சுமேரியர்களின் முப்பெருங்கடவுள்கள்!

Anu, Enki, Enlil God
Anu, Enki, Enlil God

இந்து சமயத்தில், அண்டத்தையும் அதில் உள்ள உயிர்களையும் உருவாக்கும் படைத்தல் தொழிலைச் செய்பவராகப் பிரம்மாவையும், அவ்வாறு படைக்கப்பட்டவற்றைப் பாதுகாக்கும் காத்தல் தொழிலைச் செய்பவராகத் திருமாலையும், அழித்தல் தொழிலைச் செய்பவராகச் சிவனையும் குறிப்பிடுகின்றனர். இந்து சமயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் மும்மூர்த்திகள் என்றும், முப்பெரும் கடவுளர் என்றும் அழைக்கப்படுகின்றனர். 

இதே போன்று சுமேரியாவிலும் (தற்போதைய ஈராக் நாடு) மும்மூர்த்தி வழிபாடே மூல வழிபடாக இருந்திருக்கிறது. அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்!

சுமேரிய சமயக் கோட்பாடுகள் அனைத்தும் மழை, வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. இங்கிருந்த ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனிச் சிறு தெய்வங்கள் இருந்த போதிலும், அனு, என்கி, என்லில் என்று மூன்று கடவுள்களே முதன்மைக் கடவுள்களாக இருந்திருக்கின்றனர்.

முதன்மைக் கடவுள்களில் முதலாவதாக இருக்கும் ‘அனு’ என்பவர் வான் கடவுளாக இருக்கிறார். இவர் வானம், சொர்க்கம் மற்றும் விண்மீன்களுக்கு அதிபதி ஆவார். 'அனு' எனும் கடவுளே, மற்ற கடவுள்கள், தேவதைகள் மற்றும் அசுர தேவதைகளின் உற்பத்திக்குக் காரணமானவர். அனைத்துக் கடவுள்களுக்கும் இவரே தலைமைக் கடவுள். 'அனு' கடவுளின் மனைவியாக ஊராஸ் தேவதை இருந்தது. பிந்தைய சுமேரியக் குறிப்புகளின் படி, அனு கடவுளின் துணைவியாக, பூமியின் பெண் கடவுளான ‘கீ’ தேவதை குறிப்பிடப்பட்டுள்ளது. அனு கடவுள் மற்றும் கீ தேவதைக்குப் பிறந்த குழந்தைகள் ‘அனுன்னாகி’ என்று அழைக்கப்படுகின்றனர். அனுன்னாகி எனப்படும் கடவுள்களும், தேவதைகளும் பண்டைய சுமேரியர்கள், அக்காதியர்கள், அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் வணங்கிய கடவுளர்களின் கூட்டமாகும்.

முதன்மைக் கடவுள்களில் இரண்டாவதாக இருக்கும் ‘என்கி’ என்பவர் கடல் கடவுள். என்கி எனில் பூமியின் தலைவர் என இங்கு பொருள் கொள்ளப்படுகிறது. சுமேரிய ஆப்பெழுத்துக் கல்வெட்டுகளில், கடவுள் என்றும் தலைமைப் பூஜாரி என்றும் இவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. இவர், படைப்பு, அறிவு, கைவினைத் தொழில், நீர், சட்டம் இயற்றுதல், வளம், விந்து, மாயாஜாலம் மற்றும் துயரத்தின் அதிபதியாக இருக்கிறார். சுமேரியக் கடவுளான இவரது சின்னம் ஆடு மற்றும் மீன் ஆகும். இக்கடவுளின் துணைவிகளாக நின்ஹர்சக்கி, நின்சர், நின்குர்ரா மற்றும் தம்கினா என்று நால்வர் இருக்கின்றனர். இவருக்குப் பிறந்த குழந்தைகள் உது, மர்துக், நின்சர், நின்குர்ரா மற்றும் நின்டி ஆவார். இக்கடவுளை இட்டைட்டுகள், ஹுரியத் மக்கள் மற்றும் கானானியர்கள் வழிபட்டனர்.

இதையும் படியுங்கள்:
கொள்ளை அழகு கிளியோபாட்ரா: வரலாற்று நாயகி, எகிப்தின் கடைசி ராணி!
Anu, Enki, Enlil God

முதன்மைக் கடவுள்களில் மூன்றாவதாக இருக்கும் ‘என்லில்’ என்பவர் காற்றுக் கடவுள். பண்டையச் சுமேரிய மொழியில் ‘என்’ என்பதற்கு கடவுள் என்றும், ‘லில்’ என்பதற்கு காற்று என்றும் பொருள். இக்கடவுள் காற்று, பூமி மற்றும் சூறாவளிக்கு அதிபதி ஆவார். என்லில் கடவுளை அக்காதியர்கள், பாபிலோனியர்கள, அசிரியர்கள், ஹுரியத் மக்கள் வழிபட்டனர்.  

இந்த முப்பெருங்கடவுள்களைத் தவிர, கீ எனும் பூமியின் பெண் கடவுள், சூரியக் கடவுளான உது, மழை மற்றும் புயல் கடவுளான ஆதாத், செழுமைக்கான பெண் கடவுள் இஸ்தர், நீர், நியாயத் தீர்ப்பு மற்றும் மாயாஜாலத்திற்கான கடவுளாக மர்துக், எழுத்தறிவு, அறிவியல், சாத்திரங்கள் மற்றும் ஞானத்திற்கான கடவுளாக நாபூ, இசுதாரின் இணைக் கடவுளாக துமுழி, தூதுக் கடவுளாக இசிமூத், நன்னீர்க் கடவுளாக அப்சு, அனு மற்றும் கி கடவுளரின் வழித்தோன்றல்களாக அனுன்னாகி, மனிதத் தலையுள்ள காளை மாடுகள் போன்ற கடவுள்களையும் சுமேரியர்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com