உலகப் புகழ்பெற்ற மதுரை திருமலை நாயக்கர் மஹால்!

உலகப் புகழ்பெற்ற மதுரை திருமலை நாயக்கர் மஹால்!

துரை என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோயிலும் திருமலை நாயக்கர் மஹாலும்தான். மதுரை திருமலை நாயக்கர் மஹாலின் தூண்கள் மிகவும் புகழ் பெற்றவை. நாயக்க மன்னர்கள் தொடக்கத்தில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு மதுரை மாநகர் பகுதியை கி.பி.1545 முதல் கி.பி.1740 வரை ஆட்சி செய்து வந்தனர். முத்து கிருஷ்ணப்ப நாயக்க மன்னரின் மகன் முத்து வீரப்பர்.  இவருக்கு வாரிசு இல்லாத காரணத்தினால் இவருடைய இளைய சகோதரர் திருமலை நாயக்கர் மன்னராகத் தேர்வு செய்யப்பட்டார்.

திருமலை நாயக்கருக்கு மதுரையிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழ, தலைமையிடத்தை மதுரைக்கு மாற்றினார். கி.பி.1623 முதல் கி.பி.1659 வரை மதுரையை தலைநகராக்கிக் கொண்டு சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த திருமலை நாயக்கர், மதுரை நகரில் கலைநயமிக்க பல கட்டடங்களைக் கட்டினார். அப்படி இவர் கி.பி.17ம் நூற்றாண்டில் கி.பி.1629 முதல் 1636 வரை கட்டிய கட்டடமே திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் மதுரை அரண்மணை. இந்த மஹால் திருமலை நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது. இந்த மஹால் சுண்ணாம்பு, வெல்லம், கடுக்காய், நெல்லிக்காய் கலந்த கலவையில் கட்டப்பட்டது. இந்த அரண்மனையை திருமலை மன்னர் கட்டியபோது தற்போது உள்ள அரண்மனையை விட சுமார் நான்கு மடங்கு அளவிற்குப் பெரியதாக இருந்தது.

திருமலை நாயக்கர் மஹாலில் அமைக்கப்பட்டுள்ள தூண்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த மஹாலில் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணும் 48 அடி உயரமும் 12 அடி அகலமும் உடைய பிரம்மாண்டமான தூண்களாகும். இந்த அரண்மனையில் சொர்க்கவிலாசம், அரங்கவிலாசம் என இரண்டு முக்கிய பகுதிகள் இருந்தன. திருமலை நாயக்க மன்னர் சொர்க்கவிலாசத்திலும் அவருடைய தம்பி முத்தியாலு நாயக்கர் அரங்கவிலாசத்திலும் வாழ்ந்தனர். தற்போது எஞ்சியுள்ள பகுதி சொர்க்கவிலாசமாகும். இந்த அரண்மனையில் பதினெட்டு விதமான இசைக்கருவிகள் இசைக்கும் இடம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடகசாலை, உறவினர்களும் பணி செய்பவர்களும் வசிக்கும் இடம், வசந்தவாவி, மலர்வனங்கள் முதலானவை அமைந்திருந்தன.

திருமலை நாயக்க மன்னரின் பேரனான சொக்கநாத நாயக்கர் தலைமையிடத்தை மீண்டும் திருச்சிக்கு மாற்ற விரும்பி திருச்சியில் ஒரு அரண்மனையை உருவாக்க முடிவு செய்தார். மதுரை மஹாலின் ஒரு பகுதியை இடித்து அதில் இருந்த கலைநயமிக்க பல பொருட்களை திருச்சிக்கு எடுத்துச் சென்றார். ஆனால், பல்வேறு சூழ்நிலைகளால் சொக்கநாத நாயக்கரால் திருச்சியில் அரண்மனையைக் கட்ட முடியாமல்போனது. இதன் பின்னர் மதுரை திருமலை நாயக்கர் மஹால் மெல்ல மெல்ல சேதமடையத் தொடங்கியது. பழைய அரண்மனையில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பௌத்த கலாசாரத்தின் புகழ்பாடும் புண்ணிய பூமி சாரநாத்!
உலகப் புகழ்பெற்ற மதுரை திருமலை நாயக்கர் மஹால்!

பிரிட்டிஷ் ஆட்சியில் அப்போதைய சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த லார்டு நேப்பியர் என்பவர் இந்த அரண்மனையின் சிறப்பு கருதி இதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். சிதிலமடைந்த பகுதிகளை சரிசெய்து சீர்படுத்தினார். தற்போது உள்ள நுழைவாயில், பிரதான மையப்பகுதி, நடன அரங்கம் முதலானவற்றை உருவாக்கினார். சுதந்திரத்திற்குப் பின்னர் திருமலை நாயக்கர் மஹால் 1971ம் ஆண்டில் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மஹாலில் மாலை வேளைகளில் ஒலி ஒளிக் காட்சிகள் நடத்தப்பட்டு வருவது சிறப்பு.

மதுரை நாயக்கர் மஹாலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காணலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com