
திருச்சி காவிரியின் கொள்ளிடம் நதியின் வடகரையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர் அருகே, கங்கை கொண்ட சோழபுரம் தற்போது ஒரு சிற்றூர் ஆனால், 1000 ஆண்டுகளுக்கு முன்பு அது நவீன உலகிற்கு அடித்தளமிட்ட ஒரு நகரம் என்பது தெரியுமா?
சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழன் (கிபி.,1012-1044) தனது படையை இந்தியாவின் வட பகுதிகளை நோக்கி புனித நதியான கங்கையில் இருந்து தண்ணீர் எடுக்க அனுப்பினார். வழியில் பல எதிரிப் படைகளை தோற்கடித்து வெற்றியுடன் தாய்நாட்டிற்கு திரும்பி வந்தனர். இதனால் கங்கைகொண்ட சோழன் அல்லது கங்கையை வென்றவன் என்ற புனைப்பெயரை அவர் பெற்றார். எனவே அவர் ஒரு புதிய தலைநகரை நிறுவியபோது அதற்கு கங்கைகொண்ட சோழபுரம் என்று பெயரிட்டார், பின்னர் கோவில் கட்டப்பட்டபோது அதுவும் அதே பெயரைப் பெற்றது.
முதலாம் இராஜராஜசோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள மிகப்பெரிய கங்கைகொண்டசோழீச்சரர் கோவில் , அரியலூர் பகுதியில் மிகச்சிறந்த ஒன்றாகும். கி.பி 1023 இல், கங்கை சமவெளியை வெற்றி கொண்ட பின்னர் முதலாம் இராஜேந்திர சோழனால், கங்கைகொண்டசோழபுரம் எனும் நகரமும் கங்கைகொண்டசோழீச்சரம் எனும் சிவன் கோவிலும் சோழ கங்கம் எனும் ஏரியும் வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்டது.
இம்மூன்றும், கங்கை நதிகரையில் சோழர்களின் புலிக்கொடியை ஏற்றிய தமிழர்களுடைய வீரத்தின் நினைவுச்சின்னங்களாக இன்றும் விளங்குகின்றன. அவன் தனது தலைநகரத்தை தஞ்சாவூரிலிருந்து புதிதாகக் கட்டப்பட்ட இங்கு மாற்றினான். அவனது காலத்திலிருந்து, கி.பி 1279 இல் ஆட்சி செய்த சோழர் வம்சத்தின் இறுதிவரை, சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக 256 ஆண்டுகள் இருந்தது. அவர் இங்கு கட்டப்பட்ட பிரம்மாண்டமான கற்கோவில், இடைக்கால சோழர் காலத்திய அழகான சிற்பங்கள் நிறைந்த களஞ்சியமாகும். இந்த நகரம் ஒட்டக்கூத்தரின் மூவர் உலா, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும், உலகின் சில நாடுகளையும் ஆட்சி செய்த ஒரே மன்னர் ராஜேந்திர சோழன் மட்டுமே.தனது ஆயுட் காலத்தில் சுமார் 65 ஆண்டுகள் போர்க்களத்திலேயே கழித்தவர். உலகின் மிகப்பெரிய படையை வைத்திருந்தவர் கிட்டத்தட்ட மில்லியன் கணக்கான சிப்பாய்களை வைத்திருந்தவர்.
பிரியாணியின் ஆரம்ப அடிச்சுவடு தமிழ் நாடுதான் என்பது தெரியுமா? ஆம் தென் கிழக்கு ஆசியா முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ராஜேந்திர சோழன்தான்.
தன்னுடைய படை வீரர்கள் பலத்துடன் போர்களில் போரிட "ஊன் கலந்த நெய் சோறு" வழங்கும்படி முதல் முதலாக ஆணையிட்டவர். அந்த ஊன் சோறு பின்னர் பிரியாணியாக உருவெடுத்தது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
தன் படைவீரர்களுக்கு, தன் நாட்டு மக்கள் மற்றும் உலகின் சில நாட்டினருக்குக்காகவும் கங்கை கொண்ட சோழபுரத்தில் பல வகையான உணவுப் பொருட்களை வைத்திருக்கும் சூப்பர் மார்க்கெட் போன்ற ஓர் அமைப்பை 1000 ஆண்டுகளுக்கு முன்னரே வைத்திருந்தவர் ராஜேந்திர சோழன் அதுதான் "திருப்புவன மாதேவி பெருங்காடி "எனும் பெயரில் இருந்த தானிய கிடங்கு. கங்கை கொண்ட சோழபுரத்தில் கடைகள் இருந்தன அதற்கு பெயர் "முடி கொண்ட சோழன் மடிகை"இந்த மடிகை என்ற வார்த்தையிலிருந்துதான் தற்போது கடைகளுக்கு பயன்படுத்தும் "மளிகை"என்ற பெயர் வந்தது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
48 அடி அகலமான வீதியில், 24 மணி நேரமும் இயங்கிய மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் இருந்துள்ளன.நகரின் உட்புறத்தில், கிழக்கு-மேற்காகவும், வடக்குத்-தெற்காகவும் வரிசை வரிசையாக அமைக்கப்பட்ட வீதிகள் இருந்துள்ளன. ஒவ்வொரு வீதியிலும், முக்கியப் பிரமுகர்கள் வசிப்பதற்காகக் கட்டப்பட்ட வீடுகளும் இருந்துள்ளன.
மன்னர் ராஜேந்திரன் காலத்தில், கங்கைகொண்ட சோழபுரம் நகருக்கு இருந்த பல பெருமைகளுள் ஒன்று, எதிரிகளின் எந்த ஒரு படையெடுப்பையும் சந்திக்காத தலைநகர் என்பது ஆகும். தன் நகரை அந்நியர்கள் உள்ளே நுழைய முடியாதபடி 6 மைல் நீளம், 6 மைல் அகலம் என்ற அளவில், நகரைச் சுற்றிலும் வெளிப்புறத்தில் கட்டப்பட்டு, 'ராஜேந்திர சோழன் மதில்' என்ற பெயரைப் பெற்ற மிகப்பெரிய கோட்டைச் சுவர்கள் இருந்துள்ளன.
பாண்டியர்களின் படையெடுப்பு, ஆங்கிலேயப் படைகளின் அட்டூழியம் ஆகியவை காரணமாக, கங்கைகொண்ட சோழபுரம் நகரம், அங்கு இருந்த சோழ மன்னர்களின் அரண்மனைகள், வணிக வளாகங்கள், பொதுமக்களின் வீடுகள் ஆகிய அனைத்தும் தரைமட்டமாகிவிட்டன எஞ்சியது கங்கை கொண்ட சோழபுரம் கோயில் மட்டுமே.