வெள்ள அபாய எச்சரிக்கையை உணர்த்திய சங்கு கல் மண்டபங்களின் அதிசயம்!

சங்கு கல் மண்டபம்
சங்கு கல் மண்டபம்
Published on

பெரிய ஆறு, குளம் மற்றும் ஏரிகளின் நடுவில் ஒரு மண்டபம் கட்டியிருப்பார்கள். எதற்காக அந்த மண்டபம் அங்கு கட்டப்பட்டிருக்கிறது என்று எப்போதாவது நாம் யோசித்திருக்கிறோமா? அதன் பின்னால் இருக்கும் அறிவியல் யுத்திகளை நாம் அறிந்து இருக்கிறோமா? எந்த விஞ்ஞான முன்னேற்றமும் இல்லாத அக்காலகட்டத்தில் நமது முன்னோர்கள் தங்களின் அறிவாற்றலை வைத்து செய்த இந்தச் செயல்பாடுகள் அனைத்துமே ஆச்சரியப்படும் வகையில்தான் உள்ளன.

வெள்ள அபாய எச்சரிக்கைகளை அறிவிப்பதற்காக, ஆற்றுக்கு நடுவே கட்டுப்படுவதுதான் இந்தச் சங்கு கல் மண்டபம். ஆறுகளுக்கு நடுவில் மாத்திரமல்ல, குளங்களுக்கு நடுவிலும் இபபடி ஒரு மண்டபம் கட்டப்பட்டு இருக்கும். இது மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர்பக்கம் மட்டும் கல் சுவராலும் கட்டப்பட்டு காட்சி தரும்.

நவீன காலத்தில் வெள்ள அபாய எச்சரிக்கைக்கான உபகரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், நம்முடைய முன்னோர்கள் காலத்தில் தாமிரபரணியில்தான் முதலில் இந்த அறிவியல் காரணத்தை உணர்ந்து பயனடையத் தொடங்கினார்கள். தாமிரபரணி ஆற்றின் நடுவே, பல சங்கு கல் மண்டபங்கள் இருந்துள்ளன. அவற்றின் பயன் அறியாமல், பராமரிக்காமல் இன்று எல்லாவற்றையும் இழந்து விட்டோம். இன்று பெயருக்கு ஒரு சங்கு கல் மண்டபமே அங்கு இருக்கிறது.

அந்த மண்டபத்தினுடைய உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பின் மீது, சங்கு போன்ற அமைப்பு ஒன்று உள்ளது. இதன் காரணமாகவே இந்தப் பெயர் கொண்டு இம்மண்டபத்தினை அழைக்கிறார்கள். ஆற்றில் வெள்ளம் வருகின்றபொழுது, இந்த மண்டபத்துக்குள் நீர் செல்லும்படியான அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
உடலுறுப்புகளைக் காக்கும் உன்னத உணவுகள்!
சங்கு கல் மண்டபம்

வெள்ளம் வருகின்றபொழுது, குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டும் உயர்ந்தால், வெள்ளத்தினுடைய சத்தத்தினால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு, அந்த சத்தம் மக்களைச் சென்றடையும். இதனை வெள்ள அபாய எச்சரிக்கையாக மக்கள் அறிந்து கொண்டு, மக்கள் மேடான இடங்களுக்குச் சென்று தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வார்கள். வெள்ளம் அதிகமாக அதிகமாக மண்டபத்தின் அமைப்பில் உள்ள சங்கு அமைப்பு நீரில் மூழ்க ஆரம்பிக்கும். பிறகு வெள்ளம் வடிய ஆரம்பித்ததும் சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும்.

நமது மூதாதையர்களின் அறிவாற்றலைப் பார்த்தீர்களா? எகிப்தில் பிரமிடை எப்படிக் கட்டினார்கள் என்று அவர்களை நினைத்து நாம் பெரிதாக வியக்கிறோம். தமது முன்னோர்களும் அறிவில் இலேசுப்பட்டவர்கள் அல்ல. இவர்களின் வியக்கத்தகு விஞ்ஞான அறிவுக்கு இது ஓர் உதாரணம் மட்டுமே! இயற்கையையும் தொழில்நுட்பத்தையும் இணைத்துப் பயன்படுத்திய நம் முன்னோர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com