நமது முன்னோர்கள் மண் சட்டி பயன்படுத்தியே சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்து வந்தார்கள். ஆனால் நாள்பட பல உலோகங்கள் வந்தால், மண் சட்டியின் மகிமை மறைய தொடங்கியது.
சமையலறையின் வரலாறு என்பது அலுமினியம், எவர்சில்வர் போன்ற உலோகங்கள் வருவதற்கு முன்பே, மண் சட்டி/மண்பாண்டங்களில்தான் எழுதப்பட்டது (claypot cooking benefits).
நம் பாட்டிமார்கள் சமையலுக்காகத் தவறாமல் மண் சட்டியை மட்டுமே பயன்படுத்த காரணம் பாரம்பரியம் மட்டும் அல்ல; இது உணவின் சுவை, சத்துக்கள் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு ஆழ்ந்த அறிவியல் உண்மையாகும்.
மண்பாண்டங்களின் மகிமை
மண்பாண்டங்கள் உணவின் சத்துக்களைப் பாதுகாப்பதில் முதலிடம் வகிக்கின்றன.
உலோகப் பாத்திரங்கள் சூட்டை உடனடியாகவும், அதிகமாகவும் கடத்தும். ஆனால் மண் சட்டி, வெப்பத்தை மிக மெதுவாகவும், சீரான முறையிலும் பாத்திரம் முழுவதும் பரப்பும்.
இந்த மெதுவான சமையல் முறை, உணவில் உள்ள வைட்டமின்கள் (குறிப்பாக வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ்) மற்றும் தாதுக்கள் அதிக வெப்பத்தினால் சிதைந்து போவதைத் தடுக்கிறது. இதனால், உணவின் அசல் ஊட்டச்சத்து மதிப்பு பாதுகாக்கப்படுகிறது.
மண்பாண்டங்கள் இயற்கையாகவே துளைகள் கொண்டவை. சமைக்கும்போது, இந்தத் துளைகள் மூலம் நீராவி வெளியேறும். இதனால் உணவின் உள்ளே போதுமான ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு, எண்ணெய் குறைவாகவே தேவைப்படுகிறது. மேலும், சமையலில் பயன்படுத்தப்படும் மசாலா மற்றும் மூலிகைகளின் இயற்கை மணமும் சுவையும் முழுமையாக வெளிப்படும்.
நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள், அமிலத்தன்மை கொண்டவை. உலோகப் பாத்திரங்கள் உணவின் அமிலத்தன்மையை அதிகரிக்கும். ஆனால், மண் என்பது இயற்கையாகவே காரத்தன்மை கொண்டது.
அதாவது மண் சட்டி, உணவில் உள்ள அமிலத்தன்மையைச் சமன்செய்து, அதை காரத்தன்மைக்கு கொண்டுவருகிறது. இதனால் உணவின் சுவை இயற்கையாகவே மேம்படுவதுடன், அமிலத்தன்மை குறைந்த உணவைச் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானக் கோளாறுகளைத் தடுக்க உதவும்.
மண் பாண்டங்கள் பொதுவாகக் களிமண்ணால் செய்யப்படுகின்றன. இதில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசியக் கனிமங்கள் இயற்கையாகவே உள்ளன.
சமைக்கும்போது, இந்தக் கனிமங்களின் உணவில் கலக்கின்றன. இதன் மூலம், நம் உடல் அன்றாடத் தேவைக்கான சில முக்கியமான தாதுக்களைப் பெற உதவுகிறது. குறிப்பாக, இரும்புச் சத்துக் குறைபாடுள்ளவர்கள் மண் சட்டியில் சமைப்பதன் மூலம் இயற்கையான முறையில் இரும்புச் சத்தைப் பெறலாம்.
மண்பாண்டங்கள் எந்த இரசாயனமும் அற்றவை, சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. மேலும் இவை எந்த நச்சுப் பொருட்களையும் வெளியிடுவதில்லை.
ஆகவே, அதிக சுவை, அதிகச் சத்துக்கள் மற்றும் சிறந்த செரிமானம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் பெறுவதற்கு இன்றே மண்பானை சமயலை தொடங்குங்கள், நம் பாரம்பரியத்தைக் காப்பாற்றுங்கள்.