மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவில் சாவ் நடனம் மிகவும் பிரபலம். இது முகமூடி அணிந்து நடைபெறும் ஒரு நடன நாடகம். யக்க்ஷகானா போல் இதன் சிறப்பே முகமூடிதான். இந்த நடன நாடகத்துக்குத் தேவையான முகமூடிகளை மேற்கு வங்காளத்தின் புருலியா ஜில்லாவில் உள்ள சாரிடா கிராமத்தில்தான் செய்துத் தருகின்றனர்.
கரடு முரடான சாலைகள், கிராமத்தைச் சுற்றி சிறிய மலைகள் என அமைதியைக் கொண்ட இந்த கிராமம் ஜார்க்கண்ட் எல்லையை ஒட்டி உள்ளது. மேற்கு வங்காளத்தின் புருலியா, ஜார்க்கண்ட்டின் செரய்கெல்லா மற்றும் ஒடிசா மயூர்வஞ்ச் பகுதிகளில் இந்த நாட்டிய நாடகம் மிகவும் பிரபலம். மாநிலத்துக்கு ஏற்ப சில மாற்றங்களும் உள்ளன. மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட்டில் இந்த நாட்டிய நாடகம் முழுவதும் முகமூடி அணிந்திருப்பர்.
ஆனால், ஒடிசாவில் அறிமுகத்துக்கு மட்டும்தான் முகமூடி அணிந்திருப்பர். பிறகு கழற்றி விட்டு நாடகத்தைத் தொடர்வர். நாட்டிய நாடகம், பண்டிகை மற்றும் விழாக்களின்போதும் மற்ற வசந்த காலத்திலும் இந்த நாட்டிய நாடகம் நடத்தப்படும். அறுவடை நடந்து முடிந்து புதிய விதை தெளிப்பு சமயத்தில் பொழுது போக இந்த நாட்டிய நாடகத்தை கிராமங்களில் நடத்துவர்.
பாரம்பரியம், தற்காப்புக் கலை, பழங்குடி மக்களின் நாட்டுப்புற நடனம் ஆகியவை இணைந்தது சாவ் நடனம். இது கர்நாடக மாநிலப் பகுதிகளில் நடத்தப்படும் யக்க்ஷகானா போன்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான முகமூடிகளை சாரிடா கிராமக் கலைஞர்கள்தான் தயாரித்துத் தருகின்றனர். சுமார் 190 குடும்பங்கள் நிரந்தரமாக இந்தக் கலையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு முகமூடி தயாரிக்க அதிகபட்சம் ஏழு நாட்கள் ஆகும். யக்க்ஷகானா, ராமாயணக் கதைக்கான முகமூடிகளை இக்கிராமக் கலைஞர்கள் செய்துத் தருகின்றனர். இந்த முகமூடிக்கு சிறப்புக் குறியீடு கிடைத்துள்ளது. யுனெஸ்கோ நாட்டிய நாடகம் மற்றும் முகமூடி தயாரிப்பை, பாரம்பரியக் கலையாக அங்கீகரித்துள்ளது. சுமார் 150 வருடங்களாகத் தொடர்ந்து இந்த முகமூடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர்கள் இவர்கள்.
பார்பி இந்தி திரைப்படத்தில் இது சார்ந்த பல காட்சிகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு இந்தியாவின் பாரம்பரிய நடனத்திற்கு சாரிடா கிராமத்தின் பங்களிப்பு மிகவும் அதிகம்.