podcasts) மற்றும் ஆடியோபுக்குகள் (Audiobooks) உள்ளிட்ட புதுமையான ஆடியோ அனுபவங்களை ரசிக்க முடிகிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மக்கள் தங்கள் பயண நேரங்களை இதன் மூலம் ஒரு பயனுள்ளதாகவும் மாற்றிக்கொள்ளலாம்.
என்னென்ன தீமைகள்?
ஹெட்ஃபோன்களின் அதிகப்படியான பயன்பாடு காது கேளாமை, சமூக தனிமைப்படுத்தல் (Social isolation), பொது இடங்களில் விழிப்புணர்வு குறைவு (Sense of awareness in public spaces) போன்ற மக்களின் பாதுகாப்பு விஷயங்களில் கவலையை அதிகரிக்க செய்கிறது.
மேலும், ஒரு தனி உலகிற்குள் நாம் மூழ்கும் பொழுது சிலர் கற்பனையான வாழ்க்கைக்கு ஈர்க்கப்பட்டு சக மனிதர்களிடம் பேசும் வார்த்தைகளையும் குறைத்து அவர்களுக்கு தெரியாமலே அவர்கள் தனிமையை நோக்கி செல்லலாம்.
என்னதான் நவீன காலத்திற்கேற்றவாறு இந்தக் கலாச்சாரம், இரைச்சல்- ரத்துசெய்யும் தொழில்நுட்பம் (Noise-canceling technology), ஆக்மென்டட் ரியாலிட்டி ஆடியோ சாதனங்கள் (Augmented reality audio devices) என்று வளர்ச்சியடைந்தாலும் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் மனித தொடர்பு ஆகியவற்றில் இவை ஏற்படுத்தும் தாக்கத்தை மனதில் வைத்து சுதாரித்து பயன்படுத்தி கொள்வது நல்லது.