சென்னையின் பாரம்பரிய கட்டடமான விக்டோரியா பப்ளிக் ஹால் பற்றித் தெரியுமா?

Victoria public hall
Victoria public hall
Published on

சென்னையின் பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றான விக்டோரியா பப்ளிக் ஹால் அதாவது விக்டோரியா பொதுக் கூடம் வெகுவிரைவில் மறுபடி திறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

சென்னை மாநகராட்சி கிபி 1688 ஆவது ஆண்டு தொடங்கப்பட்டது. இது இலண்டனுக்கு அடுத்தபடியாக உலகில் மிகவும் பழமையான நகராட்சி. நகராட்சியில் மக்கள் கூடுவதற்கு பொதுவானதொரு கூடம் வேண்டும் என்ற கோரிக்கை பலகாலம் இருந்து வந்த போதிலும், அது 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் சாத்தியமானது.

கிபி 1882 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில் இத்தகையதொரு கட்டடம் கட்ட வேண்டும் என்கிற முடிவெடுக்கப்பட்டது. 17 டிசம்பர் 1883 ஆம் ஆண்டு விஜயநகரத்தின் அரசராக இருந்த சர் பூசபாட்டி ஆனந்த கஜபதி ராஜு அவர்கள் பொதுக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், அவர் கட்டட கட்டுமான வேலைகளுக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தார்.

மேலும், திருவிதாங்கூர் மகாராஜா, மைசூர் மகாராஜா, புதுக்கோட்டை ராஜா, சென்னை நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சர் முத்து சுவாமி அய்யர் மற்றும் பி.ஓ.ஆர் சன்ஸ் நிறுவனத்தார்கள் போன்றவர்கள் நன்கொடை அளித்தனர். மேலும், இராமநாதபுரம் இராஜாவான பாஸ்கர சேதுபதி, எட்டயபுரம் ஜமீன்தார் மற்றும் ஹட்ஜி அப்துல் பாட்சா சாஹிப் போன்றோர்களும் நன்கொடை அளித்தனர்.

ராபர்ட் ஃபெல்லோஸ் சிசம் கட்டடத்தை வடிவமைக்க, பிரபல கட்டுமான ஒப்பந்தக்காரரான நம்பெருமாள் செட்டி அதனைக் கட்டி முடித்தார். இதனைக் கட்டி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனது. இது இந்தோ- சார்சனிக் பாணியில் கட்டப்பட்டது.

கிபி 1887 ஆம் ஆண்டு இது கன்னிமரா பிரபு அவர்களால் திறக்கப்பட்டது. கிபி 1888 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்த கூட்டத்தில், இதற்கு விக்டோரியா பொதுக் கூடம் என பெயர் மாற்றம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது. விக்டோரியா மகாராணி பதவியேற்ற 50 வருடங்கள் முடிவடைந்ததைக் கொண்டாடும் விதத்தில் இத்தகைய பெயர் மாற்றம் நிகழ்ந்தது.

கிபி 1892 முதல் இங்கு பம்மல் சம்பந்த முதலியார் சுகுண விலாஸ் சபையின் மூலம் நாடகங்களை அரங்கேற்றத் துவங்கினார். இந்த நாடகங்களுக்குப் பெரிய வரவேற்பு இருந்தது.

கிபி 1897 இல் இங்கு சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவினை ஆற்றினார்.

கிபி 1897 இல் மதராஸ் போட்டாகிராபிக் ஸ்டோரின் உரிமையாளரான டி. ஸ்டீபன்சன் முதன்முறையாக மக்களுக்குச் சினிமாவினைத் திரையிட்டார்.

கிபி 1915 இல் இங்கு காந்தி அடிகள் சொற்பொழிவு ஆற்றினார். மேலும், இங்கு சர்தார் வல்லபாய் பட்டேல், கோபாலகிருஷ்ண கோகலே என பல தலைவர்கள் சொற்பொழிவு ஆற்றியுள்ளனர்.

20 நவம்பர் 1916 ஆம் ஆண்டு இன்றைய திராவிட கட்சிகளுக்கு மூல கட்சியான நீதி கட்சி இங்குதான் தொடக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
இன்று தேசிய விண்வெளி தினம் : பிரதமர் மோடி வாழ்த்து..!
Victoria public hall

கிபி 1936 வரை இங்கு செயல்பட்ட சுகுணவிலாஸ் சபை அண்ணா சாலையில் தனது சொந்த இடத்திற்கு இடம்பெயர்ந்தது. கிபி 1935 இல் இங்கு சவுத் இந்தியன் அதலடிக் அசோசியேஷன் இயங்க தொடங்கியது. டேபிள் டென்னிஸ், செஸ் என பல்வேறு போட்டிகள் இங்கு நடக்கத் தொடங்கின.‌ இந்தியாவில் டேபிள் டென்னிஸ் அறிமுகம் இங்குதான் நடந்தது.

கிபி 1943இல் அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகம் இங்கு அரங்கேறிய போது தான், அதில் நடித்த எம்ஜிஆரின் நண்பர் டிவி நாராயண சுவாமி எம்ஜிஆரை அண்ணாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

கிபி 1950 களில் சினிமா பிரபலமடைந்த பொழுது, விக்டோரியா பொதுக் கூடத்தின் பயன்பாடு குறையத் தொடங்கியது. கிபி 1967 இல் விக்டோரியா பொதுக் கூடத்தினை நடத்தி வந்த அறக்கட்டளை அதனை இடித்து, திரையரங்கு கட்டுவதாக முடிவு எடுத்தபொழுது, அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணா உடனே அதனை நிறுத்தினார். மேலும் விக்டோரியா பொதுக் கூடத்தைப் புனரமைத்தார்.

விக்டோரியா பொதுக் கூடத்தின் 99 வருட குத்தகை ஏப்ரல் 30, 1985 இல் முடிவுக்கு வந்தபோது, அதனை சென்னை மாநகராட்சி தனது கைக்குள் கொண்டுவர முயற்சித்தது. ஆனால் வழக்குகள் காரணமாக இது 2010 ஆம் ஆண்டு தான் மாநகராட்சியின் கைக்கு வந்தது.

இதற்கு நடுவே கிபி 1993 ஆம் ஆண்டு சென்னையின் ஷெரிப்பாக இருந்த தொழிலதிபர் சுரேஷ் கிருஷ்ணா விக்டோரியா பொதுக் கூடத்தினைப் புனரமைத்தார். கிபி 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்திருக்க வேண்டிய விக்டோரியா பொதுக் கூடத்தின் புனரமைப்பு பணிகள், மெட்ரோ இரயில் பணிகளினால் தள்ளிப் போயின.

இதையும் படியுங்கள்:
இறந்த உடல் சொல்லும் ரகசியம்: போஸ்ட்மார்ட்டம் செய்யப்படுவதன் நோக்கங்கள்!
Victoria public hall

மெட்ரோ இரயில் பணிகள் முடிந்த பிறகு, விக்டோரியா பொதுக் கூடத்தின் புனரமைப்பு பணிகள் மறுபடி தொடங்கப்பட்டு, முடிக்கப்பட்டுவிட்டன. வெகு சீக்கிரத்தில், இது மக்கள் பயன்பாட்டுக்கு வருமெனத் தெரிகிறது. இங்கு அருங்காட்சியமும், நிகழ்ச்சிகள் அரங்கமும் இருக்குமெனத் தெரிகிறது.

விக்டோரியா பொதுக் கூடம் வெகுவிரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com