
காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் மற்றும் போச்சம்பள்ளி பட்டுப் புடவைகள் (Kanchipuram silk Vs Pochampally silk) இரண்டுமே தென்னிந்தியாவின் பாரம்பரிய பட்டுப் புடவைகள் தான். ஆனால், அவை நெசவு நுட்பங்கள், வடிவமைப்பு மற்றும் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளன. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. உருவாகும் இடம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திலிருந்து காஞ்சிபுரம் பட்டு உருவாகிறது. அதன் தனித்துவமான மற்றும் வளமான பட்டுக்கு பெயர் பெற்றது. போச்சம்பள்ளி பட்டு தெலங்கானாவில் உள்ள பூதான் போச்சம்பள்ளி என்ற ஊரில் இருந்து தயாராகிறது. இது இக்காட் நெசவு நுட்பத்திற்கு பெயர் பெற்றது.
2. நெசவு நுட்பம்
இதில் பட்டு நூல்கள் மட்டும் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் பட்டு நூல்கள் சாயமிடப்பட்டு பின்னர் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் நெய்யப்படுகின்றன. இவற்றில் அடர்த்தியான கான்ட்ராஸ்டிங் பார்டர்கள் உடன் பாரம்பரியமான உருவங்களைக் கொண்ட மயில்கள், கோயில்கள், பூக்கள் போன்ற வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
போச்சம்பள்ளி புடவைகளில் தனித்துவம் வாய்ந்த இக்கட் முறை பயன்படுத்தப்படுகிறது. நூல்கள் முதலில் தொகுக்கப்பட்டு, பின்னர் சிறந்த வேலைத்திறன் கொண்ட வடிவங்களுக்கு ஏற்ப முறுக்கப்பட்டு வண்ணம் பூசப்படுகின்றன. பின்னர் பலவிதமான பேட்டர்ன்களில் நெசவு செய்யப்படுகிறது. வடிவமைப்பின் அடிப்படையில் ‘ஒற்றை இக்கட்’ மற்றும் ‘இரட்டை இக்கட்’ துணிகள் பயன்படுத்தப்படுகின்றன. பருத்தி, பட்டு மற்றும் சிகூ நூல்களைப் பயன்படுத்தி புடவைகள் நெய்யப்படுகின்றன.
3. டிசைன்கள்
காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளின் பார்டரில் கோயில், செக்டு டிசைன்கள், கோடுகள், பூக்கள் போன்றவை டிசைன் செய்யப்படுகின்றன. போச்சம்பள்ளி பட்டில் பெரும்பாலும் கண்ணைக் கவரும் பலவித வண்ணங்களும் டிசைன்களும் உள்ளன.
4. பட்டின் தரம்
உயர்தரமான கனமான மல்பரிப்பட்டு கொண்டு காஞ்சிபுரம் புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இதனுடைய ஆயுள் நீடித்திருக்கும். இதன் பளபளப்பு நீண்ட காலம் நிலைத்திருக்கும். நல்ல கனமான புடவைகள் இவை. போச்சம்பள்ளி பட்டு புடவைகள் நல்ல தரமான பட்டு நூலிலிருந்து தயாராகின்றன. ஆனால், பெரும்பாலும் பருத்தி உடன் கலந்து நெய்யப்படுவதால் அணிவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும்.
5. ஜரிகை வேலைப்பாடு
காஞ்சிபுரம் பட்டில் ஜரிகை வேலைப்பாடு தனிச்சிறப்பாக அமைந்திருக்கும். இதில் தூய தங்கம் அல்லது வெள்ளியால் ஆன சரிகை பயன்படுத்தப்படுகிறது. போச்சம்பள்ளிப்பட்டில் சிக்கலான ஜரி வேலைப்பாட்டிற்கு அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது.
6. கலாசார முக்கியத்துவம்
தென்னிந்திய திருமணங்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளில் பெரும்பாலும் காஞ்சிபுரம் பட்டு பயன்படுத்தப்படுகிறது. தெலங்கானாவிலும் திருமணங்கள் மற்றும் பண்டிகை நிகழ்வுகளுக்கு போச்சம்பள்ளி பட்டை பயன்படுத்துகிறார்கள். சிறு விசேஷங்களுக்கும் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கும் இது ஏற்றது.
7. வண்ணங்கள்
காஞ்சிபுரம் பட்டில் நல்ல ஆழ்ந்த வண்ணங்களான மெரூன், சிவப்பு, பச்சை மற்றும் தங்க நிறங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பார்ப்பதற்கு மிகுந்த அழகான தோற்றத்தை அளிக்கின்றன. இரட்டை டோன் அல்லது ட்ரிப்பிள் டோன் எனப்படும் லைட் கலர் மற்றும் டார்க் கலர்களை இணைத்து உருவாகின்றன. போச்சம்பள்ளி பட்டு நல்ல அழுத்தமான கான்ட்ராஸ்டிங் வண்ணங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படுகின்றன.
8. தயாராகும் விதம்
காஞ்சிபுரம் பட்டில் முதலில் உடல், பார்டர் மற்றும் முந்தி போன்றவை தனித்தனியாக நெய்யப்பட்டு அதன் பின்பு ஒன்றிணைக்கப்படுகின்றன. அதனுடைய டிசைன் மற்றும் ஜரிகை வேலைப்பாட்டிற்கேற்ப காலநீட்டிப்பு ஏற்படலாம். ஒவ்வொரு நூலும் டை செய்யப்பட்டு அதன் பின்பு போச்சம்பள்ளி நெய்யப்படுகிறது. ஒரு புடவை நெய்து முடிக்க பல வாரங்கள் ஆகும்.
9. விலை
காஞ்சிபுரம் புடவைகள் அதனுடைய தரம் மற்றும் வெள்ளி, தங்க ஜரிகை வேலைப்பாட்டிற்கு ஏற்ப விலை அதிகமாக இருக்கும். போச்சம்பள்ளி பட்டு விலை குறைவாக இருக்கும். புடவைகளின் தரம் மற்றும் இக்கட்டு பாட்டர்ன்களின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
10. பாதுகாப்பு
காஞ்சிபுரம் புடவைகளை ட்ரை கிளீனிங் முறையில் மட்டுமே துவைக்க முடியும். முறையாக மடித்து வைத்தால் தான் நீடித்து உழைக்கும். ஆனால், போச்சம்பள்ளி பட்டுப் புடவைகளை மெயின்டைன் செய்வது எளிது. எனவே, கையால் துவைக்கலாம் அல்லது ட்ரை கிளீன் செய்யலாம்.