

பாண்டிச்சேரி (Puducherry) மட்டும் ஏன் தமிழ்நாட்டுடன் இல்லை என்று யோசித்திருர்கிறீர்களா? கேட்டால் அதை யுனியன் பிரதேசம் என்று சொல்வார்கள். அப்படியென்றால் என்னவென்று தெரியுமா? அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் தெரிஞ்சிக்கலாம் வாங்க.
நம் எல்லோருக்குமே தெரியும் 1947 க்கு முன்பு வரை இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சிப் புரிந்து வந்தார்கள். அப்போது பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே போன்ற இடங்களை மட்டும் பிரெஞ்சுகாரர்கள் ஆட்சிப் புரிந்து வந்தார்கள். 1947 இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், பிரிட்டிஷ்காரர்கள் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டாலும் பிரெஞ்சுகாரர்கள் ஆண்டு வந்த இந்த 4 பகுதிகள் மட்டும் இந்தியாவுடன் சேராமலேயே இருந்திருக்கிறது.
1954ல் தான் பிரெஞ்சுகாரர்கள் அரசு நிர்வாகத்தை இந்தியாவிடம் ஒப்படைத்தனர். சட்டப்பூர்வமாக இந்தியாவுடன் சேர்ந்தது 1962 ல் ஆகும். அந்த நேரத்தில் பிரெஞ்ச் கலாச்சரம், தனித்துவம், சட்டம் போன்றவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. இப்போது என்ன பிரச்னை என்றால், பாண்டிச்சேரி, காரைக்கால் தமிழ்நாட்டில் உள்ளது.
மாஹே கேரளாவில் உள்ளது. ஏனாம் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. அந்தந்த மாநிலத்தை அப்படியே பக்கத்தில் இருக்கும் மாநிலத்துடன் இணைத்துவிட்டால் அந்தந்த பகுதிகளுடைய தனித்தன்மை போய்விடும். அதனால் இந்த நான்கு இடத்தையும் பக்கத்தில் உள்ள மாநிலத்தோடு இணைக்காமல் தனி அடையாளத்தோடு வைத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
அதனால் இது இந்தியாவில் உள்ள மத்த மாநிலம் போன்று இருக்கக்கூடாது என்றும் முடிவு செய்தார்கள். தமிழ்நாடு, கேரளா போன்றவை மாநிலங்கள். இங்கேயே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் இங்கே முழு அதிகாரமும் இருக்கும். மத்திய அரசால் இங்கு சாதாரணமாக தலையிட முடியாது. ஆனால், இந்த 4 இடங்களையும் யுனியன் பிரதேசங்களாக மாற்றிவிட்டார்கள். அதாவது இந்த 4 இடங்களும் மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள். இங்கே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுனர் என்று ஒருவர் இருப்பார். அவர் தான் நிர்வாக தலைவர்.
பொதுவாக யுனியன் பிரதேசத்தில் முதலமைச்சர் இருக்க மாட்டார்கள். ஆனால், பாண்டிச்சேரியில் மட்டும் எப்படியிருக்கிறார்கள் என்று கேட்டால், பாண்டிச்சேரி மற்றும் டெல்லியும் இதற்கு விதிவிலக்கு. பாண்டிச்சேரியில் சுதந்திரத்திற்கு முன்பே மக்கள் தங்கள் தலைவரை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
அந்த உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையால்பாண்டிச்சேரியில் சட்டமன்றத்தை உருவாக்கினார்கள். இதுவே டெல்லியில் மக்கள் தொகை ஜாஸ்தி அதனால் நிர்வாக பிரச்னை வரக்கூடாது என்பதற்காக தான் சட்டமன்றமும், முதலமைச்சர் பதவியையும் கொண்டு வந்தார்கள்.
இருந்தாலும் மற்ற மாநிலத்தில் இருப்பதுப்போல முழு அதிகாரம் முதலமைச்சர் கையிலேயே இருக்காதாம். முக்கிய முடிவுகள், நிதி விவகாரம், காவல்துறை போன்ற விஷயங்களில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசு நியமிக்கும் துணைநிலை ஆளுனரிடம் தான் இருக்கும். யுனியன் பிரதேசம் என்றால் என்னவென்று இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.