
ஒருசிலரின் இறப்புக்குப் பின்பு, அந்த உடல் பிணக்கூறு ஆய்வு செய்யப்படுவது ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா? பிணக்கூறு ஆய்வு (Autopsy) என்பது ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். இது மரணத்திற்கான காரணம், மரணமடைந்த முறை மற்றும் மரணமடைந்த விதத்தைத் தீர்மானிக்க, இறந்த உடலை முழுமையாகப் பரிசோதிப்பதை உள்ளடக்கியது. சில வேளைகளில், ஆராய்ச்சி அல்லது கல்வி நோக்கங்களுக்காக இருக்கக்கூடிய எந்தவொரு நோய் அல்லது காயத்தையும் மதிப்பிடுவதற்கு இறந்தவரின் உடல் பரிசோதனை செய்யப்படலாம். பிணக்கூறு ஆய்வு என்ற சொல் பொதுவாக மனிதரல்லாத விலங்குகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
பிணக்கூறு ஆய்வினை Autopsy, Post-mortem மற்றும் Necropsy என்று ஆங்கிலத்தில் மூன்று சொற்களால் குறிப்பிடுகின்றனர். பிணக்கூறு ஆய்வுக்கான, Autopsy என்ற சொல் பண்டைய கிரேக்க வார்த்தைகளான ஆட்டோப்சியாவிலிருந்து பெறப்பட்டது. கிரேக்கச் சொல்லான ஆட்டோப்சியாவில் ஆட்டோ என்பதற்கு, தன்னைத்தானே என்றும், ஆப்சிஸ் என்பதற்கு பார்வை என்றும் பொருள். இரு சொற்களும் இணைந்த ஆட்டோஸ்பை எனும் வார்த்தை 17ம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது.
பிணக்கூறு ஆய்வுக்கான ‘Post-mortem’ என்ற சொல் லத்தீன் வார்த்தைகளான போஸ்ட் , 'பிறகு' மற்றும் மோர்ட்டேஷன் ஆகிய சொற்களின் இணைப்பில் உருவானது. இந்தச் சொல் முதன் முதலில் 1734ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. மரண பரிசோதனை என்பதற்கான Necropsy என்ற சொல், கிரேக்கப் பயன்பாட்டிலான நெக்ரொஸ் (இறந்தவர்) மற்றும் ஆப்ஸிஸ் (பார்வை) என்று இரு சொற்கள் இணைவிலிருந்து பெறப்பட்டது.
பிணக்கூறு ஆய்வு என்பது பொதுவாக நோயியல் நிபுணர் எனப்படும் சிறப்பு மருத்துவரால் செய்யப்படுகின்றன. சில வேளைகளில், ஒரு சிறிய பகுதி இறப்புகளுக்கு மட்டுமே பிணக்கூறு பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். பெரும்பாலான வேளைகளில், ஒரு மருத்துவப் பரிசோதகர் அல்லது பிரேத பரிசோதனை அதிகாரி மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க முடியும். பிணக்கூறு ஆய்வு என்பது சட்டப்பூர்வ அல்லது மருத்துவ நோக்கங்களுக்காகச் செய்யப்படுகின்றன. குறிப்பாக,
* மரணத்தின் முறை தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில், மரணம் இயற்கையானதா அல்லது இயற்கைக்கு மாறானதா என்பதைத் தீர்மானிக்கவும், இறந்தவர் உடலில் காயத்தின் மூலம் அதன் பரப்பளவு காணவும் செய்யப்படுகிறது.
* இறந்தவரின் அடையாளத்தை தீர்மானிக்கச் செய்யப்படுகிறது.
* தொடர்புடைய உறுப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளச் செய்யப்படுகிறது.
* குழந்தையாக இருந்தால், நேரடிப் பிறப்பு மற்றும் உயிர் வாழ்வைத் தீர்மானிக்கச் செய்யப்படுகிறது.
மரணத்திற்கான காரணம் ஒரு குற்றவியல் செயலாக இருக்கும்போது தடயவியல் பிணக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதேவேளையில் மரணத்திற்கான மருத்துவக் காரணத்தைக் கண்டறிய மருத்துவ அல்லது கல்வித் தேவையாகவும், பிணக்கூறு ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், தெரியாத அல்லது நிச்சயமற்ற மரண நிகழ்வுகளில் அல்லது ஆராய்ச்சி நோக்கங்களுக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
வெளிப்புறச் சோதனை போதுமானதாக இருக்கும் வழக்குகள் மற்றும் உடல் துண்டிக்கப்பட்டு உள் பரிசோதனை நடத்தப்படும் வழக்குகள் என்று பிணக்கூறு ஆய்வுகளை மேலும் வகைப்படுத்தலாம். சில வேளைகளில் உள் பிணக்கூறு ஆய்வுக்கு நெருங்கிய உறவினர்களிடமிருந்து அனுமதி தேவைப்படலாம். உட்புறப் பிணக்கூறு ஆய்வு முடிந்ததும், உடல் மீண்டும் ஒன்றாகத் தைத்து கட்டமைக்கப்படுகிறது. பிணக்கூறு ஆய்வானது, நான்கு முக்கிய வகைகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
1. மருத்துவ - சட்ட அல்லது தடயவியல் அல்லது பிணக்கூறு ஆய்வு: மரணத்திற்கான காரணம் மற்றும் முறையைக் கண்டறியவும், இறந்தவரை அடையாளம் காணவும் முயல்கின்றன. வன்முறை, சந்தேகத்திற்கிடமான அல்லது திடீர் மரணங்கள், மருத்துவ உதவி இல்லாமல் இறப்புகள் அல்லது அறுவை சிகிச்சை முறைகளின்போது, பொருந்தக்கூடிய சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டபடி பொதுவாகச் செய்யப்படுகின்றன.
2. மருத்துவ அல்லது நோயியல் பிணக்கூறு ஆய்வுகள்: ஒரு குறிப்பிட்ட நோயைக் கண்டறிய அல்லது ஆராய்ச்சி நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றன. நோயாளியின் மரணத்திற்கு முன்பு தெரியாத அல்லது தெளிவற்றதாக இருந்த மருத்துவ நோயறிதல்களைத் தீர்மானிக்க, தெளிவுபடுத்த அல்லது உறுதிப்படுத்தலை நோக்கமாகக் கொண்டுள்ளன.
3. உடற்கூறியல் அல்லது கல்விசார் பிணக்கூறு ஆய்வுகள்: உடற்கூறியல் மாணவர்களின் படிப்பு நோக்கங்களுக்காக மட்டும் செய்யப்படுகின்றன.
4. மெய்நிகர் அல்லது மருத்துவ படிமத் தொழில்நுட்பப் பிணக்கூறு ஆய்வுகள்: காந்த அதிர்வு படிமத் தொழில்நுட்பம் (MRI) மற்றும் கணிப்பொறி பருவரைவு (CT) ஆகிய படிமத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன.