பொழுதுபோக்கு அம்சங்களான தெருக்கூத்து, நாடகம் போன்று கும்மியையும் மக்கள் பயன்படுத்தி வந்தனர். கும்மி என்பது கொம்மை கொட்டுதல் என இலக்கியம் கூறுகிறது. கொம்மைதான் கும்மியாக திரிந்திருக்கலாம். முருகன் மற்றும் அவரது மனைவி வள்ளி இவர்களது வாழ்க்கை, வள்ளி பிறப்பு முதல் திருமணம் வரையிலான வாழ்க்கையை பாடி கும்மி ஆடுவதுதான் வள்ளி கும்மி. இந்த பாரம்பரிய வள்ளி கும்மியைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
கும்மி என்பது மெல்ல நடந்து நடந்து அடித்தல், நடந்து நின்று அடித்தல், குனிந்து நிமிர்ந்து அடித்தல், குதித்துக் குதித்து அடித்தல், தனது கையைக் கொட்டி அடித்தல், எதிரில் உள்ளவர்கள் கைகளுடன் கொட்டியடித்தல் ஆகிய ஆறு நிலைகளில் கும்மியடிக்கப்படுகிறது.
வள்ளி கும்மி என்பது முருகன், வள்ளி பிறப்பு முதல் திருமணம் வரை உள்ள செய்திகளை பாடுவதாக வள்ளிக் கும்மி அமைகிறது. மேலும், கொங்கு நாட்டின் நாகரிகம், பண்பாட்டை எடுத்துச்சொல்லும் வகையில் வள்ளி கும்மி உள்ளது.
ஆயற்கலை 64ல் முதன்மையானது வள்ளிக் கும்மி. முறையாக பயிற்சி பெற்றே இதனை அரங்கேற்றம் செய்கிறார்கள். முன்னர் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்த வள்ளி கும்மியாட்டத்தில் தற்போது பெண்களும் அதிக அளவில் கலந்து கொள்கின்றனர். 40 நாட்கள் அல்லது 30 நாட்கள் முறையாக பயிற்சி பெற்று அதற்கு முறையாக பூஜை செய்து சலங்கை அணிந்து அரங்கேற்றம் செய்வார்கள். அரங்கேற்றம் என்பது தனக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் அமையும்.
பண்டைய காலத்தில் கும்மியாட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்துள்ளது. எந்த ஒரு பாரம்பரிய கலைக்கும் கலைஞர்கள் உள்ளனர் என்றால் வள்ளி கும்மி ஆட்டத்தில் அந்தந்த கிராம மக்களே கலைஞர்களாக மாறிவிடுவர். மக்களை ஒன்றுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட கிராமக் கலை இது.
கும்மிகளில் பலவகை உண்டு. அதில் பிரத்தியேகமாக வள்ளி கும்மியில் சில அசைவுகள் மாறுபடுகின்றன. பவளக்கொடி, அரிச்சந்திரன், காளிங்கராயன், முளைப்பாரி என பலவகை இருந்தாலும் கூட கொங்கு பகுதியில் பின்பற்றக்கூடியது வள்ளி கும்மி நடனம் ஆகும்.
வள்ளி கும்மி ஆடுவதற்கு முன்னர் முதலில் காப்புப் பாடல்களைப் பாடி துவங்குவார்கள். விளை நிலத்தில் பாடுபடும் மக்களை உற்சாகப்படுத்த வள்ளி கும்மி ஆடினர். இதில் ஒரு அறிவியலும் அடங்கியுள்ளது. என்னவென்றால் உடலில் வலதுபுற உறுப்புகள் செயல்பட இடதுபுற மூளை வேலை செய்யும். இதேபோல இடதுபுற உறுப்புகள் செயல்பட வலது புற மூளை வேலை செய்ய வேண்டும். அவ்வகையில் மூளை சமன்பாட்டை வள்ளி கும்மி வாயிலாக ஏற்படுத்தியுள்ளனர்.
வலச்சுழி செய்தால் இடப்புறமாக திரும்புவதும் இடச்சுழி செய்தால் வலப்புறமாக திரும்புவதும் வள்ளி கும்மியில் உள்ளது. பாடலும் ஆடலும் கூடிய உள்ளங்கை கொட்டும்போது மனிதனின் மூளை சுறுசுறுப்படைகிறது. தற்போது அரசு விழாக்கள், கோயில் திருவிழாக்களில் வள்ளி கும்மியாட்டம் புத்துயிர் பெற்றுள்ளது.
வள்ளி கும்மி ஆட்டம் மூலம் மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல், இயற்கை வளம், மது, புகை, பிளாஸ்டிக் ஒழிப்பு, சாலை போக்குவரத்து விழிப்புணர்வு, தூய்மை பணி உள்ளிட்டவை குறித்தும் பாடல்கள் பாடி நடனம் மூலம் புதுமையாக விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தி வருகின்றனர்.