
நான் சொல்லும் கதையை அப்படியே கற்பனை செய்துக் கொள்ளுங்கள்.
ஒரு நாள் இரவு நீங்கள் யாருமே இல்லாத சாலையில் தனியாக நடந்து சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது ஒரு அழகான பெண் மாஸ்க் போட்டுக் கொண்டு உங்களிடம் வந்து, 'நான் அழகாக இருக்கிறேனா?' என்று கேட்கிறாள். நீங்களும், 'ஆமாம். அழகாக இருக்கிறாய்!' என்று சொல்கிறீர்கள்.
இப்போது அந்த பெண் அவள் அணிந்திருக்கும் மாஸ்க்கை கழட்டுகிறாள். அவளுடைய வாய் கிழிந்திருக்கிறது. 'இப்போதும் நான் அழகாக இருக்கிறேனா?' என்று உங்களை பார்த்துக் கேட்கிறாள். இந்த சூழ்நிலையில் இதற்கு நீங்கள் எப்படி பதில் அளிப்பீர்கள்?
இது தான் ஜப்பானில் சொல்லப்படும் குச்சிசாகி ஒன்னாவின் கதை. ஜப்பானில் 1979 ல் மாணவர்களை மர்மமான ஒரு உருவம் துரத்தியிருக்கிறது. நிறைய பேரிடம் சென்று, 'நான் அழகாக இருக்கிறேனா?' என்று கேட்டிருக்கிறது. இந்த கதை ஊர் முழுவதும் பரவி எல்லோரும் பயப்பட ஆரம்பித்துள்ளனர். பள்ளியில் வகுப்பின் நேரத்தை குறைக்கிறார்கள்; பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளியே அனுப்ப பயப்படுகிறார்கள்; போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்கிறார்கள்.
குச்சிசாகி ஒன்னா ஜப்பானில் மிகவும் பிரபலமான நாட்டுப்புற கதைகளில் ஒன்றாகும். கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு முன் ஒரு அழகான பெண் ஜப்பானில் வாழ்ந்திருக்கிறாள். அவளை ஒரு சாமுராய்க்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவர் போருக்கு சென்றுவிட்டு வேறு ஒரு ஊரில் ஒரு குடும்பத்துடன் வாழ்கிறார். அந்த செய்தியை கேள்விப்பட்ட பெண்ணும் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்த ஆரம்பிக்கிறாள்.
ஒருநாள் அந்த சாமுராய் ஊருக்கு வருகிறார். இந்த பெண் வேறு ஒருவருடன் வாழ்வதை பார்த்த அவருக்கு சரியான கோபம் வருகிறது. 'நீ அழகாக இருப்பதால் தானே இப்படி செய்கிறாய்?' என்று கூறி கத்தரிக்கோலால் அவளுடைய வாயை வெட்டி விடுகிறார். இதனால் அந்த பெண் தன்னுடைய முகத்தையே கண்ணாடியில் பார்க்க முடியாமல் தற்கொலை செய்து இறந்து போகிறாள். அந்த பெண் தான் குச்சிசாகி ஒன்னா. அவள் பேயாக மாறி அந்த ஊர் மக்களை தண்டிக்கிறாள் என்பது கதை.
இவள் நீங்கள் தனியாக நடந்து செல்லும் போது மாஸ்க் போட்டுக் கொண்டு வந்து உங்களிடம், 'நான் அழகாக இருக்கிறேனா?' என்று கேட்பாள். நீங்களும், 'அழகாக இருக்கிறாய்!' என்று சொன்னால் அவளுடைய மாஸ்க்கை கழட்டி விட்டு, 'இப்போதும் அழகாக இருக்கிறேனா?' என்று கேட்பாள். நீங்கள் 'இல்லை' என்று சொன்னால் அதனிடம் இருக்கும் கத்தரிக்கோலை வைத்து உங்களை குத்தி கொன்றுவிடும்.
நீங்கள், 'அழகாக இருக்கிறாய்!' என்று பதிலளித்தாள். 'அப்படியானால் நீயும் என்னைபோலவே மாறிவிடு!' என்று கூறி கத்தரிக்கோலால் உங்கள் வாயை அவள் வாய்ப்போல கிழித்து விடுவாள். இதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. அவளுடைய கேள்விக்கு சம்மந்தம் இல்லாத பதிலை சொல்லி அவளை குழம்பிவிட்டு அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது தப்பித்து ஓடிவிட வேண்டும் என்று சொல்கிறார்கள் இந்த கதையில்.