ஒரு நாட்டிற்கு பெருமையும் அடையாளத்தையும் ஏற்படுத்தும் விஷயங்களில் தேசிய கீதம் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு இந்தியனும் உயிர்மூச்சாகக் கருதும், 'ஜன கண மன' என்ற பாடல் நம் நாட்டின் தேசிய கீதமாக உருவான பின்னணி குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடல் வங்காள மொழியில் எழுதப்பட்டது எனக் கூறப்பட்டாலும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறைய வார்த்தைகள் சாது பெங்காலி அல்லது டாட்சமா பெங்காலி (Sathu Bengali or Tatsama Bengali) எனும் வங்காளக் கிளை மொழி வங்காள வகையைச் சேர்ந்தவை.
இந்தக் கிளை மொழிகளில் சமஸ்கிருதமும் கலந்திருக்கும். இந்தப் பாடலை எழுதியவர் புகழ் பெற்ற கவிஞரும், ஓவியரும், நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்திரநாத் தாகூர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1911ல் தாகூரால் எழுதப்பட்ட ஐந்து பத்திகளை உள்ளடக்கிய பாடல், `பாரத்தோ பாக்யோ பிதாதா’ (Bharato bhagya Bidhata) என்ற வங்காள மொழி பாடலின் முதல் பத்தியே `ஜன கண மன’ என நம்முடைய தேசிய கீதமாக தற்போது உள்ளது.
1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கல்கத்தாவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட இந்தப் பாடல் பின்பு, 1941ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் பாடப்பட்டது. இந்துஸ்தானி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இப்பாடல் `சுப் சுக் செயின்’ (Subh sukh chain) என்னும் பெயரில் இந்திய தேசியப் படையின் (IAN) சந்திப்புக் கூட்டங்களில் சுபாஷ் சந்திரபோஸின் வேண்டுகோளின்படி உணர்ச்சி பொங்கப் பாடப்பட்டது.
1943ம் ஆண்டு இந்திய தேசிய படையைச் சேர்ந்த அபித் அலி, மும்தாஜ் ஹூசைன் இந்தி, உருது இரண்டும் கலந்த மொழியான இந்துஸ்தானி மொழியில் இந்தப் பாடலின் கருத்துக்கள் வெகுவாக சென்று சேர வேண்டும் என மொழிபெயர்த்தனர்.
நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரம் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் ‘ஜன கண மன பாடல், அயர்லாந்து எழுத்தாளர் ஜேம்ஸ் கசினின் மனைவி மார்கரெட் என்ற பெண்மணியால் இந்தியாவின் காலை பாடல் (Morning song of India) என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.`ஜன கண மன’ இந்தியாவின் தேசிய மொழிகளான 22 மொழிகளிலும், வேறு பல மொழிகளிலும்கூட மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
நீண்ட நாட்களாக இந்தியாவின் தேசிய கீதத்தை தேர்ந்தெடுப்பதைப் பற்றிய விவாதம் நிலுவையில் இருந்த நிலையில், 'ஜன கண மன' என 52 வினாடிகளில் பாடப்படும் தேசிய கீதத்தை இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் 1950ம் ஆண்டு, ஜனவரி 24ம் தேதி இதை ஓர் அறிவிப்பின் மூலம் உறுதி செய்தார்.