
ஓரிகாமி என்பது பேப்பரை மடித்து, பூ, பறவை, விலங்கு, வாகனம் போன்ற பலவகையான டிசைன்களை உருவாக்கும் ஜப்பானியக் கலையாகும். இதை தமிழில் 'காகித மடிப்புக் கலை' என்பர்.
ஓரிகாமி என்ற பெயர் ஜப்பான் மொழியிலிருந்து வந்தது. 'ஓரி' (Ori) என்றால் மடித்தல் என்றும் 'காமி' (gami) என்றால் காகிதம் என்றும் பொருளாகும். கிரிகாமி என்பது ஓரிகாமியின் அடுத்த முன்னெடுப்பு எனலாம். இதுவும் மற்றொரு ஜப்பானிய கலையாகும். ஓரிகாமியில் காகிதத்தை மடித்து டிசைன்களை உருவாக்குபவர். கிரிகாமியில் காகிதத்தை மடித்தும் வெட்டியும் பல வகையான சிக்கலான உருவங்களையும் டிசைன்களையும் செய்து முடிப்பர்.
ஜப்பான் மொழியில் 'கிரு' என்றால் வெட்டு என்ற பொருளாகும். இரண்டிற்கும் உள்ள வித்யாசம் இது ஒன்றுதான். கிரிகாமியில் பேப்பர் வெட்டப்பட்டு மடிக்கப்படுவதால் முப்பரிமாண (3D forms) வடிவங்களை உருவாக்க முடிகிறது. கிரிகாமியில் பொதுவாக பசை பயன்படுத்துவதில்லை. சிம்பிள் ஜியோமெட்ரிக் வடிவம் முதல் கலைநயம் மிக்க ஒரு ஆடை அல்லது கட்டிடத்தின் வடிவமைப்புக்கு உதவும் மாதிரி (Model) களை கிரிகாமியில் செய்து காட்ட முடியும்.
இரண்டிற்கும் தேவைப்படும் அடிப்படை உபகரணங்கள் கத்திரிக்கோல் மற்றும் துல்லியமாக வெட்ட உதவும் கத்தி. உபயோகப்படுத்தும் காகிதம் சுலபமாக கிழிந்துவிடாத, தரமானதாக இருப்பது அவசியம்.
ஆரம்ப பயிற்சியாளர்கள் முதலில் சிம்பிள் டிசைன்களை வடிவமைத்து விட்டுப் பின், காகிதத்தை மடிப்பதிலும், வெட்டுவதிலும் முழுத்திறமை பெற்ற பிறகு சிக்கலான, நவீனமான டிசைன்களை கிரிகாமியில் உருவாக்கலாம்.
கிரிகாமியைப் பயன்படுத்தி பல வகையான வடிவங்களை உருவாக்கலாம். அவை அலங்காரப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் பல வடிவமைப்பு வேலைகளுக்குப் பயன்படுகின்றன.
கிரிகாமி இயந்திரவியல் மற்றும் கட்டமைப்பு வடிவமைப்பு போன்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. கிரிகாமியின் கொள்கைகளைப் பயன்படுத்தி, குறைந்த எடையில் வலிமையான கட்டமைப்புகளை உருவாக்கும் தொழில் நுட்பங்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்டிடக் கலை மற்றும் ஆடை வடிவமைப்பு போன்ற ஃபேஷன் தொழில் நுட்பக் கலைகளிலும் கிரிகாமியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கட்டிடக் கலை நிபுணர்கள் மிக விரைவாக கிரிகாமியின் துல்லியமான கருத்துக்கள் மற்றும் விளக்கங்களை உள்வாங்கி, அவற்றை செயல்முறை வடிவாக்கம் செய்வதில் சிறந்து விளங்குகின்றனர்.
ஆடை வடிவமைப்பாளர்களும் ஆடைகளில் தனித்துவம் மிக்க டிசைன், வடிவம் மற்றும் டெக்ச்சர்களை உருவாக்கி அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கிரிகாமி ஆர்ட் மேன் மேலும் வளரவும் நவீன கண்டுபிடிப்புகள் பெருகவும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!